ஊர்காவற்துறை, கொக்குவில் பகுதி மக்களுடன் முன்னாள் முதலமைச்சர்
யாழ்ப்பாணத்தில் தங்கியுள்ள வடக்கு கிழக்கு மாகாணசபையின் முன்னாள் முதலமைச்சர் அ.வரதராஜப்பெருமாள் நேற்றையதினம் (19.10.2010) கொக்குவில் மற்றும் ஊர்காவற்துறை ஆகிய பகுதிகளுக்கு விஜயம் மேற்கொண்டு அங்குள்ள மக்களைச் சந்தித்து தற்போதைய அரசியல் பொருளாதார சமூக நிலைமைகள் தொடர்பாக கலந்துரையாடினார்.
நேற்றுக் காலை 9 மணியளவில் கொக்குவில் கிழக்கு மாஜி சனசமூக நிலைய நிர்வாகத்தினரால் ஒழுங்கு செய்யப்பட்ட கலந்துரையாடல் ஒன்றில் கலந்து கொண்ட வரதராஜப்பெருமாள் அங்கு கூடி நின்ற மக்கள் மத்தியில் நீண்ட உரையொன்றினை ஆற்றினார்.
அரசியல் தீர்வுகள் எட்டப்படவேண்டிய நேரங்களில் தமிழ் தலைவர்கள் குறிப்பாக புலிகள் தவறவிட்ட சந்தர்ப்பங்களை இதன்போது சுட்டிக்காட்டிய அவர் ஈபிஆர்எல்எவ் இணைந்த வடக்கு கிழக்கு மாகாணசபையினை உருவாக்கி அதன் தலைமையகத்தினை திருகோணமலையில் நிறுவிக்காட்டியதையும் குறிப்பிட்டார். அவ்வாறான மாகாணசபை தொடர்ந்து செயற்பட்டிருந்தால் இன்று வடக்கு கிழக்கு என இரண்டு மாகாணசபைகள் உருவாகியிருக்காது என சுட்டிக்காட்டினார்.
தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகளுக்காகவே போராட்டங்களை ஆரம்பித்ததாக குறிப்பிட்ட அவர் யுத்தம் முடிவடைந்திருந்தாலும் தமிழ் மக்களின் நியாயமான அரசியல் கோரிக்கைகளுக்கு இன்னமும் தீர்வு வழங்கப்படவில்லை ஆயினும், ஆயுதப் போராட்டம் மூலம் எமது நியாயமான கோரிக்கைகளை பெற்றுவிட முடியாது என்பதை கடந்த கால அனுபவங்கள் மூலம் உணர்ந்துவிட்டோம் எனவே எதிர்காலத்தில் எமது கோரிக்கைகளை மக்கள் திரண்ட ஜனநாயக வழியிலான போராட்டங்கள் மூலம் வென்றெடுக்க எண்ணியுள்ளதாகவும் தெரிவித்தார்.
ஒரு மாபெரும் மக்கள் இயக்கம் ஒன்றினை கட்டியெழுப்பும் வகையில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டிய தேவை எழுந்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேபோன்று மாலை 5 மணியளவில் ஊர்காவற்துறையில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டு இன்றுள்ள அரசியல் நிலை எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பாக கருத்துத் தெரிவித்ததோடு மக்களின் கருத்துக்களையும் கேட்டறிந்தார். இக் கூட்டத்தில் உரையாற்றிய பாடசாலை அதிபர் சண்ணுவம்பிள்ளை ஈபிஆர்எல்எவ் தலைமையில் அமைக்கப்பட்ட மாகாணசபையில் முதலமைச்சர் வரதராஜப்பெருமாள் ஆற்றிய சேவைகளை நினைவு கூர்ந்தார்.
இங்குள்ள கிராமங்களில் எண்பதுகளில் சாதிப்பிரச்சினைகள் தலை தூக்கிய வேளைகளிலெல்லாம் ஈபிஆர்எல்எவ் மட்டுமே அதில் தலையிட்டு அவற்றை தீர்த்து வைத்த சம்பவங்களை சுட்டிக்காட்டினார். அவர் இங்குள்ள கிராமங்கள் தற்போது வரையில் அபிவிருத்தி காணாத கிராமங்களாக இருந்து வருவதையும் குறிப்பிட்டார். அரசாங்கமும் அதன் அமைச்சர்களும் எமது மக்களுக்கு வீடு கட்டுவதற்கும், கோவில் கட்டுவதற்கும் நிதி உதவி செய்து வருகின்றனர் இவற்றுக்கான தேவைகளிருக்கின்றது ஆனால் தமிழ் மக்களுக்கு இந்த உதவிகள் மட்டும் போதுமானதல்ல அதற்கு மேலாக எம் மக்களுக்கு அவர்களின் வாழ்க்கைத் தரம் உயர்வதற்கான திட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும். அத்துடன் இலங்கையின் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வொன்று முக்கியமானது எனக் குறிப்பிட்டார். இதன் அடிப்படையில் எதிர்வரும் காலங்களில் வோட்டுக் கேட்டுவரும் அரசியல் கட்சிகளுடன் மக்கள் பேரம் பேசும் நிலை ஒன்று உருவாகும் எனத் தெரிவித்தார்.
அங்கு உரையாற்றிய அ.வரதராஜப்பெருமாள் சுமார் 23 வருடங்களின் பின்னர் இப்பகுதிக்கு தாம் வந்திருப்பதாகவும் இவ்வாறு பல கிராமங்களிலும் மக்களை சந்திக்கின்ற போது மக்கள் தமக்கு வழங்கப்படும் சிறு சலுகைகளோடு மட்டும் திருப்தி கொள்ளாது தமிழர்களின் அரசியல் மற்றும் பொருளாதார உரிமைகள் தொடர்பாக உணர்வுபூர்வமாக இருப்பது தமக்கு மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாக குறிப்பிட்டார்.
“அரசாங்கத்தில் அமைச்சராக அங்கம் வகிப்பவர்கள் மட்டுமே அரசாங்கத்தின் காசினை சிலவளிக்க முடியும் என்னும் உண்மை அனைவரும் அறிந்த ஒன்றாகும். நான் பணத்துடன் உங்கள் முன்வரவில்லை ஆனால் எனது மனச்சாட்சியுடன் உங்களைச் சந்திக்க வந்திருக்கின்றேன்” எனத் தெரிவித்தார்.
“நீங்கள் விரும்பும் கேள்விகளை என்னிடம் கேட்க முடியும் உங்கள் கருத்துக்களை நீங்கள் துணிந்து கூற வேண்டும். அதுவே எனது வருகை அர்த்தமுள்ளதாக அமையும் நானும் நான் சார்ந்த அமைப்பும் தொடர்ந்தும் தமிழ் மக்களின் உரிமைகளுக்காக குரல் கொடுப்போம். எங்களுடைய கட்சி அரசாங்கம் தரும் சலுகைகளோடு திருப்திப்பட்டு தமிழ் மக்களுக்கான உரிமைகளுக்கு குரல் கொடுக்காமல் இருக்காது. அதேவேளை அரசாங்கம் மக்களுக்கு வழங்க வேண்டிய நிவாரணங்கள், புனர்வாழ்வு உதவிகள் எமது பகுதிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பாகவும் அரசாங்கம் ஆக்கபூர்வமாக செயற்பட வைக்கவும் முயற்சிப்போம் எனத் தெரிவித்தார். நாம் ஒரு மக்கள் இயக்கமாக வலுவான அரசியற் சக்தியாக வளர்ச்சியடைய நீங்கள் அனைவரும் எங்களோடு இணைந்து ஒத்துழைக்க வேண்டும்” என அங்கு கூடியிருந்த மக்களை தோழர் வரதராஜப்பெருமாள் கேட்டுக்கொண்டார்.
இந்த விஜயங்களின் போது ஈபிஆர்எல்எவ் கட்சியின் பொதுச் செயலாளர் ஸ்ரீதரன், யாழ் மாவட்ட செயலாளர் மோகன் உட்பட கட்சியின் தோழர்கள் ரவி (சச்சி), கிருபா, முரளி உட்பட பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply