நீயும் மார்க்ஸிஸ்ட் ஆகலாம் : யதீந்திரா

அது ஒரு மாலைப் பொழுது
மழைத் துறல்கள் காற்றின் மோதுகையால்
சிதறி முகத்தை உரசிச் செல்லும்போது
ஒரு வகையான உணர்வு மனதைக் கிள்ளத்தான் செய்கிறது.

இரு பீர் போட்டில்கள் காலியாகியிருந்தன.
அந்த நண்பன் சடுதியாகத்தான் கேட்டான்,
அப்படியொரு கேள்வியை நான் எதிர்பார்த்திருக்கவில்லை,
இப்போதெல்லாம் நான் எதிர்பார்ப்பவைகள் எதுவும் நடப்பதுமில்லை.

அந்த நண்பன்!

யதி, நீ விடயஞானம் உள்ளவன்
உன்பற்றி பலரும் அறிவாளி என்கின்றனர்,
இது விடயத்தில் எனக்கு உன்னால் உதவ முடியும்.
நான் ஒரு மார்க்ஸிஸ்ட் ஆவது எப்படி?

நான்!

என் குறித்த அவன் வர்ணனைகள்
என்னை சங்கடப்படுத்தின.
இதிலெல்லாம் நான் நாட்டம் கொள்வதில்லை,
ஏனெனில் நான் என்னை அறிவேன்.

நான் சிரித்துக் கொண்டேன்,
அவன் கேள்வியை எண்ணி.
அது ஒன்றும் கடினமானதல்ல என்றேன்,
அவன் மிகுந்த ஆவலுடன் இருந்தான்.

1
மார்க்ஸ், ஏங்கல்ஸ், லெனின், ஸ்டாலின்
மேலும் மா ஓ சேதுங் இல்லாவிட்டால் ஹொசிமின், பிடல் காஸ்ரோ, சேகுவேரா
அவ்வப்போது இந்தப் பெயர்களில் ஒன்றையேனும்
நீ சொல்லிக் கொள்ளலாம்.
வேண்டுமானால் இவர்களின் மேற்கோள்களில்
ஓரிரண்டை மனனம் செய்து வைத்துக் கொள்வது
மேலதிக தகுதியாகக் கருதப்படும்.
உதாரணத்திற்கு,
“தத்துவ ஞானிகள் இதுவரை உலகை விளக்கிக் கொண்டிருந்தனர் தேவை அதை மாற்றுவதே” – காரல் மார்க்ஸ்.

2
உனது சொந்த மக்கள் ஒரு வேளை உணவுக்காக கையேந்தி நிற்பர்
ஆனால் நீ அதுபற்றியெல்லாம் அலட்டிக் கொள்ளக் கூடாது.
பாலஸ்தீனத்தின் காஸா, நேபாள மாவோயிஸ்ட், நக்சலைட்டுகளின் எழுச்சி, காஷ்மீரில் இந்திய ஆக்கிரமிப்புப் படைகளின் அட்டகாசம்
இப்படியெல்லாம் நீ சொல்லிப் பழகிக்கொள்ள வேண்டும்.
குறைந்தது மாதத்தில் சில தடவைகளாவது.

3
சி.ஜ.ஏயின் சதிகள், றோவின் ஊடுருவல்,
இப்படி ஏதோவொன்றை பற்றி அடிக்கடி
மற்றவர்கள் காதில் விழும்படி பேசிக் கொள்ள வேண்டும்.
ஆனால் இவைகள் குறித்தெல்லாம் நீ மேலதிகமாக அறிந்து கொள்ள வேண்டிய கட்டாயமில்லை.

4
புரட்சிகர அரசியல், மக்கள் போராட்டம், பாஸிசம், சர்வாதிகார ஆட்சிக்கு முடிவு கட்டுவோம்,
அமெரிக்க மேலாதிக்கம்,
ஏகாதிபத்தியம்,
உலகத் தொழிலாளர்களே ஒன்று சேருங்கள்,
இவற்றை அவ்வப்போது இடமறிந்து சொல்ல வேண்டும்.
ஆனால் நீ இதில் தவறியும் பங்கு பற்றக் கூடாது.
உனது வேலை இப்படிப் பேசுவது மட்டும்தான்.

5
நீ எப்போதுமே உன்னை உனது சூழலுக்கு வெளியில்
உணர்வது அவசியம்.
உனது உணர்வுகளுக்காக எங்கள் மக்களின் கோவணத்தை கழற்றி,
நேபாளத்திற்காகவும் கியூபாவிற்காகவும்,
சுலோகங்களை எழுதுவதற்கு நீ ஒரு போதும் தயங்கக் கூடாது.

6
நீ உனது பெயரை அடிக்கடி மாற்றிக் கொள்ள வேண்டும்.
பெயர்களில் உனக்கு சங்கடமெனின் நீ XXX இப்படியும் வைத்துக் கொள்ளலாம்.
நீ எந்தவொரு விவாதங்களிலும் நேர்மையாக பங்குபற்றக் கூடாது.
எனது முயலின் கால்கள் மூன்று என்பதில்,
நீ தவறியும் தடுமாறிவிடக் கூடாது.

7
நீ எங்கு வேண்டுமானாலும் இருக்கலாம்.
கனடாவில், அமெரிக்காவில், இங்கிலாந்தில், பிரான்ஸில், ஜேர்மனியில்
எங்கு வேண்டுமானாலும்.
ஆனால் நான், எனது குடும்பம் என்பதில்
எப்போதுமே நீ கவனம் கொண்டிருக்க வேண்டும்.
போராடுவதற்கு என்றே ஏழை எளிய மக்கள் குழந்தைகளை பெற்றுள்ளனர்.

இறுதியாக…

நிர்கதி மக்களுக்கு உதவ வேண்டும்,
அவர்களும் எங்கள் உறவுகள்தான்,
அதுதான் இப்போது முக்கியம்,
எவரேனும் அப்படிச் சொல்வார்களாயின் அவர்களை நீ தயக்கமின்றி துரோகி, அரச கைக்கூலிகள், விலைபோனவர்கள் என்றெல்லாம் சொல்லத் தயங்கக் கூடாது.
உனக்கு திருப்தி ஏற்படவில்லையாயின் நீ அவ்வாறானவர்களை றோ அல்லது சி.ஜ.ஏ என்பவற்றுடன் இணைத்துக் கொள்ளலாம்.
எல்லாவற்றிலும் உனது மகிழ்சி முக்கியமானது!

அவன் திகைத்து நின்றான்
அவனுள் வார்த்தைகள் எழவில்லை போலும்.
சில மணித்துளிகள் பிரிவிற்கு பின்னர் அவன்:
நான் இப்போது இருப்பது போன்றே இருந்து விடுகின்றேன்,
முடிந்ததை என் மக்களுக்குச் செய்கிறேன்.

நான்: நீ அப்படியும் மார்க்ஸிஸ்ட் ஆகலாம்.

– யதீந்திரா

நன்றி: லும்பினி (lumpini.com)

மூலம்/ஆக்கம் : கவிதை


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply