முல்லைத்தீவில் முஸ்லிம்கள் மீள்குடியமர்வு
முல்லைத்தீவு மாவட்டத்திலிருந்து இடம்பெயர்ந்து வெளி மாவட்டங்களில் அகதிகளாக வாழ்ந்து வந்த முஸ்லிம் மக்களில் ஒரு தொகுதியினர் மீண்டும் சொந்த வாழ்விடம் திரும்பியுள்ளனர்.
இவ்வாறு தண்ணீரூற்றுப் பகுதியில் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் மீளக்குடியமர்ந்துள்ளன. நேற்றைய தினமும் சுமார் 200 குடும்பங்கள் புத்தளத்திலிருந்து சொந்த இடம் திரும்பியுள்ளன. இந்த நிலையில் தண்ணீரூற்று பெரிய பள்ளிவாசல் கடந்த வெள்ளிக்கிழமையிலிருந்து மீண்டும் திறக்கப்பட்டு தொழுகைகள் ஆரம்பிக்கப் பட்டுள்ளன.
கடந்த இரு தசாப்தங்களுக்குப் பின்னர் முஸ்லிம்கள் சொந்த வாழ்விடம் திரும்புவதற்கு வாய்ப்பினை ஏற்படுத்தித் தந்தமைக்காக ஜனாதிபதிக்கும் முப்படையினருக்கும் நன்றி தெரிவிப்பதாக முல்லைத்தீவில் மீளக்குடியமர்ந்துள்ள முஸ்லிம் மக்கள் தெரிவித்துள்ளனர்.
1990 ஆம் ஆண்டு இடம்பெயர்ந்து புத்தளத்தில் அகதிகளாக வாழ்ந்து வந்த ஹிஜ்ராபுரம் மற்றும் தண்ணீரூற்று ஆகிய கிராமங்களைச் சேர்ந்த முஸ்லிம் மக்களே இவ்வாறு மீளக்குடியமர்ந்துள்ளனர். சுமார் ஒரு மாத காலத்திற்கு முன்னர் தண்ணீரூற்றுப் பகுதிக்கு மக்கள் வந்து மீளக்குடியமர்ந்துள்ள அதே நேரம், ஹிஜ்ராபுரம் கிராமத்தில் நேற்று முன்தினமும் நேற்றும் சுமார் இருநூறு குடும்பங்கள் மீளக் குடியமர்ந்துள்ளன.
தாம் மீளக்குடியமர்வதற்கு முல்லைத்தீவு 59 ஆம் படைப்பிரிவினர் முழுமையான ஒத்துழைப்பினை வழங்கியதாக மீள்குடியேறி முல்லைத்தீவு கூட்டுறவு அபிவிருத்தி உத்தி யோகத்தராகக் கடமை புரியும் சமூன் முகமத் சஜீத் தெரிவித்தார்.
“புலிகளால் விரட்டப்பட்டு மீண்டும் சொந்தக் கிராமங்களில் மீளக் குடியமரக் கிடைத்துள்ளமையால், அடைந்துள்ள மகிழ்ச்சியை வெளிப்படுத்த வார்த்தைகள் இல்லை” என்று சஜீத் குறிப்பிட்டார்.
தண்ணீரூற்று கிழக்குப் பகுதியில் முஸ்லிம்கள் மீளக்குடியமர்வதற்கு இன்னும் கண்ணிவெடிகள் அகற்றப் படவில்லை என்று குறிப்பிட்ட அவர், அங்கு இன்னமும் நூறு முதல் இருநூறு வரையான குடும் பங்கள் மீளக்குடியமர உள்ளதாகவும் தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply