இந்தியா இலங்கைக்கு அளித்த நிதியை கண்காணிக்க குழு

இலங்கைத் தமிழர்களின் மறுவாழ்வுக்காக இந்திய அரசு அளித்த நிதி முறையாகச் செலவிடப்படுகிறதா என்பதை அறிய அதிகாரிகள் குழு அங்கு பயணம் மேற்கொள்ள உள்ளது. இந்தத் தகவலை ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக் கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தின் மழைக் கால கூட்டத் தொடர் திங்கள்கிழமை தொடங்க உள்ளது. இதையொட்டி, ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களுடன் காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி திங்கள்கிழமை ஆலோசனை மேற்கொண்டார்.

கூட்டத்தில் பிரதமர் மன்மோகன் சிங், மத்திய அமைச்சர்கள் பிரணாப் முகர்ஜி, ப.சிதம்பரம், தி.மு.க. நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் டி.ஆர்.பாலு பேசியதாவது, இலங்கையில் இடம்பெயர்ந்து வாழும் தமிழர்களை உடனடியாக அவர்களது சொந்த இடங்களில் குடியமர்த்தும் பணியை விரைவாக கால தாமதம் இன்றி நிறைவேற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இலங்கைத் தமிழர்களின் மறு குடியேற்றத்துக்காக அவர்களுக்கு வீடு கட்டித் தரவும் பல்வேறு அடிப்படை வசதிகளை ஏற்படுத்தவும் மத்திய அரசு மூலம் ரூ.500 கோடி அளித்ததுடன், 50 ஆயிரம் வீடுகள் கட்டித் தரவும் மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டது.

இந்திய அரசால் வழங்கப்பட்ட இந்தத் தொகை எந்த அளவுக்கு முறையாக செலவழிக்கப்படுகிறது என்பதைத் தெரிந்து கொள்ள முடியவில்லை. இலங்கையில் மறுவாழ்வுப் பணிகளையும், பாதிக்கப்பட்ட இடங்களில் உள்ள உண்மையான நிலைமையைக் கண்டறியவும் தூதரகம் மூலமாகவோ அல்லது சிறப்புத் தூதரை அனுப்புவதன் மூலமாகவோ நடவடிக்கை மேற்கொள்ளலாம் என்று முதல்வர் கருணாநிதி ஆலோசனை கூறியிருந்தார்.

இதை உடனடியாக செயல்படுத்த தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று டி.ஆர்.பாலு கூறியிருந்தார். இதற்கு பதிலளித்து பிரதமர் மன்மோகன் சிங் பேசியதாவது,

இலங்கைத் தமிழர்களின் மறுவாழ்வுக்காக வழங்கப்பட்ட நிதி முறையாக செலவிடப்படுகிறதா என்பதை அறிந்திட, அதிகாரிகள் குழு நியமிக்கப்படும். இந்தக் குழுவை அங்கு அனுப்புவதற்கு முறைப்படியான அனுமதி பெற நடவடிக்கை எடுக்கப்படும் என்று மன்மோகன் சிங் தெரிவித்தார்.

இலங்கையில் போர் முடிந்து ஓராண்டுக்கு மேல் ஆகியும் இன்னமும் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள், அடிப்படை வசதிகள் அற்ற இடைக்கால முகாம்களிலேயே வசிப்பதாக கூறப்படுகிறது. அத்துடன் தமிழர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் வடக்குப் பகுதியில் சிங்களர் குடியேற்றத்தை விரைவுபடுத்தவும் மகிந்த ராஜபட்ச அரசு திட்டமிட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தமிழர் பகுதியில் மீன் பிடிக்கும் உரிமையையும் சீனாவுக்கு இலங்கை தாரை வார்த்துள்ளது. இலங்கைக்கு உதவி செய்கிறோம் என்ற போர்வையில் சீனா ஆழமாக காலூன்றி வருகிறது. இது எதிர்காலத்தில் இந்தியாவுக்கு பேராபத்தாக முடிய வாய்ப்புள்ளது.

இந்நிலையில், இந்த மாதத் தொடக்கத்தில் பிரதமர் மன்மோகன் சிங், முக்கியமான மத்திய அமைச்சர்களை சந்தித்த இலங்கை தமிழ் எம்.பி.க்கள் குழு இந்தியா தலையிட்டால்தான் தமிழர் பிரச்னைக்குத் தீர்வு காண முடியும் என வலியுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply