மட்டக்களப்பு மாவட்டமே இருள் சூழ்ந்த மாவட்டம்: கிழக்கு முதல்வர்
இலங்கையில் 18 மாநகரங்கள் இருக்கின்ற போதிலும் மட்டக்களப்பு மாவட்டமே இருள் சூழ்ந்த நிலையில் மிக மோசமான மாநகரமாக காணப்படுவதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திகாந்தன் தெரிவித்தார்.
இன்று திங்கட்கிழமை காலை மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற சீன அரசாங்கத்தின் உதவியுடன் மட்டக்களப்பில் மேற்கொள்ளப்படவுள்ள மின்விநியோகம் தொடர்பிலான கலந்துரையாடலில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனை தெரிவித்தார்.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய முதலமைச்சர்,
மிக நீண்டகாலமாக நட்டத்தில் இயங்கிய மின்சாரசபை இன்றுதான் இலாபத்தில் இயங்கிக் கொண்டிருக்கின்றது. இந்த நிலையில் மின்சாரம் தொடர்பில் மட்டக்களப்பு மாவட்டம் பல்வேறு நெருக்கடியினை சந்தித்துவருகின்றது. இது தொடர்பில் மக்கள் பல்வேறு பட்ட முறைப்பாடுகளை தினமும் தெரிவித்துவருகின்றனர்.
இந்த நியைலில் மின்சார சபையில் நான் பிழைகாணும் விடயம் என்னவென்றால் இலங்கையில் 18 நகரங்கள் உள்ளது. அதில் மட்டக்களப்பும் ஒரு மாநகரம். ஆனாலும் இலங்கையில் உள்ள மாநகரங்களில் மட்டக்களப்பு மாநகரம் தான் மிகவும் இருள் சூழ்ந்த மாநகரமாக காணப்படுகின்றது.
இரவு நேரங்களில் மிக மோசமான ஒரு நிலையை எமது மாவட்டம் தாங்கி நிற்கின்றது. இரவு வேளைகளில் வீதிகளில் மாடுகள் நின்றால்கூட தெரியாத நிலையே காணப்படுகின்றது. இது மட்டக்களப்பு மாநகரசபையின் குறைபாடாகவும் காணப்படுகின்றது. இருந்தாலும் மின்சாரசபை அதிகூடிய கவனம் செலுத்தி பிரதான வீதியிலாவது மின் விளக்குகளை பொருத்த நடவடிக்கை எடுக்கவேண்டும்.
ஏனென்றால் திருகோணமலையில் இருந்து பொலநறுவை ஊடாக மட்டக்களப்புக்கு வரும்போது பொலநறுவையில் ஒவ்வொரு மின்கம்பத்திலும் மின்குமிழ்கள் எரிவதைக்காணலாம். ஆனால் மட்டக்களப்பை அடைந்தால் அவ்வாறான ஒரு நிலையினை காணமுடியாது.
ஆகையினால் இது ஒருமோசமான பிரச்சினையாக காணப்படுகின்றது. எனவே இங்குள்ள கிழக்கு மாகாண பிரதி முகாமையாளர் உட்பட மாவட்ட முகாமையாளர் இதற்கு கூடிய கவனம் செலுத்தி உங்களின் திணைக்களத்தின் ஊடாகவும் அரசியல்வாதிகள் ஒதுக்கும் நிதியினைக்கொண்டும் மிகவிரைவாக ஏனைய மாநகரங்களைப்போல் மட்டக்களப்பு மாநகரத்தையும் வெளிச்சத்துக்கு கொண்டுவரவேண்டும். எனவும் கிழக்கு மாகாணமுதலமைச்சர் வேண்டுகோள்விடுத்தார்.
இதேவேளை மட்டக்களப்பு மாநகரத்தில் உள்ள மக்களின் பிரச்சினை தொடர்பிலும் ஆராயப்பட்ட மேற்படிக்கூட்டத்தில் மட்டக்களப்பு மாநகர முதல்வர் உட்பட அதன் உறுப்பினர்கள் கலந்துகொள்ளாமை தொடர்பில் அதிர்ப்தி தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply