தீதும் நன்றும் பிறர்தர வாரா
“புலம் பெயர் தமிழர்கள் இலங்கை அரசாங் கத்தைச் சாதகமான கோணத்திலிருந்து பார்க்க வேண்டிய காலம் உருவாகியிருக்கின்றது. இவர்கள் தங்களுடைய பழைய நிலை ப்பாட்டில் தொங்கிக்கொண்டிராமல், பிரச்சினையின் தீர்வுக்காகப் பாராளுமன்ற நடைமுறைக்கூடாக ஜனநாயகப் பாதையில் செல்வதற்குத் தயாராக வேண்டும்.’’ இப்படிக் கூறியவர் நோர்வே அமைச்சர் எரிக் சோல்ஹெய்ம்.
ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கு பற்றுவதற்காகச் சென்ற ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நோர்வே பிரதமரைச் சந்தித்து உரையாடிய வேளையிலேயே எரிக் சோல்ஹெய்ம் மேற்படி கருத்தைத் தெரிவித்தார். இலங்கை விவகாரத்தில் கூடுதலான ஈடுபாடு கொண்டிருந்தவர் என்ற வகையில் சோல்ஹெய்ம் வெளியிட்ட கருத்தை நோர்வே அரசாங்கத்தின் கருத்தாகக் கொள்ளலாம்.
புலிகள் தொடர்பாக இலங்கை முகங் கொடுத்த நெருக்கடிகளுக்கு நோர்வேயும் ஒரு காரணம் என்ற அபிப்பிராயம் இலங்கை மக்கள் மத்தியில் வலுவாக நிலவுகின்றது. இது பிழையான அபிப்பிராயமல்ல.
நோர்வேயிடம் இப்போது ஏற்பட்டுள்ள சிந்தனை மாற்றம் புலம் பெயர் தமிழர்களிடமும் ஏற்பட்டாக வேண்டும்.
இலங்கைத் தமிழ் மக்கள் மிகவும் நெருக்கடியான ஒரு காலகட்டத்தைக் கடந்து வந்திருக்கின்றார்கள். இக் காலப் பகுதியில் எண்ணற்ற உயி ர்கள் அநியாயமாகப் பலியாகின. ஏராளம் சொத்துகள் முற்றாகச் சேதமாகின. ஆயிரக் கணக்கானோர் சீவனோபாயத்தை இழந்தனர். சொந்த இடங்களை விட்டு வெளி யேறியவர்களின் துயரம் இன்னும் தீரவில்லை.
மக்களின் வாழ்வில் இன்னும் வசந்தம் மலரவில்லையெனினும் அவலக் கோட்டுக்கு வெளியே வந்துவிட் டார்கள் என்பதில் ஒரு திருப்தி. தமிழ் மக்களின் வாழ்வில் தாங்க முடியாத துன்பங்கள் நேர்ந்த இக் காலப் பகுதியை இலகுவில் மறந்து விட முடியாது. அதேபோல, இத் துன்பங்களுக்குக் காரணமானவர்களையும் மக்களால் மறக்க முடியாது.
இனப் பிரச்சினை இன்று நேற்றுத் தொடங்கியதல்ல. அறுபது வருடங்க ளுக்கு மேலாக இருந்து வருகின்ற பிரச்சினை. இப் பிரச்சினையின் தீர்வுக்கான போராட்டங்களும் வெவ்வேறு வடிவங்களில் அன்று முதல் தொடர்கின்றன. போராட்டங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்ற போதிலும் ஆரம்ப காலங்களில் தமிழ் மக்கள் நாளாந்த வாழ்க்கையில் பாரிய நெருக்கடிகளைச் சந்திக்கவில்லை. இனக் கலவரங்கள் இடம்பெற்ற போதிலும் அவை தொடர்ச்சியான துன்ப நிகழ்வுகளல்ல. தனிநாட்டுக் கோரிக்கை முன்வைக்கப்பட்ட பின்னரே தமிழ் மக்களின் வாழ்க்கையில் தொடர்ச்சியான அவல நிகழ்வுகள் இடம்பெறத் தொடங்கின.
தனிநாட்டுக் கோரிக்கையை மையமாகக் கொண்ட ஆயுதப் போராட்டம் வலுப்பெறத் தொடங்கியதும் தமிழ் மக்களின் அவலங்களும் அதிகரிக்கத் தொடங்கின. இந்த ஆயுதப் போராட்டம் வலிமையடைவதில் புலம்பெயர் தமிழர்களின் பங்களிப்பு பெருமளவாக இருந்துள்ளது. புலிகள் இயக்கத்தின் ஆயுதக் கொள்வனவுக்கும் ஏனைய செலவுகளுக்கும் தேவைப்பட்ட நிதியின் மிகப் பெரும் பகுதி ‘டயஸ்போறா’ எனப்படும் புலம் பெயர் தமிழர்களினாலேயே சேகரித்துக் கொடுக்கப்பட்டது.
நடைமுறைச் சாத்தியமற்ற தனிநாட்டுக் கோரிக்கையை முன்வைத்து வெல்ல முடியாத ஆயுதப் போராட்டத்தைப் புலிகள் இயக்கம் நடத்தியதன் விளைவாகவே தமிழ் மக்கள் பாரிய பாதிப்புகளுக்கு உள்ளாகினர் எனக் கூறும் போது, அந்தப் போராட்டத்துக்குக் கூடுதான நிதிப் பங்களிப்புச் செய்த தமிழ் ‘டயஸ் போறா’வும் பாதிப்புகளுக்கான பொறுப்பை ஏற்க வேண்டும். தங்க ளுக்கு நேர்ந்த அவலங்களுக்குப் புலம் பெயர் தமிழர்களும் பொறு ப்பாளிகள் என்ற அபிப்பிராயம் மக்களுக்கு ஏற்பட்டிருக்கின்றது. இந்த அபிப்பிராயம் நீங்க வேண் டுமானால் புலம் பெயர் தமிழர்கள் இலங்கையில் வாழும் தமிழ் மக்களுக்கு நன்மை பயக்கும் செயலில் ஈடுபட வேண்டும்.
நன்மை பயக்கும் செயல்
மக்களுக்கு அவலங்கள் ஏற்படாத வகையில் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதும் வடக்கின் சிதை வுகளைக் கட்டியெழுப்புவதுமே மக்களுக்கு நன்மை பயக்கும் செயல்கள்.
ஆயுதப் போராட்டத்துக்குத் தாராளமாக அள்ளிக்கொடுத்து உதவியவர்கள் அந்த உதவியின் விளைவாக ஏற்பட்ட சிதைவுகளை நிமிர்த்துவ தற்கும் அள்ளிக்கொடுக்கத் தயாராக வேண்டும். இவர்கள் அமைப்பொ ன்றை உருவாக்கி அந்த அமைப்பின் மூலம் சில அபிவிருத்திச் செயற் பாடுகளை மேற்கொள்ளலாம். யுத்தம் காரணமாக வீடுகளை இழந்த ஆயிரக் கணக்கானோர் உள்ளனர். அவர்களுக்கு வீடுகளைக் கட்டிக் கொடுப்பது அவர்களின் மனங்களை வெல்லும் காரியம் மாத்திரமன்றி வட பிரதேச அபிவி ருத்திக்குக் கைகொடுப்பதுமாகும்.
அபிவிருத்தியுடன் நிற்காமல் அரசியல் விடயத்திலும் புலம் பெயர் தமிழர்கள் பங்களிப்புச் செய்ய முடியும்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் தமிழ் ‘டயஸ்போறா’வுக்குமிடையே எவ்வகையான உறவு இருந்ததென்பது தமிழ் மக்களுக்கு நன்கு தெரியும். புலிகளின் நிகழ்ச்சி நிரலை ஏற்றுத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செயற்பட்ட காலத்தில் புலம்பெயர் தமிழர் அமைப்புகள் இவர்களுக்கு வழிகாட்டிகளாகச் செயற்பட்டன. புலம் பெயர் தமிழர் அமைப்புகளின் செல்வாக்கு இன்றும் கூட்டமைப்பில் இருக்கின்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சரியான பாதைக்குக் கொண்டு வருவதற்குப் பங்களிப்புச் செய்யும் வல்லமை இன்றும் தமிழ் ‘டயஸ்போறா’க்களுக்கு உண்டு.
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இன்று செயற்படுகின்ற தமிழ்க் கட்சிகளுள் தமிழ்த் தேசியக் கூட் டமைப்பு மாத்திரம் யதார்த்தத்துக்கு முரணான அணுகு முறையைப் பற்றி நிற்கின்றது. முழுமையான அரசியல் தீர்வே தேவை என்பதும் அரைகுறைத் தீர்வை நிராகரிக்க வேண்டும் என்பதும் யதார்த்தத்துக்கு முரணான நிலைப்பாடுகள். எது சாத்தியமோ அதை ஏற்றுக்கொண்டு முழுமையான அரசியல் தீர்வுக்காகத் தொடர்ந்து முயற்சிக்கும் அணுகுமுறை தான் இன்றைய யதார்த்தம். இந்த யதார்த்தத்துக்கூடாகவே அரசியல் தீர்வை அடைய முடியும் என்பதைப் புலம்பெயர் தமிழர் அமைப்புகள் கூட்டமைப்புக்குத் தெளிவுபடுத்த வேண்டும்.
சிங்கள மக்களின் ஆதரவு
இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வை அடைவதில் சிங்கள மக்களின் ஆதரவு முக்கிய இடம் வகிக்கின்றது என்ற விடயத்தைத் தமிழ்த் தேசிய வாதிகள் கவனத்தில் கொள்வதாகத் தெரியவில்லை. வெளிநாட்டுத் தலைவர்களுடனும் அரசாங்கத்துடனும் பேசுவதால் மாத்திரம் தீர்வைப் பெற்றுவிட முடியும் என்று இவர்கள் கருதுவது போல் தெரிகின்றது. இந்தப் பேச்சுவார்த்தைகளால் பலன் இல்லை என்று கூற வர வில்லை. அரசியல் தீர்வு முயற்சியில் இறுதித் தடையைத் தாண்டுவதற்குச் சிங்கள மக்களின் ஆதரவு அவசியம் என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
பதின்மூன்றாவது அரசியலமைப்புத் திருத்தம் இப்போது நடைமுறையில் இருக்கின்றது. இத் திருத்தம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட வேளையில் திருத்தத்தை ஆட் சேபித்து நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. அந்த வழக்கு விசாரணையின் போது முன் வைக்கப்பட்ட வாதங்களுள் ஒன்று, திருத்தம் ஒற்றையாட்சியை மீறுவதாக இருப்பதால் சர்வசன வாக்கெடுப்பில் மக்களின் அங்கீகாரத்தைப் பெற வேண்டும் என்பதாகும். ஒற்றையாட்சி வரம்பைத் திருத்தம் மீறவில்லை என்றும் சர்வசன வாக்கெடுப்பு அவசியமில்லை என்றும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்ததால் சர்வசன வாக்கெடுப்பு இல்லாமலே மாகாண சபைகள் நடைமுறைக்கு வந்தன.
பதின்மூன்றாவது திருத்தம் முழுமையான தீர்வல்ல என்பதில் எல்லாத் தமிழ்க் கட்சிகள் மத்தியிலும் உடன்பாடு உண்டு. எனவே, தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ளக் கூடிய முழுமையான தீர்வு பதின்மூன்றாவது திருத்தத்திலும் பார்க்கக் கூடுதலான அதிகாரங்களைக் கொண்டதாக இருப்பதைத் தவிர்க்க முடியாது.
தமிழ் மக்களின் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய வகையில் கூடுதலான அதிகாரங்கள் அமைவது ஒற்றையாட்சி வரம்பை மீறுவதாகவே இருக்கும். எனவே, அத்தகைய ஒரு தீர்வை அடைவதற்கு இன்றைய அரசியலமைப்பினது ஏற்பாடுகளின் அடிப்படையில் சர்வசன வாக்கடுப்பு அவசியமாகின்றது. சிங்கள மக்களின் ஆதரவு இல்லாமல் சர்வசன வாக்கெடுப்பில் சாதகமான முடிவைப் பெறுவது சாத்தியமில்லை.
நியாயமான அரசியல் தீர்வின் அவசியம் பற்றிச் சிங்கள மக்களுக்குத் தெளிவுபடுத்துவதற்கும் அவர்களை வென்றெடுப்பதற்குமான வேலைத்திட்டம் எதுவும் தமிழ்த் தேசியவாதிகளிடம் இருப்பதாகத் தெரியவில்லை. சிங்கள மக்கள் மத்தியில் செயற்படுவனவும் நியாயமான அரசியல் தீர்வுக்குச் சார்பானவையுமான அரசியல் மற்றும் சமூக அமைப்புகளுக்கூடாக இதைச் செய்ய முடியும்.
நியாயமான அரசியல் தீர்வு இன்றைய நிலையில் உடனடியாகச் சாத்தியமில்லை. அது ஒரு நீண்ட காலத் திட்டம். சிங்கள மக்களின் ஆதரவை வென்றெடுப்பதற்கான வேலைத் திட்டத்தை இப்போதிருந்தே செயற்படுத்தத் தொடங்கினால் உரிய நேரத்தில் பலன் கிடைக்கும்.
தமிழ் மக்களின் அரசியல் தீர்வுக் கோரிக்கையைப் பிரிவினையின் முதலாவது படி என்று சந்தேகிக்கும் மனோபாவத்தைத் தமிழ்த் தேசியவாதத் தலைவர்களின் செயற்பாடுகள் சிங்கள மக்களிடம் தோற்று வித்திருக்கின்றன. இச் சந்தேகத்தைப் போக்கும் வகையில் செயற்பட வேண்டிய கடப்பாடு தமிழ்த் தலை வர்களுக்கு உண்டு.
மூலம்/ஆக்கம் : இணையத்தள கட்டுரைYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply