வடபகுதியில் உயிர் இரசாயனத்துறை அபாரவெற்றி; முழு நாட்டின் நலனுக்கும் பயன்படுத்தக் கோருகிறார் பேராசிரியர் நவரட்ணம்

வட மாகாணத்தில் மூன்று தசாப்த காலமாக யுத்தமும் இடம்பெயர்வுகளும் இடம்பெற்ற போதிலும் உயிர் இரசாயனவியல் துறை (Biochemistry) தொடர்பான ஆராய்ச்சி தங்குதடையின்றி முன்னெடுக்கப்பட்டு வந்துள்ளதாக உயிர் இரசாயனவியல்துறை பேராசிரியரான பொன்னுச்சாமி நவரட்ணம் தெரிவித்தார்.

“சாவகச்சேரி, அல்லாரையில் பனங்கள்ளை பியராக மாற்றும் முயற்சியில் வெற்றி கண்டோம். கண்டாவளையில் பதநீரை போத்தலில் அடைக்கும் முயற்சியில் வெற்றி கிட்டியது.

யாழ்ப்பாணம் திராட்சையில் இருந்து தரமான ‘வைன்’ தயாரிக்க முடிந்தது. இவையெல் லாம் உயிர் இரசாயனவியல் துறையில் மேற்கொண்ட ஆராய்ச்சியில் கிடைத்த வெற்றிகளாகும்” எனவும் பேராசிரியர் பொன்னுச்சாமி நவரட்ணம் விபரித்தார்.

யாழ். பல்கலைக்கழகத்தில் கலாநிதிப் பட்டம் பெற்றிருந்த பொன்னுச்சாமி நவரட்ணம் உயிர் இரசாயனத் துறையில் மேற்கொண்ட ஆராய்ச்சிகளுக்காகவும் அத்துறையில் ஈட்டிய வெற்றிகளுக்காகவும் ஸ்பெயின் நாட்டில் உள்ள திரித்துவ பல்கலைக்கழகத்தினால் பேராசிரியர் பட்டம் வழங்கி கெளரவிக்கப்பட்டவராவார்.

பேராசிரியர் பொன். நவரட்ணம் இது குறித்து மேலும் விளக்கியதாவது,

“இலைக்கள் எனும் கூட்டு அங்கி மூலம் அமிலேசு நொதியத்தைப் பெறும் முறையை யாழ்ப்பாணத்தில் நான் அறிமுகப்படுத்தினேன். இந்நொதியமானது மாப்பொருளை மோல்ரோசு வரை உடைக்க வல்லது. இந்நொதியம் தானியங்களில் இருந்து மோல்ரோசுவை தரக் கூடியது. அதிலிருந்து குளுக்கோசு பெற முடியும். இந்நொதியம் தன்னுடன் மதுவத் தாக்கத்தை ஏற்படுத்த வல்லதென்பதால் வைன், பியர் தயாரிப்பதிலும் உதவியது.

இவ்வாறு உயிர் இராசாயனவியல் துறையில் பல்வேறு ஆராய்ச்சிகள் வட பகுதியில் கடந்த காலங்களில் மேற்கொள்ள ப்பட்டன. எனினும் கண்டுபிடிப்புக்களை ‘நிலைத்திருக்கக்கூடிய’ அபிவிருத்திக்குப் பயன்படுத்த முடியாமல் போனது.

தற்போது அமைதி நிலவுகிறது. பல்வேறு அபிவிருத்திகளும் கண்டுபிடிப்புகளும் ஏற்படுவதற்கு வாய்ப்புக்கள் அதிகமாக உள்ளன.

சிலாஸ் (Silaas) எனப்படும் இலங்கை விஞ்ஞான முன்னேற்றச் சங்கத்தின் மாநாட்டின்போது, யாழ் மண்ணில் கவனிப்பாரற்றுக் கிடக்கும் பனம் பழங்களில் உள்ள நுண்ணங்கிகளின் நொதியச் செயற்பாட்டினால் தோன்றும் துர்நாற்றம் வளியை மாசடையச் செய்வதாகவும் பலவகை சேதன அமிலங்கள் மண்ணை மாசடையச் செய்வதாகவும் தெரிவிக்கப்பட்டது. இக்கழிவுகள் நீருடன் கரைந்து நீர் நிலைகளை மாசடையச் செய்வதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இம் மாசடைதலைத் தடுப்பதாயின் பழங்களில் உள்ள வெல்லத்தை நீர்க்கரைசலாக பிரிக்க வேண்டுமென்ற யோசனையை முன்வைத்தோம்.

மேற்படி நீர்க்கரைசல் பிரித்தெடுக்கப்பட்ட பின்னர் கிடைக்கும் திண்ம மீதியை உலரவைத்து தூளாக்கி வில்லையாகவோ அல்லது உறையுள்ளடக்கியோ நோயாளிக்கு கொடுக்கும்போது அதிலுள்ள கரையும் நார்களினால் குருதியின் கொலஸ்ரோல், வெல்லம் (சீனி) ஆகியன குறையும்.

மேற்படி தொழிற்பாட்டை விளக்கிய மைக்காக சிலாஸ தலைவர் கலாநிதி டபிள்யூ. எல். சுமதிபாலவினால் ‘தேசிய விருது’ வழங்கி கெளரவிக்கப் பட்டுள்ளது.இவ்வாறு நமது வளத்தை- நமது தொழில் நுட்பத்தை முழுமையாகப் பயன்படுத்தினால் எமது நாடும், எமது பிரதேசமும் வளர்ச்சியடையும். இவ்வாறு பேராசிரியர் பொன். நவரட்ணம் தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply