கிளிநொச்சி கைப்பற்றப்பட்டதும் வடக்கிலும் ஜனநாயகம் தோற்றுவிக்கப்படும் ஜனாதிபதி
இராணுவ ரீதியில் தாம் தோற்கடிக்கப்பட்டு, பலவீனமடைந்த நிலையிலிருக்கும் போது யுத்த நிறுத்த அறிவிப்பை விடுப்பது விடுதலைப் புலிகளின் வழமையானதொரு விடயமாகி விட்டது.
ஆகவே புலிகளின் இந்த யுத்த நிறுத்த அறிவிப்பை ஏற்று யுத்தத்தை நிறுத்த அரசாங்கம் தயாராகவில்லையென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
இந்தியாவிலிருந்து வெளியாகும் நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகைக்கு அவர் அளித்த பேட்டியிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் அந்தப் பேட்டியில் மேலும் தெரிவித்துள்ளதாவது,
யுத்தத் தோல்விகளின் போது தமது இயக்கத்தை ஆயுத ரீதியாகக் கட்டியெழுப்பும் ஒரு தந்திரோபாயமாக புலிகள் இவ்வாறான யுத்த அறிவிப்பை விடுப்பது வழமையான விடயம். இது அவர்களது மனப்பூர்வமான அழைப்பல்ல. தமிழ் மக்களின் பிரச்சினைக்கு யுத்தத்தின் மூலம் தீர்வு காண முடியாதென்பதனை நான் ஏற்றுக் கொண்டுள்ளேன். ஆனால் பயங்கரவாதம் யுத்தத்தின் மூலமே ஒழிக்கப்பட வேண்டும்.
தமிழ் மக்களின் பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையில் நாம் சர்வ கட்சிக் குழுவொன்றை அமைத்துள்ளோம்;. இந்த சர்வ கட்சிக் குழுவில் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் இணைந்து ஆலோசனைகளை முன் வைக்க வேண்டும். தமிழ் தேசியக் கூட்டமைப்பை சர்வ கட்சிக் குழுவில் இணைந்து கொள்ளுமாறு இந்தச் சமயத்தில் வேண்டுகோள் விடுக்கிறேன். சர்வ கட்சிக் குழுவின் சிபார்சுகளை நான் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்.
கிழக்கு மாகாணத்தைப் புலிகளின் பிடியிலிருந்து முற்றாக மீட்டு, அங்கு தற்போது ஜனநாயகத்தை நிலை நாட்டியுள்ளோம். மாகாண சபைத் தேர்தலை நடத்தியதன் மூலம் கிழக்கு மாகாண மக்கள் தமிழ் முதலமைச்சரொருவரைத் தெரிவு செய்துள்ளனர். இந்த மாகாண சபைக்குப் பொலிஸ் அதிகாரம் வழங்குவற்கு முன்னோடியாகப் பிரதிப் பொலிஸ்மா அதிபராகத் தமிழரொருவரை நாம் நியமித்துள்ளோம்.
முல்லைத்தீவு, கிளிநொச்சிப் பிரதேசங்களில் வாழும் பொது மக்கள் அங்கிருந்து சுயமாக வெளியேற விரும்பினாலும் புலிகள் அவர்களைப் பலவந்தமாக அங்கு தடுத்து வைத்துள்ளனர். தமிழ் மக்கள் தொடர்பாக அக்கறையுடன் செயற்படும் தமிழ்த் தலைவர்கள் இந்தச் சந்தர்ப்பத்தில் புலிகளின் பிடியிலிருந்து மக்களை விடுவிக்க உதவ வேண்டும்.
கிளிநொச்சிப் பிரதேசத்தைக் கைப்பற்றும் எமது படையினரின் முயற்சி விரைவில் வெற்றியளிக்கும். அதன் பின்னர் கிழக்கு மாகாணத்தைப் போன்றும் வடக்கிலும் ஜனநாயகக் கட்டமைப்பை ஏற்படுத்தத் தேவையான சகல நடவடிக்கைகளையும் அரசாங்கம்
மேற்கொள்ளும். இவ்வாறு ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply