தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் சீமான்

தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நாம் தமிழர் இயக்கத்தின் தலைவர் சீமான் கைது செய்யப்பட்டுள்ளார்.ஈழத் தமிழர்கள் படுகொலையைக் கண்டித்தும், தமிழக மீனவர்கள் தொடர்ந்து இலங்கை கடற்படையினரால் கொல்லப்படுவதைக் கண்டித்தும் நாம் தமிழர் இயக்கம் சார்பில் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் வன்முறை மற்றும் பிரிவினையை தூண்டும் விதத்தில் பேசியதாக சீமான் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்தவுடன் சீமான் தலைமறைவானார்.
இந்நிலையில் கடந்த 12ஆம் தேதி, சென்னை பிரஸ் கிளப்பில் செய்தியாளர்களை சந்திப்பதற்காக வந்த சீமானை, போலீசார் கைது செய்தனர். பின்னர் ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சீமானை ஜூலை 23ஆம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

நீதிமன்ற உத்தரவின் பேரில் சென்னை புழல் சிறைக்கு அழைத்துச்செல்லப்பட்ட சீமான், அங்கிருந்து வேலூர் சிறைக்கு மாற்றப்பட்டார். நிர்வாக வசதிக்காக சீமானை வேலூர் சிறைக்கு மாற்றியதாக சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் இன்று காலை சென்னை சிட்டி போலீசார், தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதாக சீமானிடம் தெரிவித்துள்ளனர். மேலும் அதற்கான ஆணையின் நகலையும் சீமானிடம் வழங்கினர். கடந்த வருடம் சீமான் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் மீண்டும் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply