சமூக, கலாசார மேம்பாட்டிற்கு முதியோர் பங்களிப்பு அவசியம்
நாட்டின் சமூக, பொருளாதார, கலாசார மேம்பாட்டிற்கு முதியோர்களின் பங்களிப்பினைப் பெற்றுக் கொள்வது இன்றியமையாததென பிரதமர் டி. எம். ஜயரட்ன தெரிவித்துள்ளார்.
ஒக்டோபர் முதலாம் திகதி அனுஷ்டிக்கப்படவுள்ள சர்வதேச முதியோர் தினத்தை யொட்டிய வாழ்த்துச் செய்தியிலேயே பிரதமர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் தமது வாழ்த்துச் செய்தியில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது:-
முதியோர்கள் சுய மரியாதை யுடனும் அபிமானத்துடனும் வாழ்வதற்குத் தேவையான ஒத்துழைப்பினை வழங்குவதற்கு நாம் எந்நேரமும் தயாராக உள்ளோம். தற்போது முதியோர்களின் நலன்கருதி பல்வேறு நிகழ்ச்சித் திட்டங்கள் நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளதுடன், அதற்காக அரசாங்கமானது எந்நேரமும் அனுசரணை வழங்கி வருகின்றது.
மகிழ்ச்சிமிக்க தேகாரோக்கியமான முதியோர் தினமொன்று என்பதே இவ்வாண்டிற்கான முதியோர் தினத்தின் தொனிப் பொருளாகும். ஆரோக்கியம் உயர்ந்த பேறு. மனத்திருப்தி பாரிய செல்வம் என்ற புத்த பெருமானின் கூற்றினைப் பின்பற்றி மிகழ்ச்சியுடன் வாழ்ந்து வரும் முதியோர்களுக்கு ஆரோக்கியமான வாழ்வினை இலகுவாக அனுபவிக்க முடியும்.
முதியோர்களுக்கு மன மகிழ்ச்சியினைப் பெற்றுக் கொடுப்பதன் மூலம் ஆரோக்கியமான வாழ்விற்கான அடித்தளமிடப்படுவதுடன், அதற்காக தற்போது எமது நாட்டில் செயற்படுகின்ற பல்வேறு வகையான ஆன்மீக நிகழ்ச்சித் திட்டங்களின் மூலம் அதிக பயன்கிட்டும். முதியோர்கள் வாழ்வதற்கு மிகவும் பொருத்தமான இடம் அவர்கள் வாழ்ந்துவரும் குடும்பமாகும்.
எமது நாட்டின் முன்னேற்றத்திற்காக அளப்பரிய சேவையாற்றிய அனுபவம் மிகுந்து காணப்படும் முதியோர்களை முதியோர் இல்லங்களில் அடைத்து வைக்காது குடும்ப அங்கத்தவர்களினால் தமது குடும்பத்திலேயே பராமரிக்க வேண்டியமை இன்றைய காலத்தின் தேவையாகும்.
நல்ல பண்புள்ள பிள்ளைகள் ஒருபோதும் தமது வயது முதிர்ந்த பெற்றோர்களை பராமரிக்கும் பொறுப்பிலிருந்து விவகிச் செல்வதில்லை. அவர்கள் தமது எதிர்காலத்தை அமைத்துத் தந்த பெற்றோர்களை மிகவும் அபிமானத்துடன் பராமரித்து வருவார்கள். இதற்காக எமது இளம் தலைமுறையினர் செயற்படுவார்கள் என நான் நம்புகிறேன் எனவும் பிரதமர் மேலும் தெரிவித்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply