நவம்பர் 22இல் அடுத்த ஆண்டுக்கான வரவு-செலவுதிட்டம்
2011 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் எதிர்வரும் நவம்பர் 22 ஆம் திகதி நிதி அமைச்சர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல கூறினார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு நேற்று தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது.
இது தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த அமைச்சர் மேலும் கூறியதாவது, 2011 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இதன்படி, முதலாம் வாசிப்பு மீதான விவாதம் நவம்பர் 22 ஆம் திகதி நடைபெறும். இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் 22 ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரை நடைபெற உள்ளது.
குழு நிலை விவாதம் நவம்பர் மாதம் 29ஆம் திகதி முதல் டிசம்பர் 20 ஆம் திகதி வரை நடத்தப்பட உள்ளது. குழுநிலை விவாதத்திற்கான திகதி குறித்து கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்படும் என்றார்.
நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வரும் பாரிய அபிவிருத்தித் திட்டங்களை பூர்த்தி செய்யும் வகையில் 2011 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்திற்கான உத்தேச மதிப்பீட்டு ஆலோசனைகளை முன்வைக்குமாறு சகல அமைச்சர்களுக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஏற்கனவே அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.
சம்பிரதாய வரவு செலவுத் திட்டம் தயாரிக்கும், அதனை நடைமுறைப்படுத்தும் கட்டமைப்பிலிருந்து விலகி 2011 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட யோசனைகளை முன்வைக்குமாறும் அவர் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.
இது தவிர நாடு பூராவும் ஆரம்பிக்கப்பட்டுள்ள பொருளாதார உட்கட்டமைப்பு வளங்கள் மற்றும் கைத்தொழிற்துறை அபிவிருத்தி உள்ளிட்ட சகல செயற் திட்டங்களையும் பூர்த்தி செய்யும் வகையில் அடுத்த நிதியாண்டிற்கான நிதி ஒதுக்கீட்டை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி திறைசேரி அதிகாரிகளுக்கு பணித்துள்ளார். இதனடிப்படையில் 2011 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply