விடுதலையாகிச் செல்வோரில் 50 வீதமானோர் திரும்பவும் சிறையில் அடைக்கப்படுகின்றனர்.
புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு பிரதியமைச்சர் விஜித விஜயமுனி சொய்சா தினகரன் வாரமஞ்சரிக்கு வழங்கிய நேர்காணல். நேர் கண்டவர் : பி. வீரசிங்கம்
கேள்வி : ஜனாதிபதியின் செயற்திட்டங்களுக்கமைய உங்களது வேலைத் திட்டங்களை எவ்வாறு முன்னெடுத்துச் செல்கின்றீர்கள்?
பதில் : ஒவ்வொரு விடயங்களையும் மிகவும் கவனமாக ஆராய்ந்து அதன் பின்னரே அதனை ஏற்றுக்கொள்ள வேண்டும். அவ்வாறு நடந்தால்தான் பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்ளக் கூடியதாக இருக்கும். அதனை நாம் அனுபவபூர்வமாக உணர்ந்திருக்கிறோம். மஹிந்த சிந்தனையின் ஆச்சரியமிக்க ஒளி சிறைச்சாலைகளுக்கும் சென்றடைய வேண்டும்.அங்கு முக்கிய கவனம் செலுத்த வேண்டிய பல விடயங்கள் இருக்கின்றன. சிறைக் கைதிகளின் பாதுகாப்பு, அவர்களுக்கான இடவசதி, இது தொடர்பான ஒரு ஒப்பந்தம் ஐ. நா. சபையில் அடங்கியுள்ளது. கைதிகளின் இடவசதி குறித்த விசேட கொள்கைகளுக்கேற்ப கைதியொருவர் இருப்பதற்காக 6 அடி அகலமும் 9 அடி நீளமும் 10 அடி உயரமும் கொண்டதாக அந்த அறை இருக்க வேண்டும். சடலமொன்றை அடக்கம் செய்வதற்கு ஒதுக்கப்படும் இட வசதிகூட ஒருசிறைக்கைதிக்கு ஒதுக்கப்படுவதில்லை என்பதே உண்மையாகும். இப்பிரச்சினைக்கு நாம் ஒரு முடிவைக்காண வேண்டும். அரச அதிகாரிகளையோ, அரசாங்கத்தையோ, முன்னாள் அமைச்சர்கள் எவரையுமே குறைகூற முடியாது. மஹிந்த சிந்தனையின் ஒளி சிறைச்சாலைக்கு கிடைத்ததால் இந்தப் பொறுப்பு எனக்கும் அமைச்சருக்கும் வழங்கப்பட்டிருக்கிறது.
சிறைச்சாலைகள் மட்டுமல்லாமல் 11 ஆயிரத்திற்கு மேற்பட்ட புலிக் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு புனர்வாழ்வளிக்கும் பொறுப்பு எமக்கு ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. இக் கைதிகள் புனர்வாழ்வளிக்கப்பட்டு வெளியில் சென்றால் மீண்டும் சிறைக்கு வராமல் சிறந்த சமூகமாக வாழ வழியேற்படுத்திக் கொடுக்க வேண்டும். சிறைக் கைதிகளுக்கு பெரும் வசதி வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்கப் போகிறார்கள் என்ற குற்றச்சாட்டும் இருக்கிறது. ஒரு கைதி சிறைக்கு வந்த பின்னர் அவரின் சமூக நிலை, அவரது குடும்ப நிலை, அவர் செய்த தவறு, அவரது கல்வி, அவரது குறை நிறைகள், அவரால் வேலை செய்ய முடியுமா என்பது பற்றியெல்லாம் ஆராய்ந்து அவற்றைத் திருத்தி சமூகத்தில் சிறந்த மனிதராக அவரை வெளியில் அனுப்ப வேண்டும். அதுதான் எமது பொறுப்பாகும்.
கேள்வி : சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருப்போரின் எண்ணிக்கையை கூறமுடியுமா?
பதில் : அதுபற்றிய சரியான விபரங்களை கூற முடியாது. இருப்பினும் 11 ஆயிரம் பேர் இருக்கும் இடத்தில் கிட்டத்தட்ட 27 ஆயிரம் பேர் இருக்கிறார்கள் என்பது கவலைக்குரிய விடயமாகும். விடுதலையாகிச் செல்வோரில் 50 வீதமானோர் திரும்பவும் சிறையில் அடைக்கப்படுகின்றனர். காரணம் என்னவெனில் நாம் எமது கடமையைச் செய்யத் தவறியமையே. சிறு தவறுகளைச் செய்தவர்கள் பின்னர் பெரிய குற்றங்களுக்காக கைதாகி சிறைக்கு வருகின்றனர். போதைப் பொருள் பாவித்த குற்றத்திற்காக சிறையில் இருந்து விடுதலையாகியவர் பின்னர் போதைப் பொருள் வியாபாரியாக மாறிவிடுகிறார். அதற்கான பொறுப்பை நாமே ஏற்க வேண்டும். தவறுகள் மீண்டும் நடக்காமல் இருக்கக் கூடிய விதத்தில் வேறு திட்டங்களை அமுல்படுத்த வேண்டும்.
கேள்வி : கைதிகளுக்காக அரசாங்கம் எவ்வளவு பணத்தை செலவிடுகிறது?
பதில் : கைதி ஒருவருக்கு நாளொன்றுக்கு அரசாங்கம் 250 ரூபாவை செலவிடுகிறது.
கேள்வி : ஒருசில கைதிகள் ஆயிரம் ரூபா தண்டப் பணத்தைக் கூட செலுத்த முடியாததன் காரண மாக சிறைக்கு அனுப்பப்படுவதாக கூறப்படுகிறதே?
பதில் : சிறைக் கைதிகளை வெறுமனே சும்மா இருக்க விட முடியாது. வேளா வேளைக்கு சாப்பாட்டைக் கொடுத்து அவர்களை பராமரித்துக் கொண்டிருக்க முடியாது. கைதியொருவரின் திறமைக்கேற்றவாறு அவர்களுக்கு வேலை கொடுக்க வேண்டும். சக்விதியை எடுத்துக்கொண்டால் அவர் மீதுள்ள குற்றச்சாட்டுக்களின்அடிப்படையில் அவரை நீண்ட காலம் சிறையில் அடைக்க வேண்டி வரலாம். அவரை ¦றுமனே சிறையில் அடைத்து வைத்திருக்காமல் அவரூடாக சிறைக் கைதிகளுக்கு ஆங்கில வகுப்புக்களை நடத்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அவரைப் போன்ற பலர் சிறையில் இருக்கிறார்கள். அவர்களிடமிருந்து நல்ல விடயங்களை எடுத்துச் சிறைக் கைதிகளை நல்ல பிரஜைகளாக உருவாக்க வேண்டும். இவ்வாறானவர்கள் பாதாள உலக கோஷ்டிகளின் தலைவர்களிடமோ அல்லது அநியாயக்காரர்களி டமோ கையேந்தாமல் இருக்கும் விதத்தில் சுய பொருளாதாரத் துடன் வெளியில் செல்ல வேண்டும். சிறைக் கைதிகளின் சேவையை நாட்டின் வளர்ச்சிக்கு ஒன்றிணைத்துக் கொள்வதுதான் மஹிந்த சிந்தனைத் திட்டமாகும்.
கேள்வி : சிறு தொகை தண்டப் பணத்தைக்கூட செலுத்த முடியாது சிறைக்குள் அடைக்கப்படுபவர்களு க்கு நிவாரணமளிக்கும் வேலைத் திட்டம் எதுவும் இருக்கிறதா?
பதில் : அண்மையில் நீர்கொழும்பு சிறைச்சாலையைப் பார்வையிடச் சென்றிருந்தேன். அப்போது கிராமப் பகுதியைச் சேர்ந்த பெண்ணொருவரை சந்தித்தேன். விபசாரத்தில் ஈடுபட்ட குற்றத்திற்காக அவருக்கு ஆயிரத்து ஐநூறு ரூபாய் தண்டமளிக்கப்பட்டிருந்ததாக தெரிவித்தார். விபசாரத்தை தொழிலாகச் செய்யும் ஒருவர் என்றால் அவருக்கு 1500 ரூபா இல்லை 30 ஆயிரம் ரூபாய் கூட தண்டப் பணம் செலுத்தச் சொல்லலாம். ஆனால் இந்தப் பெண்ணைப் பார்த்தால் தொழில் ரீதியாக விபச்சாரம் செய்பவராகத் தெரியவில்லை. தனது குடும்ப வறுமை காரணமாக அவர் விபசாரத்தில் ஈடுபட்டிருக்கலாம். நூறு ரூபா தண்டம் வழங்க வேண்டிய குற்றத்திற்கு 1500 ரூபா தண்டப் பணம் செலுத்த முடியாமல் மூன்று நான்கு மாதங்களாக சிறையில் இருந்த அப்பெண்ணுக்கு நாம் 1500 ரூபா செலுத்தியதன் பயனாக தறபோது அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக சமயப் பெரியார்கள் மற்றும் சமூக நல அமைப்புக்களிடம் ஒரு வேண்டுகோளை விடுத்திருக்கிறோம். இறைச்சிக்காக கறவைப் பசுக்கள் வெட்டப்படுவதை தடுத்து அதனை விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கும் எமது சமூகம் சிறிய தொகை தண்டப் பணத்தை செலுத்த முடியாது சிறைகளில் அடைபட்டுப் போயிருக்கும் அப்பாவிகளின் விடுதலைக்கு உதவுமாறு கேட்டுக்கொண்டிருக்கிறோம். தூண்டுகோள்களுக்கு ஆளாகி குற்றச் செயல்களில் ஈடுபட்டு தண்டிக்கப் பட்டிருப்போரை விடுதலை செய்வது தொடர்பாக என்னுடனோ எமது அமைச்சருடனோ அல்லது செயலாளருடனோ தொடர்பு கொண்டு ஒரு நிதியத்தை உருவாக்க முன்வருமாறு வேண்டுகோள் விடுத்திருக்கிறோம். இதன் மூலம் சிறிய குற்றங்களுக்காக தடுத்து வைக்கப் பட்டவர்களை விடுதலை செய்து அவர்களின் குடும்பத்தை முன்னேற்ற நடவடிக்கை எடுக்க முடியும்.
கேள்வி : வடக்கு கிழக்கு யுத்தத் தின் போது கைது செய்யப்பட்ட மற்றும் சரணடைந்தவர்களின் நிலைமைகள் எப்படியிருக்கிறது?
பதில் : தற்போதைய நிலையில் 11 நிலையங்களில் 7399 பேர் இருக்கின்றனர். இதில் 986 பெண்களும், 6413 ஆண்களும் அடங்குகின்றனர். பயங்கரவாத தடுப்பு பிரிவின் பொறுப்பில் உள்ளவர்களின் எண்ணிக்கை 686 பேராகும். புனர்வாழ்வளிக்கப்பட்டு இதுவரை 2439 ஆண்களும் 1149 பெண்களும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். 53 ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டது. 3550 பேர் விவசாயத் துறை மற்றும் தொழில்நுட்ப பயிற்சிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களின் விடுதலை தொடர்பாக நானும் எனது அமைச்சரும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், சட்டமா அதிபர், பொலிஸ் மா அதிபர், புலனாய்வுப் பிரிவு மற்றும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் உட்பட அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட பின்னர் ஒரு தீர்க்கமான முடிவெடுக்கப்பட்டிருக்கிறது. அதாவது இவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள முகாம்களில் வைத்தே வழக்குகள் விசாரிக்கப்பட்டு தீர்ப்பளிக்கப்படுவதற்கு இணக்கம் காணப்பட்டது. இதற்கு பூரண ஒத்துழைப்பை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் வழங்கியிருக்கிறார்.
கேள்வி : சிறைச்சாலைகளில் கைதிகளின் எண்ணிக்கை கூடிக் கொண்டே செல்கிறது. சிறைச் சாலைகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்படுமா?
பதில் : சிறைச்சாலைகளை அதிகரிப்பது எமது நோக்கமல்ல. எனினும் மனிதனை திருத்தும் நிலையம் ஒன்றை ஜனாதிபதியின் ஆலோசனையின் பேரில் வெல்லவாய பகுதியில் சுமார் ஆயிரம் ஏக்கர் காணியில் உருவாக்கப்படவுள்ளது. இதனை சுதந்திரத்தின் விடுதி என்ற பெயரில் உருவாக்க நாமல் ராஜபக்ஷ எம்.பி. தலைமையில் நானும் எனது அமைச்சரும் ஆரம்பிக்க நடவடிக்கை எடுத்துள்ளோம். இதற்கு தேவையான நிதியைப் பெற்றுக்கொண்ட பின்னர் இதனை ஆரம்பிக்க திட்டமிட்டிருக்கிறோம்.
நீர்கொழும்பு, வெலிக்கடை, களுத்துறை, காலி, மாத்தறை, தங்கல்ல, எம்பிலிப்பிட்டிய, பதுளை போன்ற சிறைச்சாலைகளிலும் தண்டனை வழங்கப்பட்ட குற்றவாளிகள் வெல்லவாயவில் அமைக்கப்படவுள்ள மனிதனை திருத்தும் நிலையத்தில் வைத்து பல்வேறு தொழில்துறையில் பயிற்சிகள் வழங்கப்படும். இங்கு ஒவ்வொரு வயதெல்லைக்குட்பட்டவர்களை அவர்கள் செய்த குற்றங்களுக்கு அமைய பிரிவுகளாக பிரித்து அவர்களுக்கு பயிற்சி வழங்கப்படும். நகரங்களுக்கு மத்தியில் இருக்கும் சிறைச்சாலைக் காணிகளை அரசாங்க அபிவிருத்தித் திட்டங்களுக்கு விடுவிக்கப்படவிருக்கிறது. அதுபோல கொழும்பிலுள்ள சேரிக் குடிசைகளில் வாழும் மக்களை குடியமர்த்துவதற்கு சிறைச்சாலைகள் திணைக்களத்திற்கு சொந்தமான 53 ஏக்கர் காணியில் 45 ஏக்கர் விடுவிக்கப்பட்டு அப்பகுதியில் மக்கள் குடியிருப்புக்களை கட்டத் தீர்மானித்துள்ளோம். வெலிக்கடை சிறைச்சாலையில் ஐந்து நீதிமன்றங்களுக்கு கொண்டு செல்ல வேண்டிய கைதிகளை மட்டும் அங்கு தடுத்து வைக்கப்படுவர்.
கேள்வி : வடக்கு கிழக்கு இளை ஞர்கள் விடுதலை செய்ய நடவடி க்கை எடுக்கப்படும் அதேவேளை மலையக இளைஞர்கள் விடுதலை செய்யப்படாமலிருப்பதற்கான காரணம் என்ன?
பதில் : அவ்வாறான பேதங்கள் எதுவும் கிடையாது. வடக்கு, கிழக்கு, மலையகம் ஏனைய பகுதிகளாக இருந்தாலும் அவர்கள் செய்த குற்றம் என்னவென்பதை ஆராய்ந்து கூடிய விரைவில் விடுதலை செய்வதற்கும் குற்றம் செய்ததாக ஊர்ஜிதம் செய்யப்பட்டவர்களுக்கு தண்டனை வழங்கப்படும். அப்பாவிகள் எவரையும் நீண்டகாலம் தடுத்து வைக்கும் நோக்கம் எமக்கு கிடையாது. வழக்குகள் தொடரப்பட்டிருந்தால் கூடிய விரைவில் அதனை முடித்து அவர்களுக்கான தண்டனை வழங்கப்படும். அதேவேளை நிரபராதிகள் விரைவில் விடுதலை செய்யப்படுவார்கள்.
கேள்வி : பிரதான எதிர்க் கட்சி யான ஐ. தே. க. அதன் அரசியல் வரலாற்றில் பெரும் பின்னடைவை நோக்கிச் செல்வதாக கூறப்படுகிறது. அதுபற்றிய உங்கள் அபிப்பிராயம் என்ன?
பதில் : நாட்டுக்கு பிரபலமான எதிர்க் கட்சியொன்று அவசியம். ஆனால் நாட்டில் உள்ள அரசியல்வாதிகளிடமுள்ள குற்றச்சாட்டு என்னவென்றால் பேச்சுக்கள்மூலமோ அல்லது கருத்துப் பரிமாறல்கள் மூலமோ தமது பிரச்சினைகளை தீர்ப்பதில்லை என்பதாகும். அவ்வாறே பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்ள வேண்டுமென புத்தரின் போதனைகள் கூறியிருக்கின்றன. அவ்வாறே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் செயற்படுகிறார். பிரச்சினைகளை உடனுக்குடன் பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்த்து தேவையான தீர்மானங்களை எடுப்பார். நீதிமன்றம், பாராளுமன்றம் ஆகியன சக்தி வாய்ந்தவையாக இருக்கின்றன. மக்களுக்கு அபிவிருத்தியும் மனித உரிமைகளுமே கிடைக்கிறது. இன்று மக்கள் தீர்மானம் எடுக்கும் சக்தியை பாராளுமன்றத்திற்கு வழங்கியிருக்கிறார்கள். பாரிய வேலைத் திட்டங்களை அரசாங்கம் முன்னெடுக்க முன்வந்துள்ளது. மக்களே ஐ. தே. கட்சியையும், ஜே. வி. பியையும் நிராகரித்துள்ளனர். கடந்த பொதுத் தேர்தலின் போது 70 ஆசனங்களை மாத்திரமே ஐ. தே. க பெற்றுள்ளது. 40 ஆசனங்களைக் கொண்டிருந்த ஜே. வி. பி. க்கு மூன்று ஆசனங்கள் மட்டுமே கிடைத்திருக்கிறது. எதிர்க் கட்சியின் அரசியல் நடவடிக்கைகளில் மக்கள் நம்பிக்கை கொண்டிருக்கவில்லை.
மூலம்/ஆக்கம் : நேர்காணல்You can leave a response, or trackback from your own site.
Leave a Reply