6 வருடங்களில் 62,516 பேர் காணாமல் போயுள்ளனர்

2002ஆம் ஆண்டு முதல் 2007ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் இலங்கையில் மொத்தமாக 62,516 பேர் காணாமல் போயிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
காணாமல் போனவர்களில் 25,764 பேர் தொடர்ந்தும் எங்குள்ளார்கள் என்பது பற்றிய விபரங்கள் எதுவும் தெரியவரவில்லையென பொலிஸ் தலைமையகத்தின் அறிக்கைகள் மூலம் தெரியவருவதாக கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

2007ஆம் ஆண்டில் 4,743 பேர் காணாமல் போயிருப்பதுடன், இவர்களில் 25 பேர் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளதாகவும், காணாமல் போன பெண்களில் 6 பேர் பாலியல் துஸ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் மீட்கப்பட்டதாகவும் அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த வருடம் காணாமல் போனவர்களில் 2025 பேர் வீடு திரும்பியிருப்பதுடன், 2718 பேர் இன்னமும் கண்டுபிடிக்கப்படவில்லையெனவும் கூறப்படுகிறது.

பொலிஸ் தலைமையகத்தின் தகவுக்கு அமைய கடந்த 6 வருட காலப்பகுதியில் 2004ஆம் ஆண்டே கூடுதலானவர்கள் காணாமல் போயிருப்பதாகவும், அந்த ஆண்டில் 16,098 பேர் காணாமல் போயிருப்பதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 8888 பேர் திரும்பியிருப்பதுடன், 7,210 பேர் இன்னமும் கண்டுபிடிக்கப்படவில்லையெனவும் கூறப்படுகிறது.

2005ஆம் ஆண்டு 14,118 பேர் காணாமல் போனதுடன், அதில் 8544 பேர் கண்டுபிடிக்கப்பட்டதுடன், 5574 பேர் கண்டுபிடிக்கப்படவில்லையெனவும் பொலிஸ் தகவல்களை மேற்கோள்காட்டி கொழும்பு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

இதேவேளை, இலங்கையில் காணாமல் போனவர்களில் பெரும்பாலானவர்கள் திரும்பிவிட்டார்கள் என காணாமல் போனவர்கள் தொடர்பாக ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு தொடர்ச்சியாகக் கூறிவருகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply