அரசியலமைப்பில் அடுத்த வருடமும் சில திருத்தங்கள்

அடுத்த வருடமும் அரசியலமைப்பில் சில திருத்தங்கள் செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. 13 வது திருத்தத்திலும் தேவையான திருத்தங்கள் மேற்கொள்ளப்படலாம் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி செயலாளரும், அமைச்சருமான மைத்திரிபால சிறிசேன கூறினார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஏற்பாடு செய்துள்ள ஊடகவியலாளர் மாநாடு நேற்று மகாவலி நிலையத்தில் நடைபெற்றது.

இங்கு கருத்துத் தெரிவித்த அமைச்சர்,

18 ஆவது அரசியலமைப்புத் திருத்தம் இன்று பெரும்பான்மை யான எம்.பிக்களின் ஆதரவுடன் நிறை வேற்றப்பட உள்ளது. எதிர்பார்க்காத அளவு எதிர்க்கட்சி எம்.பிக்கள் இதற்கு ஆதரவு வழங்க முன் வந்துள்ளனர். இன்றும், நாளையும் (7, 8) மேலும் பலர் யாப்பு திருத்தத்திற்கு ஆதரவு வழங்க உள்ளனர்.

உத்தேச யாப்புத் திருத்தம் அவசரமாக சமர்ப்பிக்கப்படுவதாகவும் அது குறித்து ஆராய அவகாசம் வழங்கப்படவில்லை எனவும் எதிர்க் கட்சியினர் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.

ஆனால் 1978 யாப்பு, 13 வது 17 வது திருத்தங்கள் என்பன அவசர அவசரமாகவே நிறைவேற்றப்பட்டன. ஆனால் உத்தேச 18 வது யாப்புத் திருத்தம் குறித்து 3 மாதங்களுக்கு மேலாக பேசப்பட்டது. கட்சிகளின் கருத்துகளும் பெறப்பட்டன.

நிறைவேற்று அதிகாரத்தை குறைக்கும் வகையிலே தற்பொழுது திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. புதிய திருத்தத்தின் படி ஜனாதிபதி கட்டாயம் பாராளுமன்ற அமர்வுகளில் கலந்து கொள்ள வேண்டும்.

அரசாங்கத்துடன் இணையும் ஒவ்வொரு வரும் அபிவிருத்தியின் பங்காளர்களா கின்றனர். இலங்கையை பலமான நாடாக கட்டியெழுப்ப வேண்டும் என்ற மக்களின் எதிர்பார்ப்பை நாம் நிறைவேற்றுவோம். கட்டமைப்பு ரீதியான திருத்தங்கள் இம்முறை செய்யப்படவில்லை. அடுத்த வருடத்திலும் யாப்பில் தேவையான திருத்தங்கள் முன்னெடுக்கப்படும்.

சுயாதீன பொலிஸ் ஆணைக்குழுவுக்கு சுயாதீனமாக செயற்படுவதற்காக அதிகாரங்கள் வழங்கப்படும். பொலிஸ் மா அதிபருக்கு எதிராக மக்களுக்கு முறையிட முடியும். சுயாதீன பொலிஸ் ஆணைக்குழு தொடர்பில் எதிர்காலத்தில் மேலும் திருத்தங்கள் பாராளுமன்றத்தில் முன்னெடுக்கப்படும் என்றார்

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply