பொது மன்னிப்புத் தந்து எமது எதிர்காலத்திற்கு ஒளியேற்றுங்கள்

கொழும்பு, வெலிக்கடை சிறைச்சாலையில் அரசியல் கைதிகள் மகளிர் பிரிவில் உள்ள அரசியல் கைதிகள் குழந்தைகளுடன் உள்ள தாய்மார், தங்களை பிணை அல்லது பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்யுமாறு, மகளிர் மற்றும் சிறுவர் அமைப்பின் இயக்குனரும் இலங்கையின் முதற்பெண்மணியுமான ஜனாதிபதியின் துணைவியார் கௌரவ திருமதி சிரந்தி ராஜபக்ஷவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

கௌரவ திருமதி சிரந்தி ராஜபக்ஷ
இலங்கையின் முதற் பெண்மணி
இயக்குணர்
மகளிர் மற்றும் சிறுவர்களுக்கான அமைப்பு
கொழும்பு – 03

பிணை அல்லது பொது மன்னிப்பு வழங்கி குழந்தைகளுடன் உள்ள தாய்மார்கள் மற்றும் பெண்களாகிய எங்களின் கண்ணீரைத் துடைத்து எதிர்காலத்திற்கு ஒளியேற்றுங்கள்

மகளிர் மற்றும் சிறுவர்களுக்கான அமைப்பின் இயக்குனரும் இலங்கையின் முதற் பெண்மணியுமாயிருக்கின்ற நீங்களும் எங்களைப் போன்ற ஒரு தாயே. எங்களைப் போன்று உங்களுக்கும் பிள்ளைகள் உள்ளனர். அவர்களை சமூகத்தில் நல்ல நிலைக்கு கொண்டுவருவதற்கு நீங்கள் எவ்வளவு பாடுபட்டிருப்பீர்கள் என்பதை நாமறிவோம்.

ஆதலால் எங்கள் ஏக்கங்கள் கவலைகளைப் புரிந்துகொள்வீர்கள் என அரசியல் கைதிகளாக தடுத்துவைக்கப்பட்டுள்ள பெண்கள் மற்றும் தாய்மார்களான நாங்கள் மிகவும் பணிவுடன் வேண்டிக்கொள்வது யாதெனில்!

காலங்கள் பல கடந்தும் கவனிப்பார் யாரும் இன்றி பயங்கரவாதம் மற’றும் அவசரகால சட்ட விதிகளின் கீழ் எவ்வித தீர்வும் இல்லாமல் எப்போது விடுதலை என்றுகூட அறியமுடியாமல் சிறைகளில் தினம் தினம் கண்ணீரும் கவலைகளுமே சொந்தமாகிப் போன நிலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ளோம்.

எங்களைப் போன்ற பல பெண்கள் இலங்கையில் பல சிறைச் சாலைகளிலும் கண்ணீருடன் தங்கள் எதிர்காலத்தை இழந்து அடுத்தது என்ன என தெரியாமல் வாழ்ந்துகொண்டிருக்கின்றனர். எம்மில் பலர் தங்கள் குழந்தைகளுடன் குழந்தைகளின் எதிர்காலமே கேள்விக்குறியாகிய நிலையில் வாழ்கின்றனர் இவர்களில் சிலர் கருவிலேயே குழந்தையை சுமக்கும்போது கைதுசெய்யப்பட்டவர்கள் சிறையிலேயே தங்கள் குழந்தையைப் பெற்றெடுத்தவர்கள்.

கணவன் காணாமல் போக அவரைத்தேடி தன்னுடைய குழந்தையுடன் கொழும்பு வந்த சமயம் 2008.11.03 அன்று கைதுசெய்யப்பட்டுள்ள ரவிச்சந்திரன் விஜிதா சுன்னாகம் யாழ்ப்பாணம் குழந்தையான ஆரணி பிறந்தது 2007.10.04 தாயுடன் தற்போது சிறையில் உள்ளார்.

தர்சன் தங்கலா என்பவர் 2009.04.21 அன்று கர்ப்பிணியான நிலையில் இறுதி யுத்தத்தின்போது சரணடைந்தவர். இவர் 2009.12.12 அன்று சிறையில் தர்சிகன் என்னும் ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தார்.

சந்திரகுமார் ஜெயந்தினி 2008.03.03 அன்று கைதுசெய்யப்பட்ட இவரும் 2008.10.03 அன்று சிறையில் விதுஜன் என்னும் ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தார். இவர் செட்டிக்குளம் வவுனியாவைச் சேர்ந்தவர்.

இதைவிட லட்சுமணன் அன்னலெட்சுமி 2007.07.02 அன்று கைதுசெய்யப்பட்டவர். இவருக்கு குணாளன் (பிறப்பு 2006.09.07) என்னும் ஆண் குழந்தையுள்ளது இவர் கெக்கிராவை கொக்குப்பிட்டியைச் சேர்ந்தவர்.

லிங்கேஸ்வரன் லதாஜனி 2009.07.22 அன்று விமான நிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டவர். இவருக்கும் கேதினி (பிறந்த திகதி 2009.01.26) எனும் பெண் குழந்தையுள்ளது. இவர் பூந்தோட்டம் வவுனியாவைச் சேர்ந்தவர்.

இவர்கள் எல்லோரும் தங்கள் குழந்தைகளுடன் சிறையில் வாடுபவர்கள் இவை தவிர இன்னும் பல பெண்கள் பல சிறைச்சாலைகளில் தங்கள் குழந்தைகளுடன் துன்புற்று வாழ்ந்துகொண்டிருக்கின்றனர்.

இன்னும் ஒருசில பெண்கள் கைதுசெய்யப்பட்ட பின்னர் மனநோயாளியானார்கள். எமது விவகாரம் தொடர்பாக பலரும் பல வாக்குறுதிகளை மாத்திரமே தருகின்றவர்களாய் உள்ளனர். கடந்த காலங்களில் அவ்வாக்குறுதிகளைக் கேட்டு ஏமாற்றமடைந்து விரக்தியான மனநிலையில் உள்ளோம். யாவரும் ஆக்கபூர்வமான எந்த நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை. எல்லாம் பேச்சளவிலேயே உள்ளன.

நாம் எமது குழந்தைகளை சிறையில் வைத்துக்கொண்டு வேறு குற்றச்செயல்களுடன் ஈடுபட்டவர்களுடன் ஒன்றாக சிறை வைக்கப்பட்டிருப்பதனால் பிள்ளைகளின் மனநிலையும் மிகவும் பாதிக்கப்படுகின்றது. அம்மா அப்பாவை நாம் எப்போது பார்ப்போம்? அப்பா எங்கே? என என் பிள்ளைகளின் ஏக்கங்களை எல்லாம் தாங்க முடியவில்லை அவர்களுக்கு ஆரம்ப கல்லியைக் கூட வழங்க முடியவில்லை. ஆரோக்கியமாக ஊட்டச்சத்துள்ள உணவுகளைக் கூட கொடுக்கமுடியவில்லை.

சில குழந்தைகள் தங்கள் தகப்பனாரை இறுதி யுத்தத்தில் இழந்தவராயின் தகப்பன் யுத்தத்தில் கை கால்களை இழந்து அங்கவீனராகவும் காணாமல் போயும் உள்ளனர். நடந்த பிரச்சினைகளுக்கு ஒரு தரப்பினரை குற்றம் கூறுபவர்கள் ஏன் எங்களை அடைத்து வைத்துள்ளார்கள். இருந்தவைகள் எல்லாம் இழந்து போயுள்ள எங்களுக்கு இனி இழப்பதற்கு எதுவும் இல்லை.

எம்மில் பெரும்பாலான பெண்கள் திருமணமானவர்கள் சிலருக்கு கணவரும்கூட சிறையில் உள்ளார். இருவரும் வேறு வேறு இடமாக சந்திக்கவே முடியாத நிலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இன்னும் பல பெண்கள் திருமணமாகாமல் இளவயதிலுள்ளவர்கள் இவர்களின் நிலைமைகளை எண்ணிப்பாருங்கள்.

இவ்வயதில் நாம் எமது இளமையை தொலைத்தவர்களாகவும் ஆற்றல்கள் ஆளுமைகள் எல்லாம் முளையிலேயே கருகி விடுவதுமான வாழ்க்கையை இன்று அனுபவித்துக்கொண்டிருக்கின்றோம். எப்போது நாம் விடுதலையாகி எம்வாழ்வில் எப்போது வசந்தம் மலரும் என்ற அங்கலாய்ப்புக்களுக்கும் ஏக்கங்களும் எம்மைச் சூழ்கின்றன. நாம் விடுதலையாகி வீடு போகையிலும் ஒரு பெண் என்ற வகையில் இச்சமூகத்தில் எமக்கு என்ன பெயர் கிடைக்குமென எண்ணிப் பாருங்கள்.

இது தவிர வாலிபம் கடந்தும் வயோதிபம் தள்ளாடும் வயதினிலும் சிலர் சிறைவாசம் அனுபவிக்கின்றனர். எங்களை அடைத்து வைத்திருப்பதன் நோக்கம் என்ன? குற்றத்தை எம்மீது சுமத்தி எங்களுக்கு தண்டனையைத்தர எண்ணுபவர்கள் எமக்கு வாழ்க்கையைத்தர எண்ணியதுண்டா? ஒவ்வொருவரும் ஒவ்வொரு நாளும் பெற்றோருடன் ஓடி விளையாடி சந்தோசமாக இருக்கவேண்டிய குழந்தைகள் அந்த சந்தோசமும் இல்லாமல் ஒரு சமூகத்தின் அரவணைப்பு கூட இல்லாமல் சமூகத்தில் இருந்து புறந்தள்ளப்பட்டவர்களாக எந்தவொரு தொடர்பும் இல்லாமல் வாடும் அவர்களின் மனநிலை பாதிக்கப்படுகின்றது.

கடந்தகால யுத்தத்தில் நாம் பாதிக்கப்பட்டு எமது வாழ்க்கையை எப்படி மீளக் கட்டியெழுப்புவதென்று தெரியாமல் தவிர்த்துக்கொண்டிருக்கும் காலத்தில் நாம் சிறைப்பிடிக்கப்பட்டிருக்கின்றோம். எமக்கு ஏன் இந்த வாழ்க்கை இந்த இருள்மயமான சூழ்நிலையிலிருந்து மீள்வதற்கு ஒரு சந்தர்ப்பத்தை உங்களால் ஏற்படுத்திக்கொடுக்க முடியுமென்று நம்பகின்றோம்.

எனவே எமக்கும் எம்மைப் போன்ற அனைவருக்கும் பிணையிலோ அல்லது பொது மன்னிப்பிலோ விடுதலை செய்வதற்கு உதவி செய்யுங்கள் என உங்களைக் கேட்டுக்கொள்கின்றோம்.

மகளிர் மற்றம் சிறுவர்களுக்கான பல முன்னேற்றகரமான வேலைத் திட்டங்களை முன்னெடுத்து வரும் நீங்கள் குறிப்பாக போரினால் பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் சிறார்களுக்கு ஆற்றிவரும் சேவை பாராட்டத்தக்கது.

நிச்சயம் எங்கள் பிள்ளைகளினதும் எங்களினதும் உணர்வுகளைப் புரிந்துகொள்வீர்கள் என்ற எதிர்பார்ப்புடன் உங்கள் மீது நம்பிக்கை கொண்டு உங்கள் சேவை தொடரும் என நாங்கள் காத்திருக்கின்றோம்.

அரசியல் கைதிகள் குழந்தைகளுடன் உள்ள தாய்மார்
அரசியல் கைதிகள் மகளிர் பிரிவு
வெலிக்கடை
கொழும்பு
24.09.2010

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply