கட்டையர் குளத்தில் குடிநீருக்கான நீர்த்தேக்கம் அமைக்க மக்கள் எதிர்ப்பு

வவுனியா கட்டையர் குளத்தில் மக்களின் குடியிருப்பு நிலங்களை குடிநீருக்கான நீர்த்தேக்கம் என்ற வேலைத்திட்டத்தின் கீழ் அபகரிப்பதற்கான முயற்சிகளில் அதிகாரிகள் ஈடுபட்டிருப்பதாகத் தமக்கு ஊர் மக்கள் முறையிட்டிருப்பதாகத் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

வவுனியா நகரத்தின் குடிநீர்த்தேவைக்காக பறங்கிஆற்றை கட்டையர்குளம் கிராமப்பகுதியில் மறித்து நீரைத்தேக்குவதற்கான பாரிய நீர்த்தேக்க திட்டம் ஒன்று தீட்டப்பட்டு, அது வெளிப்படைத் தன்மையற்ற நிலையில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகத் தமக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்தத் திட்டத்தைச் செயற்படுத்துவதற்காக பறங்கியாற்றின் கரையில் உள்ள கட்டையர்குளம் கிராமத்தின் குடியிருப்பு நிலங்களை நில அளவை செய்வதற்காக அங்கு சென்ற அதிகாரிகள் ஊர் மக்களின் அனுமதியின்றி தமது செயற்பாடுகளை மேற்கொண்டதாகவும், இது குறித்து ஊர் மக்கள் விளக்கம் கேட்டதற்கு நில அளவைத் திணைக்களத்திற்கு எந்தக் காணிகளையும் அளவை செய்யும் அதிகாரம் இருப்பதாகவும் எதிர்ப்பு தெரிவித்தால் ஊர் மக்களை இராணுவம் மற்றும் பொலிசாரின் துணையோடு அங்கிருந்து வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அந்த அதிகாரிகள் அச்சுறுத்தியதாகவும் ஊர் மக்கள் தம்மிடம் முறையிட்டிருப்பதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

நில அளைவை செய்வதற்கான எல்லைகளை அமைப்பதற்காக புல்டோசர் கொண்டு நில அளவைத் திணைக்கள அதிகாரிகள் குடியிருப்பு காணி ஒன்றின் வேலிகள் மற்றும் பயிர்களை அழித்தபோது காணி உரிமையாளர் அதனைத் தடுக்க முற்பட்டபோதே இவ்வாறான அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாகவும் தமக்கு முறையிடப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இந்தச் சம்பவத்தைப் பின்னர், திரண்டெழுந்த ஊர் மக்கள் நில அளவைத் திணைக்கள அதிகாரிகள், ஊழியர்களை குடியிருப்பு காணிகளில் வரவேண்டாம் என தடுத்ததையடுத்து, அவசர அவசரமாக அங்கு சென்ற வவுனியா பிரதேச செயலாளர் நில அளவைத்திணைக்கள ஊழியர்களின் செயற்பாடுகளைத் தடை செய்தமைக்காக ஊர் மக்களைக் கடிந்து கொண்டதாகவும், ஊர் மக்கள் நாடாளுமன்ற உறுப்பினரிடம் தெரிவித்துள்ளார்கள்.

இந்த விடயம் குறித்து தனது கவனத்திற்கு ஊர் மக்கள் கொண்டு வந்திருக்க வேண்டுமே அல்லாமல், நில அளவையாளர்களின் வேலைகளுக்குத் தடைபோட்டிருக்கக்கூடாது என்று அவர் ஊர் மக்களிடம் கூறியதாகவும் மக்கள் நாடாளுமன்ற உறுப்பினரிடம் தெரிவித்துள்ளார்கள்.

ஊர் மக்கள் நாடாளுமன்ற உறுப்பினரிடம் மேலும் தெரிவித்துள்ளதாவது:

தமது ஊரில் என்ன நடக்கின்றது என்பது குறித்து அறிந்து கொள்வதற்காக வவுனியா பிரதேச செயலகத்திற்குச் சென்றபோதெல்லாம், அதற்குரிய சரியான விளக்கத்தை அதிகாரிகள் கொடுக்கவில்லை. அதுதொடர்பாகத் தமக்குத் தெரியாது என்று பிரதேச செயலக அதிகாரிகள் தெரிவித்தார்கள். அத்துடன் நீர்விநியோக வடிகாலமைப்புச் சபையினரே இந்தத் திட்டத்திற்குப் பொறுப்பானவர்கள். அங்குள்ள அதற்கான விசேட பொறியியலாளரிடம் போய் கேளுங்கள் விபரம் தெரிவிப்பார்கள். என்று பிரதேச செயலக அதிகாரிகள் எங்களிடம் கூறினார்கள் அதன்படி, அந்தப் பொறியியலாளரைச் சந்தித்து விளக்கம் முயன்ற போது எங்களால் அவரைச் சந்திக்கவே முடியாமல் போனது.

இந்த நிலையிலேயே தமது ஊருக்குள் அனுமதியின்றி, முன் அறிவித்தலின்றி தமது குடியிருப்பு நிலங்களை ஊடறுத்து எல்லைகளை நிறுவி நில அளவை செய்வதற்கு எடுத்த செயற்பாட்டைத் தடுத்தோம். ஆகவே இதுவிடயத்தில் தலையிட்டு எங்களுக்கு நியாயம் கிடைப்பதற்கு ஆவன செய்ய வேண்டும்.”

வேலைத்திட்டங்கள் தொடர்பாக ஊர் மக்களுக்கு சரியான விளக்கமளிக்காமல் தன்னிச்சையாக நடந்து கொண்ட அதிகாரிகளின் போக்கை வன்மையாகக் கண்டித்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் இது தொடர்பாக உரிய அதிகாரிகள் திணைக்களங்களுடன் தொடர்பு கொண்டு மேல் நடவடிக்கை எடுக்கப் போவதாகத் தெரிவித்துள்ளார்.

குடியிருப்பு காணிகளுக்குப் பதிலாக காட்டு நிலப்பகுதியைப் பயன்படுத்துமாறு கோரிக்கை

இதேவேளை, வியாழனன்று வவுனியா செயலகத்தில் அரசாங்க அதிபர் தலைமையில் இந்த விடயம் குறித்து ஆராய்வதற்காக நடைபெற்ற கூட்டத்தில் கட்டையர்குளம் கிராம மக்கள் கலந்து கொண்ட பிரதிநிதிகள், மக்கள் குடியிருப்பு காணிகளைத் தவிர்த்து பறங்கி ஆற்றிற்கு அப்பால் அமைந்துள்ள காட்டுப் பகுதி நிலங்களை இந்தத் தேவைக்காகப் பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளதாகவும் ஊர் மக்கள் நாடாளுமன்ற உறுப்பினரிடம் தெரிவித்துள்ளார்கள்.

காடுகளை அழித்து விளைச்சல் நிலமாக மாற்றி அங்கு பல வருடங்களாகக் குடியிருந்து வரும் தங்களை அந்த ஊரில் இருந்து வெளியேற்றுவதற்கு எடுக்கப்படும் முயற்சியைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

இந்த காணி அபகரிப்பு நடவடிக்கையின் மூலம் பல கல்வீடுகள், ஒரு சுடலை, ஓரு பாடசாலை, ஒரு பொது நோக்கு மண்டபம் மற்றும் பல ஏக்கர் விஸ்தீரணமான தோட்டக்காணிகள் என்பன நீர்த்தேக்கத்தினுள் செல்லும் அபாயம் ஏற்பட்டிருப்பதாகவும், தமது குடியிருப்பு நிலங்கள் பறிபோகும் அபாயம் எழுந்துள்ளதாகவும் ஊர் மக்கள் தம்மிடம் தெரிவித்துள்ளதாகவும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply