மாணவர் மரணம்; பொலிஸுக்குத் தொடர்பில்லை:பொலிஸ் மா அதிபர்
ருகுணு பல்கலைக்கழக மாணவன் சுசந்த அருண பண்டாரவின் மரணத்திற்கும் பொலிஸாருக்கும் எந்தவிதத் தொடர்புமில்லை என பொலிஸ் மா அதிபர் மஹிந்த பாலசூரிய தெரிவித்துள்ளார். குறித்த மாணவனின் மூளையின் இரத்த நாளத்தில் ஏற்பட்ட அசாதாரண நிலைமையே அவன் மரணத்துக்கு காரணம் எனவும் எனவே, பொதுமக்கள் வீண்பதற்றமடைய தேவையில்லை எனவும் அவர் தெரிவித்தார். நேற்று மாலை பொலிஸ் தலைமையகத்தில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டின் போதே பொலிஸ் மா அதிபர் இதனைத் தெரிவித்தார். அங்கு அவர் மேலும் கூறியதாவது:
“கடந்த மாதம் 16ஆம் திகதி ருகுணு பல்கலைக்கழக மாணவர் குழுக்களுக்கு இடையில் கைகலப்பு ஏற்பட்டது. அத்தோடு பல்கலைக்கழக உபவேந்தரும் பல்கலைக்கழகத்திலிருந்து வெளியேற முடியாத நிலைமை உருவானது.
அதனை தொடர்ந்து அங்கு சென்ற பொலிஸார் நிலைமையை கட்டுப்பாட்டிற்கு கொண்டுவந்து பல்கலைக்கழக உப வேந்தரை பாதுகாப்பாக வெளியேற்றினர்.
அதற்குப் பிறகு ருகுணு பல்கலைக்கழகம் தற்காலிகமாக மூடப்பட்டது. அதேவேளை, மாணவர்கள் மோதிக்கொண்டதால் காயமுற்ற சிலர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுச் சென்றுள்ளனர். அதேபோன்றே குறித்த மாணவரும் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
புத்தள பகுதியைச் சேர்ந்த இந்த மாணவர் சிகிச்சை பலனின்றியே மரணமடைந்துள்ளார்.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து ஒரு குழப்பகரமான நிலைமை ஏற்பட்டுள்ளது. இவரின் மரணம் பொலிஸாரின் தாக்குதலால் சம்பவித்திருக்கலாம் என்ற வதந்தியே இதற்குக் காரணம்.
பல்கலைக்கழகத்தில் மோதல் சம்பவம் இடம்பெற்று ஒரு மாதம் கடந்த பின்னரே இவர் மரணமடைந்துள்ளார். இதனை அரசியல் சுயலாபம் கருதி சிலர் வேறுவிதமாக திரிபுபடுத்தி, பல்கலைக்கழக மாணவர்களைத் தூண்டிவிட முயற்சிக்கிறார்கள். இந்த சதிவலையில் மக்கள் சிக்கிவிடக் கூடாது.”
இவ்வாறு பொலிஸ் மா அதிபர் தெரிவித்தார்.
ஆர்ப்பாட்டம்
ருகுணு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சுமார் 2000 மாணவ, மாணவிகள் பொலிசாருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர்.
இந்த ஆர்ப்பாட்டம் நேற்று வெள்ளிக்கிழமை பகல் 10.00 மணிக்கு மாத்தறை ருகுணு பல்கலைக்கழகத்தில் இருந்து ஆரம்பமானது.
மாணவர்கள் சுலோகங்களை ஏந்திய வண்ணம் பொலிஸ் நிலையத்தை முற்றுகையிடச் சென்ற போது ஆயுதம் தரித்த கலகம் அடக்கும் பொலிசாரும் இராணுவத்தினரும் அவர்களைத் தடுத்து நிறுத்தினர்.
மாத்தறை பஸ் நிலையத்தில் மாணவர்கள் 11.00 மணியிலிருந்து 12.00 மணி வரை வீதியின் நடுவில் அமர்ந்து கொண்டு சத்தியாக்கிரகத்தை மேற்கொண்டனர்.
இதனால் ஒரு மணி நேரம் மாத்தறைக்கான சகல போக்குவரத்து ஸ்தம்பித நிலையை அடைந்தது. 12.30 மணியளவில் மாணவர்கள் கலைந்து சென்றனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply