ஜனாதிபதி இணங்கினால் விநாயகமூர்த்தி முரளீதரனுக்கு அமைச்சுப் பொறுப்பு வழங்கப்படும்

அமைச்சர்களுக்கான செயலாளர்களில் விரைவில் மாற்றங்களை ஏற்படுத்த அரசாங்கம் தீர்மானித்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
பல்வேறு அமைச்சுக்களின் செயலாளர்களுக்கு வெற்றிடங்கள் தோன்றியிருப்பதால் அவற்றுக்குப் புதியவர்களை நியமிப்பதுடன், ஏனைய அமைச்சர்களின் செயலாளர்களிலும் மாற்றங்களை ஏற்படுத்தவிருப்பதாக உயர்மட்ட அரசாங்க அமைச்சர் ஒருவர் தெரிவித்தார்.

நீர்ப்பாசனம், விவசாய அபிவிருத்தி மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சு ஆகியவற்றில் பதில் செயலாளர்களே தற்பொழுது பணியாற்றி வருவதாக அந்த அமைச்சர் குறிப்பிட்டார்.

இந்த அமைச்சுக்களுக்கு மிக விரைவில் நிரந்தர செயலாளர்கள் நியமிக்கப்படுவார்கள் என அவர் கூறினார்.

அதேநேரம், வேறு சில அமைச்சுக்களின் செயலாளர்கள் இந்த மாதத்துடன் ஓய்வுபெறவிருப்பதால் அரசாங்கம் அமைச்சுக்களின் செயலாளர்களில் மாற்றங்களை ஏற்படுத்தவிருப்பதாக அந்த அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

ஜனாதிபதி இணங்கினால் கருணாவுக்கு அமைச்சு

இதேவேளை, அமைச்சரவையில் கிழக்கு மாகாணத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழர் ஒருவரை இணைத்துக்கொள்ளவேண்டுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

உள்விவகாரம் மற்றும் பொதுநிர்வாக அமைச்சராகவிருந்த கரு ஜெயசூரிய ஐ.தே.க.வுடன் இணைந்துகொண்டதையடுத்து ஏற்பட்ட வெற்றிடத்துக்கு வேறொருவரை நியமிக்கும் பட்சத்தில், கிழக்கு மாகாணத்தைப் பிரதிநிதித்துவப் படுத்தும் தமிழர் ஒருவரை அமைச்சரவையில் இணைத்துக்கொள்ளுமாறு கோரப்பட்டுள்ளது.

இந்தக் கோரிக்கையை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டால் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் தலைவர் கருணா என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளீதரனுக்கு அமைச்சுப் பொறுப்பு வழங்கப்படும் என அரசியல் வட்டாரங்களில் கூறப்படுகிறது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply