மீள்குடியமர்வு மற்றும் அரசியல் தீர்வு குறித்து அரசுடன் இணைந்து செயற்பட கூட்டமைப்பினால் 7 பேர் கொண்ட குழு நியமனம்

வடக்கு கிழக்கு பகுதியில் மேற்கொள்ளப்படும் மீள்குடியமர்வு மற்றும் அபிவிருத்தி வேலைகளை கண்காணிப்பதற்காக ஏழு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய குழுவொன்றை தமிழ்த் தேசிய கூட்டமைப்பு நியமித்து, அப்பட்டியலை அரசாங்கத்திற்கு அனுப்பியுள்ளது.

இந்த ஏழு உறுப்பினர்களில் இரா.சம்பந்தன், மாவை சேனாதிராஜா, சுரேஷ் பிரேமசந்திரன், செல்வம் அடைக்கலநாதன், எம்.ஏ.சுமந்திரன், எஸ்.சிறிதரன் மற்றும் பி.செல்வராசா ஆகியோர் அடங்குகின்றனர்.

இந்த உறுப்பினர்களின் பெயர்களை ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரத்துங்கவிற்கு அனுப்பியுள்ளதாகவும், அதை பெற்றுக் கொண்டமைக்கான அறிவித்தல் தமக்கு கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கும் தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போது, வடக்கு கிழக்கு பகுதிகளில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி நடவடிக்கைகளில் இணைந்து செயற்படுவது என்று தீர்மானிக்கப்பட்டத்திற் கிணங்கவே, இக்குழு நியமிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நியோர்க்கிலிருந்து நாடு திரும்பியதும் இக்குழு உறுப்பினர்களை அங்கீகரிப்பர் என எதிர்பார்க்கப்படுவதாக எம்.ஏ.சுமந்திரன் கூறினார்.

தேசிய பிரச்சினைக்கான அரசியல் தீர்வொன்றை பெறுவதற்காக அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவதற்காக தனியான பொறி முறையொன்று ஏற்படுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

அண்மையில் நடைபெற்ற யாழ் மாவட்ட அபிவிருத்திக் கூட்டத்தின் போது சில தமிழ்த் தேசிய கூட்டமைப்பு  நாடாளுமன்ற உறுப்பினர்கள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஸில் ராஜபக்ஷவை சந்தித்து வட மாகாண அபிவிருத்தி தொடர்பாக கலந்துரையாடியுள்ளனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply