அரசியல் தீர்வினால் மட்டுமே பிரச்சினைகளை தீர்க்க முடியும்
மொழிக் கொள்கையினால் தாங்கள் ஓரம் கட்டப்பட்டு விட்டதாக தமிழ் மக்கள் மிகவும் கவலைப்படுகிறார்கள். வடக்கு, கிழக்கு விவகாரம் இனப்பிரச்சினையல்ல – ஆனாலும் இதை அரசியல்தீர்வு ஒன்றின் மூலம் மட்டுமே தீர்க்க முடியும் என்று சிறிஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் வேந்தரும், பெல்லன்வில ரஜமகாவிகாரையின் பிரதம குருவுமாகிய பேராசிரியர் பெல்லன்வில விமலரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.
படிப்பனைகளில் இருந்து பாடம் கற்பதற்கான நல்லிணக்க ஆணைக்குழு முன் சாட்சியமளித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
“ மொழிக் கொள்கையினால் தாங்கள் ஓரம் கட்டப்பட்டு விட்டதாக தமிழ் மக்கள் மிகவும் கவலைப்படுகிறார்கள்.
நாட்டின் அரச கருமமொழியாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ள தமிழ் மொழியில் தமிழ் மக்கள் தமது கருமங்களை ஆற்றுவதற்கு வாய்ப்புகள் ஏற்படுத்தப்பட வேண்டும் என்பதை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும்.
மொழிக்கொள்கையைப் பொருத்தமான வகையில் நடைமுறைப்படுத்துவதன் மூலம் அரசாங்கம் சிறுபான்மை சமூகங்களை சமத்துவமாக நடத்துகிறது என்ற கருத்தை அவர்களிடையே சிறிது சிறிதாக ஏற்படுத்த முடியும்.
வடக்கு, கிழக்கு விவகாரம் ஒரு இனப்பிரச்சினை அல்ல.
நீண்டகாலமாக கவனிக்கப்படாதிருந்த குறைபாடுகள், நாட்டின் நிர்வாக மற்றும் நீதித்துறைகளின் அசட்டைத்தனமான போக்கினால் தான் வடக்கு, கிழக்கு பிரச்சினை மேற்கிளம்பியது.
இந்தப் பிரச்சனையை அரசியல்தீர்வு ஒன்றின் மூலமே தீர்க்க முடியும்.
அரசியல்வாதிகள் எடுத்த வேகமான முடிவுகளினால் பெருமளவு பொதுமக்கள் கொல்லப்பட்டார்கள்.
இந்தப் பிரச்சனைக்கு அரசியல் தீர்வு ஒன்று ஏற்படுத்தப்பட வேண்டும்.
அதன் மூலம் அனைத்து இன மக்களுக்கும் சிறிலங்கா தமது தாய்நாடு என்ற கருத்தை சிறிது சிறிதாக ஏற்படுத்த முடியும்.
அவர்களுக்குத் தெரியும் மக்களுக்கு என்ன தேவை என்று. ஆனால் அவர்கள் அதைச் செய்வதில்லை.
அனைத்து இன மக்களிடையேயும் நல்லிணக்க சூழலை உருவாக்குவதற்கு உதவ மதஅமைப்புகள் தயாராகவே உள்ளன.
1970ம் ஆண்டு சிறிமாவோ பண்டாரநாயக்கவின் ஆட்சிக்காலத்தில் தரப்படுத்தல் கொள்கை நடைமுறைப்படுத்தப்பட்டது நல்ல நோக்கத்திற்காகவே.
ஆனால் அதை நடைமுறைப்படுத்திய விதம் குறைபாடுகளைக் கொண்டதாக இருந்தது.
இதன்காரணமாக பல்கலைக்கழகங்களுக்குத் தெரிவு செய்யப்படும் தமிழ் மாணவர்களின் எண்ணிக்கை வீழ்ச்சியடைந்தது. ஆனால் இது வேண்டுமென்றே செய்யப்பட்டடதொன்றல்ல.
யாழ்ப்பாணத்தில் அப்போது சில பாடசாலைகளில் உயர்ந்த தரத்திலான கல்வி வசதிகள் இருந்தன.
இந்த விவகாரம் தனிநாட்டைக் கோருவதற்கான ஒரு காரணமாக இருக்க முடியாது.
அப்போது நாடாளுமன்றத்தில் இருந்த தமிழ் அரசியல்வாதிகள் இந்த தரப்படுத்தல் பிரச்சினைக்குத் தீர்வு கண்டிருக்க முடியும்.
சன்சோனி ஆணைக்குழு தமிழ் மாணவர்களை அப்போதைய அரசாங்கம் நீதியற்ற வகையில் நடத்தியதாகக் கூறியிருந்தது“ என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply