நத்தார், புத்தாண்டை முன்னிட்டு குடாநாட்டில் இரவு ஊரடங்கு தளர்வு

யாழ்ப்பாண குடாநாட்டில் அமுலிலுள்ள இரவு நேர ஊரடங்குச் சட்டம் கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டும் புதுவருடத்தை முன்னிட்டும் தளர்த்தப்படவுள்ளதாக பலாலி இராணுவ தலைமையகம் அறிவித்துள்ளது.
கிறிஸ்மஸ் பண்டிகை மற்றும் புத்தாண்டு நள்ளிரவு ஆராதனைகளில் மக்கள் கலந்து கொள்வதற்கு வசதியாகவே ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டுள்ளது.

இது தொடர்பாக யாழ்ப்பாண ஆயர் அதி வண. தோமஸ் சௌந்தரநாயகம் ஆண்டகை யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜீ.ஏ.சந்திர சிறியிடம் விடுத்திருந்த கோரிக்கையை தொடர்ந்து ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டுள்ளது.

இதன்படி 24ஆம் திகதி புதன்கிழமையும் 31 ஆம் திகதி புதன்கிழமையும் இரவு நேர ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் புனித மரியாள் பேராலயத்தில் ஆயர் தோமஸ் சவுந்தரநாயகம் தலைமையிலும் வட்டுக்கோட்டை பேராலயத்தில் தென்னிந்திய திருச்சபை ஆயர் அதி. வண. எஸ். தியாகராஜா தலைமையிலும் கிறிஸ்மஸ் நள்ளிரவு ஆராதனைகள் நடைபெறவுள்ளன.

குடாநாட்டிலுள்ள முக்கிய தேவாலயங்களில் கிறிஸ்மஸ் நள்ளிரவு வழிபாடுகள் நடைபெறவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதேவேளை, குடாநாட்டில் கிறிஸ்மஸ் கரோல் நிகழ்வுகளும் ஒளி விழாக்களும் அமைதியான முறையில் நடைபெற்று வருகின்றன.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply