கொழும்பைக் கண்காணிக்க 28 கமராக்கள்
கொழும்பு நகரின் முக்கிய வீதிகள் மற்றும் கேந்திர நிலையங்களைக் கண்காணிக்க 28 பாதுகாப்புக் கமராக்கள் பொருத்தப்படவிருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொழும்பு நகரின் பாதுகாப்பைப் பலப்படுத்தும் ஒரு நடவடிக்கையாக 2009ஆம் ஆண்டு ஜனவரி முதல் பாதுகாப்புக் கமராக்களைப் பொருத்தும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் என இந்த நடவடிக்கைகக்குப் பொறுப்பாக நியமிக்கப்பட்டிருக்கும் பிரதிப் பொலிஸ்மா அதிபர் சந்தன விக்ரமரட்ண கூறினார்.
கண்காணிப்புச் செயற்பாடுகளுக்காகப் பொருத்தப்படவிருக்கும் கமராக்கள் மற்றும் ஏனைய இலத்திரனியல் உபகரணங்கள் ஏற்கனவே ஜப்பானிலிருந்து கொள்வனவு செய்யப்பட்டிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
கொழும்பு நகரின் அனைத்து வீதிகள் மற்றும் முக்கிய இடங்களைக் கண்காணிக்கும் நோக்கில் 28 கமராக்கள் பொருத்தப்படவிருப்பதாக விக்ரமரட்ண மேலும் தெரிவித்தார்.
இந்தக் கமராக்களைக் கண்காணிப்பதற்குத் விசேட கணினிமயப்படுத்தப்பட்ட நிலையமொன்று அமைக்கப்படவிருப்பதுடன், அங்கு கமராக்கள்மூலம் பிடிக்கப்படும் காட்சிகள் பதிவுசெய்யப்பட்டு சேகரிக்கப்படும் எனக் கூறப்படுகிறது.
கொழும்பு நகரில் பாதுகாப்புக் கமராக்களைப் பொருத்தும் திட்டம் முன்னாள் பொலிஸ்மா அதிபர் சந்திரா பெர்னான்டோவின் பதவிக்காலத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டிருந்தது.
விடுதலைப் புலிகளுடன் தொடர்பு: மூன்று பொலிஸார் கைது
இதேவேளை, விடுதலைப் புலிகள் அமைப்புடன் தொடர்பு வைத்திருந்தார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் மேல்மாகாணத்தின் விசேட பொலிஸ் குழுவின் பொறுப்பதிகாரி மற்றும் இரண்டு கான்ஸ்டபிள்கள் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டனர்.
கைதுசெய்யப்பட்ட பொலிஸ் பொறுப்பதிகாரியும் மற்றுமொரு கான்ஸ்டபிளும் சிங்களவர்கள் எனவும், மற்றைய பொலிஸ் கான்ஸ்டபிள் தமிழர் எனவும், இவர்களின் கைதைத் தொடர்ந்து மேலும் 6 பேர் கைதுசெய்யப்பட்டதாகவும் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட பொலிஸ் அதிகாரிகள் மேல்மாகாணத்தில் நடந்த பல்வேறு கடத்தல்கள், கொள்ளைகள், வாகனக் கடத்தல்கள் போன்றவற்றுடன் தொடர்புபட்டவர்கள் எனவும், அவர்கள் விடுதலைப் புலிகளுடன் தொடர்புகளைப் பேணி வந்ததாகவும் கூறப்படுகிறது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply