இலங்கைத் தமிழ் அகதிகள் கப்பல் கனடா எல்லையில்

இலங்கை அகதிகள் 500 பேரை ஏற்றி கொண்டு வருவதாக சந்தேகிக்கப்படும் ஒரு சரக்கு கப்பல் தமது நாட்டின் பசிபிக் கடற்பகுதியை நெருங்கி வருவதாக கனடா நாட்டின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.அந்தக் கப்பலை தாங்கள் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், அது தமது எல்லையை நெருங்கும் போது தடுக்கப்படும் எனவும் கனடாவின் அதிகாரிகள் கூறுகிறார்கள்.

அந்தக் கப்பல் சட்டவிரோதமாக ஆட்களை கொண்டு வருவதில் தொடர்பு பட்டிருக்கலாம் என தாங்கள் கருதுவதாகவும் அப்படியானவர்களுக்கு கனடா ஒரு இலக்காகி வருகிறது என்கிற கவலையும் தமக்கு அதிகரித்து வருகின்றது எனவும் அந்நாட்டின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

எம் வி சன் சீ எனும் பெயர் கொண்ட அந்தக் கப்பல் தாய்லாந்திலிருந்து கனடா நோக்கி பசிபிக் கடலில் பயணத்தை மெதுவாக தொடங்க ஆரம்பித்திலிருதே அதை தாங்கள் கண்காணித்து வருவதாகவும் கனடிய அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர்.

இக்கப்பல் கனடாவின் விக்டோரியா துறைமுகத்தை வியாழக்கிழமை இரவோ அல்லது வெள்ளிக்கிழமை அதிகாலையோ வந்தடையக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அக்கப்பலில் இருக்கக் கூடிய நூற்றுக்கணக்கான அகதிகளின் வேண்டுகோள்களை பரிசீலனை செய்ய குடிவரவு அதிகாரிகள் தயாராகி வருகிறார்கள். அநேகமாக அவர்கள் வான்கூவர் நகருக்கு அருகில் இருக்கும் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்படலாம் எனத் தெரிகிறது.

கப்பலில் இருக்கும் அகதிகளில் பலர் உடல் நலக் குறைவுடன் இருப்பதாகக் கருதப்படுகிறது. அவர்கள் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்படலாம் எனவும் தெரிகிறது.

ஆனால் இந்தக் கப்பலில் இருக்கும் சில பயணிகளோ அல்லது பணியாளர்களோ விடுதலைப் புலிகளாக இருக்கலாம் என தாங்கள் சந்தேகிப்பதாகக் கூறும் கனேடிய அரசு, நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுதல் எனக் கருதப்படும் எவரும் திருப்பி அனுப்பப்படுவர் எனக் கூறியுள்ளது.

விடுதலைப் புலிகள் அமைப்பை பயங்கரவாத அமைப்பு என்று கூறி அதை கனடா தடை செய்துள்ளது. இந்தப் பயணத்தை ஆட்களை கடத்தும் நபர்களே ஏற்பாடு செய்துள்ளனர் எனவும், அதற்கு காரணமாவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் எனவும் கனடா உறுதியளித்துள்ளது.

அகதிகளாக வருபவர்களை சாதகமாக பார்க்கும் ஒரு நிலை கனடாவில் இருப்பதால், அந்நாடு ஆட்களை கடத்துபவர்களுக்கு ஒரு சுலபமான இலக்காக அமைகிறது என்று அந்நாட்டின் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். இனி வரும் காலங்களில் இப்படியான கப்பல்கள் தமது நாட்டு எல்லையை வந்தடைவதை தவிர்க்கும் நடவடிக்கைகள் குறித்து தாங்கள் தீவிரமாக அராய்ந்து வருவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply