காணாமல் போனவர் கடத்தப்பட்டிருக்கலாம் : தமவிபு சந்தேகம்
மர்மமான முறையில் காணாமல் போயுள்ள தமது கட்சி மட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினர் பிரகாசம் சகாயமணி கடத்தப்பட்டிருக்கலாம் என தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். மூன்று தினங்களுக்குள் விடுதலை செய்யாத பட்சத்தில், அவரை விடுதலை செய்யக் கோரி மட்டக்களப்பு மாவட்டம் எங்கும் வெகுஜன போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் என்று அக்கட்சி தெரிவித்துள்ளது.
தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளின் மத்திய செயற்குழு சார்பாக அக்கட்சியின் செயலாளர் எட்வின் சில்வா கைலேஸ்வரராஜா விடுத்துள்ள் அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
“கடந்த சனிக்கிழமை இரவு முதல் குறித்த உறுப்பினர் காணாமல் போன சம்பவமானது சமாதானத்தின் மீது நம்பிக்கை வைத்துள்ள தமிழ் மக்கள் மத்தியில் ஆச்சரியத்தையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. மனிதாபிமானமற்ற ஜனநாயக விரோத செயலாகவும் இது அமைகின்றது. அத்துடன் மக்கள் மத்தியில் அச்சத்தையும் பதட்டத்தையும் இச்சம்பவம் ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் காணாமல் போயுள்ள மாநகர சபை உறுப்பினரைக் கடத்தியவர்கள் உடனடியாக அவரை விடுதலை செய்து மட்டக்களப்பு மாநகரில் சுமுக சூழ்நிலையைத் தோற்றுவிக்க வேண்டும்.”
இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேவேளை, காணாமல் போன மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினர் பி.சகாயமணியைத் தேடும் பணிகளை மட்டக்ககப்பு பொலிசார் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.
இன்று காலை இவரது மனைவியை மட்டக்களப்பு பொலிசார், பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று மேலதிக தகவல்களைப் பெற்றதுடன் சகாயமனியுடன் தொடப்புடைய இடங்களுக்கும் மனைவியை அழைத்தச்சென்றனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply