கே. பி. உட்பட புலம்பெயர் தமிழர்கள் வடக்கு அபிவிருத்திக்கு உதவ முன்வருகை
கே. பி. எனப்படும் குமரன் பத்மநாதன் அடங்கலான பல புலம்பெயர் தமிழர்கள் வடபகுதி அபிவிருத்திக்கு உதவ முன்வந்துள்ளனர். நாட்டின் அழிவுக்காக பயன்படுத்தப்பட்டவர்களை நாட்டின் நலனுக்காக பாதிப்பில்லாதவாறு பயன்படுத்த தயாராக உள்ளோம். இலங்கை சட்டத்தின் பிரகாரம் கே. பி. அரச சாட்சியாக மாறும் சாத்தியம் உள்ளதோடு அவருக்கு பொது மன்னிப்பு வழங்கவும் முடியும் என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல கூறினார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக மாநாடு நேற்று அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது. ஆங்கிலத் தினசரி ஒன்றுக்குக் கே. பி. வழங்கியுள்ள பேட்டி குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர் : வடக்கு, கிழக்கு அபிவிருத்திக்கு உதவுமாறு புலம்பெயர் தமிழர்களுக்கு அரசாங்கம் அழைப்பு விடுத்துள்ளது. யுத்தத்தினால் அனைத்தையும் இழந்த மக்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்துவதற்காக அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதற்கு ஒத்துழைப்பு வழங்க பல புலம்பெயர் தமிழர்கள் முன்வந்துள்ளனர். புலிகளின் அழுத்தம் காரணமாகவே அதிகமான புலம்பெயர் தமிழர்கள் அவர்களுக்கு ஆதரவு வழங்கினர். அனைத்து புலம்பெயர் தமிழர்களும் அரசாங்கத்துக்கு எதிரானவர்களல்ல.
புலிகளின் நிதி விவகாரங்களுக்குப் பொறுப்பாக இருந்த கே. பி. புலம்பெயர் தமிழர்களினூடாக பணம் திரட்டவும் புலிகளுக்கு கப்பல்கள், ஆயுதங்கள் என்பன கொள்வனவு செய்யவும் முன்னின்று செயற்பட்டார். ஆனால், தற்பொழுது புலம்பெயர் தமிழர்களை நாட்டின் அபிவிருத்திக்காக பயன்படுத்தவும் வடக்கு, கிழக்கு அபிவிருத்திக்கு அதிக பங்காற்றவும் கே. பி. முன்வந்துள்ளார்.
பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டு வடக்கு, கிழக்கு மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆனால், இன்று அழிவுக்கு ஒத்துழைத்தவர்களை அபிவிருத்திக்காகப் பயன்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
கே. பியை அரச சாட்சியாகப் பயன்படுத்துவது குறித்து நீதிமன்றமே முடிவுசெய்ய வேண்டும். அவருக்கு எதிரான பல குற்றச்சாட்டுகள் உள்ளன. இந்த விடயத்தில் நாட்டின் நலனுக்காக பிரதான சட்டங்களுக்கும் நாட்டின் இறைமைக்கும் பாதிப்பில்லாதவாறு அரசாங்கம் செயற்படத் தயாராக உள்ளது என்றார்.
இதேவேளை, இந்தியப் பிரதமரின் விசேட பிரதிநிதி ஒருவர் இலங்கை வர இருப்பது குறித்து கருத்துத் தெரிவித்த அமைச்சர் : இந்தியாவுக்கும் இலங்கைக்குமிடையில் நெருக்கமான உறவு காணப்படுகிறது. இந்தியா தான் எமது நெருங்கிய நட்பு நாடாகும். பிரதமரின் விசேட பிரதிநிதி ஒருவர் இலங்கை வருவது தொடர்பில் எமக்கு எதுவித ஆட்சேபனையும் கிடையாது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இந்திய விஜயத்தின் போது அவர் தமிழக எம்.பி.களை சந்தித்தார். இலங்கைக்கு நேரடியாக வந்து உண்மை நிலையை அறியுமாறு ஜனாதிபதி அவர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தார் என்றார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply