பயங்கரவாத ஏற்றுமதியில் அமெரிக்கா முன்னணியில்!

உலகம் முழுவதும் பயங்கரவாதத்தை ஏற்றுமதி செய்வதில் அமெரிக்காவே முன்னணி வகிக்கின்றது. விக்கிலீக் அண்மையில் வெளியிட்ட சி.ஐ.ஏ. ரகசிய ஆவணங்களில் இருந்தே இந்த உண்மைகள் அம்பலத்திற்கு வந்துள்ளன. (விக்கிலீக் தளத்தில் அந்த ஆவணங்களை தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.) வெளிநாடுகளில் பயங்கரவாத செயல்களில் ஈடுபடுவதற்கு, அந்தந்த நாடுகளை பூர்வீகமாகக் கொண்ட அமெரிக்க பிரஜைகளே அனுப்பப்படுகின்றனர். இது இஸ்லாமிய நாடுகளுக்கு மட்டும் பொதுவான அம்சம் அல்ல, ஆசிய, ஆப்பிரிக்க, லத்தீன் அமெரிக்க நாடுகளில் மட்டுமல்ல, ஐரோப்பாவில் கூட அமெரிக்கா அனுப்பி வைத்த பயங்கரவாதிகள் ஊடுருவியுள்ளனர். உதாரணத்திற்கு சில:

– ஐந்து அமெரிக்க முஸ்லிம்கள், தாலிபானில் சேருவதற்காக பாகிஸ்தான் சென்றுள்ளனர். சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட பின்னர் அவர்கள் சி.ஐ.ஏ. உளவாளிகள் என தெரிய வந்தது.

– 1994 ம் ஆண்டு, நியூ யோர்க்கை சேர்ந்த அமெரிக்க யூத டாக்டர் இஸ்ரேலுக்கு Baruch Goldstein சென்று காஹ் அமைப்பில் இணைந்தார். அங்கே தொழுகையில் ஈடுபட்ட 29 பாலஸ்தீனர்களை சுட்டுக் கொன்றார்.

– ஐரிஷ் அமெரிக்கர்கள் IRA க்கு நிதியுதவி வழங்கியதுடன், பிரிட்டனில் பயங்கரவாத செயல்களிலும் ஈடுபட்டுள்ளனர்.

– சுவாரஸ்யமாக, இந்தியாவில் மும்பையில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலிலும் சி.ஐ.ஏ. பங்கெடுத்துள்ளது. David Headley என்ற அமெரிக்க பாகிஸ்தானி நபர் தாக்குதலுக்கு உதவியதை ஒப்புக் கொண்டுள்ளார். அந்த நபர் போதைவஸ்து கடத்தலில் ஈடுபட்டு பின்னர், அமெரிக்க போதைவஸ்து தடுப்பு பணியகத்தில் வேலை செய்தவர். பாகிஸ்தானிலும், அமெரிக்காவிலும் இரட்டை உளவாளியாக செயற்படுகிறார். இது போன்ற தகவல்கள் ஏற்கனவே பத்திரிகைகளில் வெளியாகியுள்ளன. (பார்க்க:Mumbai terror suspect David Headley was ‘rogue US secret agent’)

அமெரிக்கா பயங்கரவாதிகளை உருவாக்குவதும், ஏற்றுமதி செய்வதும் புதினமல்ல. அது அமெரிக்காவின் வெளிநாட்டுக் கொள்கைகளில் ஒன்று. ஐம்பதுகளில் ஐரோப்பிய நாடுகளில் Gladio என்ற ரகசிய பயங்கரவாத இயக்கங்கள் அமைக்கப்பட்டன. ஒரு வேளை சோவியத் யூனியன் படையெடுத்தால், விடுதலைப் போராட்டம் என்ற பெயரில் பயங்கரவாத தாக்குதல்களில் ஈடுபடுவது அந்த ரகசியக் குழுக்களின் வேலை. ஆனால் எதிர்பார்த்த சோவியத் படையெடுப்பு ஒரு நாளும் வரவில்லை. மாறாக ரகசிய பயங்கரவாத குழுக்கள் தமது நாடுகளிலேயே மக்கள் விரோத செயல்களில் ஈடுபட்டுள்ளனர். உதாரணத்திற்கு சில:

– 1960 ம் ஆண்டு, துருக்கியில் ஏற்பட்ட சதிப்புரட்சியில் பங்கெடுத்தது மட்டுமல்லாது, பிரதமரை கொலை செய்துள்ளனர்.

– 1967 ல், கிரீசில் சதிப்புரட்சி செய்து இராணுவ அரசை நிறுவியது.

– 1971 ல், மீண்டும் ஒரு முறை துருக்கியில் சதிப்புரட்சியில் பங்கெடுப்பு. தொடர்ந்த சர்வாதிகார ஆட்சியில் Gladio பயங்கரவாதிகள், நூற்றுக்கணக்கான அப்பாவி மக்களை கொலை செய்தனர்.

– 1977 ல் இடம்பெற்ற மாட்ரிட் படுகொலை, 1985 ல், பெல்ஜியத்தில் இடம்பெற்ற சூப்பர் மார்க்கட் படுகொலை… இவ்வாறு தமது சொந்த மக்கள் மீதே பயங்கரவாதத்தை கட்டவிழ்த்து விட்டது.

– 1990 ம் ஆண்டு, சுவிட்சர்லாந்தை சேர்ந்த முன்னாள் Gladio தலைவர் அனைத்து இரகசியங்களையும் வெளியிடப் போவதாக தெரிவித்தார். மறு நாள் அவர் வீட்டில் வைத்து மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டார்.

மேலதிக விபரங்களுக்கு…
Gladio Terrorism
European Parliament resolution on Gladio

கலையரசன் (கலையகம்)

மூலம்/ஆக்கம் : இணையத்தள கட்டுரை


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply