‘அழிந்த செல்வம்’ அழுதழுது சாட்சி சொன்னார் சிறிமான்ன

அங்கே நான் கண்ட காட்சி அபாயகரமானது. நூலகத்திலிருந்து மேலாக பாரிய புகை மண்டலம் வந்து கொண்டிருந்தது. அதாவது தெற்காசியாவிலேயே மிகப்பெரிய நூலகம் எரிந்து கொண்டிருந்தது. மக்களே நெஞ்சில் அடித்துக் கொண்டு அழுதனர். பலர் பதறிக்கொண்டு ஓடினர். எங்கள் செல்வம் அழிக்கப்பட்டு விட்டது என்று கதறியழுதனர்.

கொழும்பில் அமைந்துள்ள லக்ஷ்மன் கதிர்காமர் சர்வதேச கற்கைகளுக்கான நிலையத்தில் நேற்று கற்றுக்கொண்ட பாடங்களும் அனுபவங்களும் தொடர்பான தேசிய நல்லிணக்க ஆணைக்குழுவின் விசாரணை அமர்வில் கலந்துகொண்டு சாட்சியமளித்த போதே டபிள்யூ.எம். சிறிமான்ன இவ்வாறு தெரிவித்துள்ளார் .

தெற்கு மக்களோ வடக்கு மக்களோ கடந்த கால யுத்தத்துக்கு காரணமல்ல. மாறாக இருதரப்பு மக்களும் யுத்தம் காரணமாக பாதிக்கப்பட்டனர். அரசியல்வாதிகள் தமது அதிகாரங்களை தக்க வைப்பதற்காக எடுத்த தீர்மானங்களே இவ்வாறானதொரு பிரச்சினைக்கு வித்திட்டது என்பதே எனது நிலைப்பாடாகும். இவ்வாறு யாழ்ப்பாண மாநகரசபையில் முன்னர் பணியாற்றிய அரச ஊழியர் டபிள்யூ.எம். சிறிமான்ன தெரிவித்துள்ளார்.

இவ்விசாரணையின் போது டபிள்யூ.எம். சிறிமான்ன நான்கு தடவைகள் அழுது விட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து சாட்சியமளிக்கையில் கூறியதாவது: தெற்கை சேர்ந்த நான் 1979களில் யாழ். மாநகர சபையில் எழுதுவினைஞராகக் கடமை புரிந்தேன். அப்போது எனக்கு தமிழ் தெரியாது என்பதற்காக எனது வசதிக்காக மும்மொழியும் தெரிந்த ஒருவருடன் நான் பணிக்கு அமர்த்தப்பட்டேன்.மேலும் அங்குள்ள மக்கள் என்னை அன்புடன் பார்த்துக்கொண்டனர்.

அங்கு பணிபுரிந்த காலத்தில் அடிக்கடி யாழ். நூலகத்துக்கு செல்வதுண்டு. அங்கு பெரியவர்கள், சிறியவர்கள் என பலரும் பல இடங்களில் மிகவும் ஆர்வமாக வாசித்துக் கொண்டிருப்பார்கள். படிக்கட்டுக்களிலும் வாசித்துக்கொண் டிருப்பார்கள். அவ்வாறான காட்சியை தெற்கில் என்னால் காண முடியவில்லை.

அக்காலத்தில் நானும் மிகவும் ஆவலுடன் யாழ்.நூலகத்தில் பத்திரிகைகளைப் படிப்பேன்.ஆனால் இரண்டு மாதங்களே என்னால் அங்கு பணிபுரிய முடிந்தது. பின்னர் அங்கு ஏற்பட்ட பிரச்சினை காரணமாக நான் இடமாற்றம் பெற்று குருணாகல் பகுதிக்கு வந்தேன்.அதாவது அக்காலகட்டத்தில் லயனல் பெர்னாண்டோ என்பவர் யாழ்ப்பாணத்தின் அரசாங்க அதிபராக பணியாற்றினார்.அவர் திடீரென கொழும்புக்கு மாற்றப்பட்டார். இதனை யாழ். தமிழ்க் கட்சிகள் விரும்பவில்லை. இதன் தொடர்ச்சியாக ஏற்பட்ட பதற்றநிலைமை காரணமாகவே நான் வரவேண்டியேற்பட்டது.

அதன் பின்னர் 1981 ஆம் ஆண்டு ஜூன் 4 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் மாவட்ட அபிவிருத்தி சபை தேர்தல் நடந்தது. அக்கால கட்டத்தின் முக்கிய அமைச்சர் ஒருவரின் உத்தரவின் பேரில் நாங்கள் தேர்தல் கடமை களுக்காக யாழ்ப்பாணத்துக்கு ரயிலில் அழைத்துச் செல்லப்பட்டோம். வாக்களிப்பு காலை ஏழு மணிக்கு ஆரம்பமாகும் என்றும் காலை 10 மணிக்கு பின்னர் வாக்களிக்க வருகின்ற மக்களை இராணுவ உதவியுடன் விரட்டிவிட்டு வாக்குச்சீட்டில் நாங்களே புள்ளடியிட்டு பெட்டிகளில் இட வேண்டும் என்று கூறப்பட்டது. முக்கிய அமைச்சர் ஒருவரினால் இந்த அறிவுறுத்தல் விடுக்கப்பட்டது.

சில வருடங்களுக்கு முன்னர் மாநகரசபையில் பணியாற்றிவிட்டு அந்த நேரத்தில் அப்பகுதி மக்களுக்கு எதிராக என்னால் செயற்பட முடிய வில்லை.

எனவே நானும் மற்றுமொரு அரச ஊழியரும் தேர்தல் கடமைகளுக்கு செல்லாமல் அன்றைய தினம் வெளியே வந்துவிட்டோம். சிறிது நேரத்தின் பின்னர் யாழ். மாநகரசபைக்கு சென்றோம். மாநகரசபை மூடப்பட்டுக் கிடந்தது.

அதன் பின்னர் சில வாக்களிப்பு நிலையங்களுக்கு சென்றோம்.மாலை ஐந்து மணியாகிய நிலையிலும் வாக்களிப்புகள் நடைபெற்றுக் கொண்டிருந்ததை காண முடிந்தது. காலை 10 மணிக்கு பின்னர் வாக்களிக்க வருபவர்கள் விரட்டப் படவேண்டும் என்று எங்களுக்கு கட்டளை யிடப்பட்டிருந்தது எனக்கு உடனே நினைவுக்கு வந்தது. ஆனால் ஐந்து மணியாகியும் வாக்களிப்பு நடைபெற்றுக்கொண்டிருந்தது. சற்று விசாரித்துப் பார்த்தேன். யாழ். உதவித் தேர்தல் ஆணையாளரினால் நியமிக்கப்பட்ட உத்தியோகத்தர்கள் பல தடைகளையும் மீறி மக்களுக்கு வாக்களிக்க சந்தர்ப்பம் பெற்றுக்கொடுத்ததை காண முடிந்தது.

அதன் பின்னர் எனது சக உத்தியோகத்தருடன் நான் முன்னர் விரும்பி பத்திரிகை வாசிக்கும் இடமான யாழ். நூலகத்துக்கு சென்றேன். அங்கே நான் கண்ட காட்சி அபாயகரமானது. நூலகத்திலிருந்து மேலாக பாரிய புகை மண்டலம் வந்து கொண்டிருந்தது. அதாவது தெற்காசியாவிலேயே மிகப்பெரிய நூலகம் எரிந்து கொண்டிருந்தது. மக்களே நெஞ்சில் அடித்துக் கொண்டு அழுதனர். பலர் பதறிக்கொண்டு ஓடினர். எங்கள் செல்வம் அழிக்கப்பட்டு விட்டது என்று கதறியழுதனர்.

பின்னர் தேர்தல் முடிவுகள் வெளியாகின. என்ன தான் வாக்குகள் கொள்ளையடிக்கப்பட்டாலும் தேர்தலில் தமிழர் விடுதலை கூட்டணி வெற்றி பெற்றது.

தெற்கிலிருந்து வாக்கு கொள்ளையடிக்க சென்றவர்கள் சர்வதேச அபகீர்த்தியுடன் கொழும்பு திரும்பினர்.

இவ்வாறுதான் அன்று வடக்கு மக்களுக்கு அநீதி இழைக்கப்பட்டது.எனவே தற்போது ஒரு விடயத்தை வலியுறுத்திக் கூறுகின்றேன்.அதாவது வடக்கு மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளை விரைவாக தீர்க்க வேண்டும். இடம்பெயர்ந்த மக்கள் சகல வசதிகளுடனும் மீளக்குடியமர நடவடிக்கை அவசியம். மீண்டும் பிரச்சினை வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply