தமிழர்களின் எதிர்காலத்தை புலிகளின் தலைவர் பிரபாகரனே சூனியமாக்கினார்! தயா மாஸ்ரர்
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வே.பிரபாகரன் தமிழ் மக்களின் எதிர்காலத்தை சூனியம் ஆக்கினார். அவரது தமிழீழக் கனவுக்காக தமிழ் இளைஞர்கள் பலிக் கடா ஆக்கப்பட்டனர். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மனித உரிமைகளை ஒரு போதும் மதித்து நடந்ததே இல்லை.
அரச படையினரால் மேற்கொள்ளப்பட்ட மனிதாபிமான யுத்தத்தால்தான் நான் இன்று உயிரோடு இருக்கின்றேன். இப்படி ஒரு பரபரப்புப் பேட்டி ஒன்றை வழங்கி உள்ளார் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் ஊடகத்துறைப் பொறுப்பாளராக இருந்த தயா மாஸ்ரர்.
இதே இயக்கத்தில் மொழிபெயர்ப்பாளராக இருந்த ஜோர்ச் மாஸ்ரருடன் சேர்ந்த தயா மாஸ்ரர் கடந்த வருடம் ஏப்ரல் 22 ஆம் திகதி முல்லைத் தீவு மாவட்டத்தின் புதுமாத்தளன் பிரதேசத்தில் வைத்து அரச படையினரிடம் சரண் அடைந்தார்.
இவர் தற்போது டான் தொலைக்காட்சிச் சேவையின் யாழ்.மாவட்டத்துக்கான செய்தி ஆசிரியராக கடமை ஆற்றுகின்றார். இவர் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய விசேட பேட்டி ஒன்றிலேயே இவ்வாறெல்லாம் கூறி உள்ளார்.
இவர் இப்பேட்டியில் முக்கியமாகத் தெரிவித்துள்ளவை வருமாறு:-
”தமிழ் மக்கள் வன்முறையையோ, யுத்தத்தையோ ஒருபோதும் விரும்பி இருக்கவில்லை. புலிகள் இயக்கம்தான் யுத்தத்தை தமிழர்கள் மீது நிர்ப்பந்தித்தது. இளைஞர்களை மூளைச் சலவை செய்து சிங்களவர்களுக்கு எதிராக திருப்பி விட்டது. குறிப்பாக 1983 ஆம் ஆண்டுக்கு பின்னர் பிறந்த இளைஞர்கள் தவறாக வழி நடத்தப்பட்டனர். புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் தமிழீழக் கனவு நிறைவேறும் என்றே இறுதி வரை நம்பினார். அவரின் கனவுக்காக இளைஞர்கள் பலிக் கடா ஆக்கப்பட்டனர்.
பல்லாயிரக் கண்க்கான அப்பாவி உயிர்கள் காவு கொள்ளப்பட்டன. அவரது தமிழீழக் கனவுக்காக மக்கள் சொந்த வாழ்க்கையையே அர்ப்பணிக்க வேண்டும் என்று எதிர்பார்த்து விட்டார். தமிழீழத்தை அடைகின்றமைக்காக புலிகள் வடக்கையும், கிழக்கையும் ஆக்கிரமித்து வைத்திருந்தனர். ஆனால் இத்தமிழீழக் கனவு ஒரு போதும் நிறைவேற முடியாதது என்பது வேறு விடயம். புலிகள் ஒருபோதும் மனித உரிமைகளை மதித்து நடந்தமையே கிடையாது. அவர்கள் எப்படி எல்லாம் மக்களைக் கொடுமைப்படுத்தினர் என்பதை நான் நன்றாகவே நேரில் அறிவேன்.
அவர்களை எதிர்த்தவர்களை எல்லாம் போட்டுத் தள்ளினார்கள்.புலிகளின் பயங்கரவாத அச்சுறுத்தலின் கீழ்தான் தமிழர்கள் வாழ்ந்தார்கள். புலிகள் இயக்கம் மக்களை துன்புறுத்தியது. சித்திரவதை செய்தது. மனிதாபிமானம் அற்ற விதத்தில் கொடுமைப்படுத்தியது. இதனால் நான் அந்த இயக்கத்தின் தலைமைத்துவத்தை உள்ளூர வெறுத்தேன்.ஆனால் நான் மௌனியாகவே இருந்து விட்டேன். புலிகள் இயக்கத்துக்கு எதிராக என்னால் எதையுமே செய்ய முடியவில்லை.
நான் புலிகள் இயக்கத்துக்கு எதிராக வாய் திறந்திருந்தால் கூட எனது கதி அதோ கதிதான்.புலிகள் இயக்கத்தில் இருந்தபோது நான் இராணுவச் செயற்பாடுகளில் ஒரு போதும் ஈடுபட்டு இருக்கவே இல்லை. மக்கள் புலிகள் இயக்கத்துக்கு எதிராக கிளர்ந்தெழுந்த சந்தர்ப்பங்களும் உண்டு. கடுமையான வரிகளை புலிகள் விதித்தபோதெல்லாம் மக்கள் கிளர்ந்தெழுந்தனர். ஆனால் அவர்களை எல்லாம் புலிகள் கொன்றொழித்து விட்டார்கள்.எனவே இம்மக்கள் கிளர்ச்சிகள் மௌனித்து விட்டன. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ புலிப் பயங்கரவாதத்தை பூண்டோடு அழிப்பார் என்று கங்கணம் கட்டினார்.
எனவே புலிகள் இயக்கத்தின் முடிவு எப்போது அமையப் போகின்றது என்பதை என்னால் அப்போதே ஊகிக்க முடிந்தது.புலிகளிடம் இருந்து அவர்களை அரசு மீட்கும் என்கிற நம்பிக்கையில் மக்கள் இருந்தார்கள். புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் இருந்த மக்கள் இராணுவத்தின் வருகைக்காகக் காத்து இருந்தனர். அரச கட்டுப்பட்டுப் பகுதிக்குத் தப்பி ஓடவும் தயாராக இருந்தார்கள். ஆனால் உயிரைக் காக்க ஓடிய மக்கள் புலிகளால் சுடப்பட்டனர். யுத்ததின் இறுதி நாட்கள் புலிகள் மக்களை மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்தினர்.
மோதல் தவிர்ப்புப் பிரதேசமான புதுமாத்தளனின் கனரக ஆயுதங்களை நிறுவி அங்கிருந்து அவர்கள் இராணுவத்தைத் தாக்கினர்.புதுமாத்தளன் மக்கள் செறிந்து வாழ்ந்த பிரதேசம். இராணுவம் திருப்பித் தாக்க வேண்டும் என்பதுதான் புலிகளின் எதிர்பார்ப்பாக இருந்தது. ஆனால் நாங்கள் அதிர்ஷ்டசாலிகள். இராணுவம் திருப்பித் தாக்கவே இல்லை.மாறாக புலிகளிடம் இருந்து எங்களைக் காப்பாற்றியது. இராணுவத்தின் மனிதாபிமான யுத்த நடவடிக்கைக்கு நாம் தலை வணங்க வேண்டும்.
இராணுவத்தின் மனிதாபிமான யுத்த நடவடிக்கை காரணமாகவே நான் இன்று உயிரோடு இருக்கின்றேன். இரண்டு இலட்சத்து 80 ஆயிரம் பொதுமக்கள் வரை புலிகள் இயக்கத்திடம் இருந்து உயிருடன் காப்பாற்றப்பட்டார்கள். விடுதலை பெற்றார்கள். நான் ஒரு இருதய நோயாளி. இதனால் புலிகள் இயக்கம் என்னை ஓரம் கட்டியும் இருந்தது. சரண் அடைந்த என்னை அரச படையினர் மனிதாபிமானத்தோடு நடத்தினர். நன்றாக பராமரித்தனர். நான் தற்போது எனது குடும்பத்துடன் யாழ்.வடமராட்சியில் பருத்தித்துறையில் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றேன்.
கடந்த கால அரசுகள் இராணுவ மூலோபாயத்தில் தவறுகளை இழைத்திருந்தன. அதனால்தான் புலிகளை வெற்றி கொள்ள அவற்றால் முடியவில்லை. ஆனால் தற்போதைய அரசு மிகவும் தந்திரோபாயமாகச் செயற்பட்டது. படையினரால் தொடர்ச்சியாக மேற்கொளளப்பட்ட தாக்குதல்களே புலிகளுக்கு இறுதி முடிவை ஏற்படுத்தியது. கடந்த 30 வருட காப யுத்தத்தால் தமிழ் மக்களுக்கு எந்த ஒரு நன்மையுமே கிடைக்கவில்லை. தமிழர்கள் இப்போதுதான் பயங்கரவாத அச்சுறுத்தல்கள் இன்றி நிம்மதியாகவும், நிம்மதியாகவும், சுதந்திரமாகவும் வாழுகின்றனர். சமாதானம் மலர்ந்துள்ளது.
பல தசாப்த காலங்களுக்குப் பின் வட பகுதியில் அபிவிருத்திப் பணிகள் இடம்பெறுவதைக் காண முடிகின்றது. அரசு தமிழ் மக்களின் நலனுக்காக மிகவும் சிறந்த முறையில் சேவை ஆற்றுகின்றது. மீண்டும் ஒரு இருண்ட யுகத்துக்குச் செல்ல தமிழர்கள் எவரும் விரும்பவே இல்லை. புலம்பெயர் தமிழர்கள் நாம் அனுபவித்த துன்பங்களை அனுபவிக்கவில்லை.அவர்கள் புலிகள் இயக்கத்துக்காக விரும்பியோ, விரும்பாமலோ நிதி சேகரித்துக் கொடுத்தார்கள். நாங்கள் இங்கு அவஸ்தைப்பட்டோம்.
எனவே இன்றைய சூழலில் புலம்பெயர் சமூகத்துக்கு நிறையவே பொறுப்புக்கள் இருக்கின்றன. வட பகுதி மக்கள் சொந்தக் காலில் நிற்கின்றமைக்கு உதவ வேண்டிய உன்னதமான பொறுப்பு அவர்களுக்குண்டு.எமது தலைமுறைக்கு சிறந்த எதிர்காலத்தையும் அபிவிருத்தியையும் அவர்கள் பெற்றுத் தர வேண்டும்.
புலிகள் இயக்கத்துக்கு புத்துயிர் கொடுக்க நினைக்கின்றமையும், புலிக் கொள்கைகளை பரப்புகின்றமையும் பிரயோசனமற்ற காரியங்கள் என்பதை புலம் பெயர்ந்த தமிழ் சமூகம் விரைவில் புரிந்து கொள்ளும். புலிகள் சார்பு சக்திகளுக்கு இனி சர்வதேச அரங்கில் இடம் கிடையாது.புலம் பெயர்ந்த தமிழ் சமூகம் புலிச் சார்புச் சிந்தனையில் இருந்து விடுபட்டுத் தமிழ் மக்களின் நலனுக்காகப் பாடுபட வேண்டும்.”
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply