யாழ். நூலகம் தாக்கப்பட்டதாக வெளியான செய்தியில் உண்மையில்லை ஜனாதிபதி செயலகம் முற்றாக மறுப்பு
யாழ். பொதுநூலகம் மீது எந்தவொரு தாக்குதலும் நடத்தப்படவில்லையென ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது. “யாழ். நூலகம் மீண்டும் தாக்குதலுக்குள்ளா னது” என சண்டே லீடர் பத்திரிகையில் வெளியான செய்தியையும் ஜனாதிபதி செயலகம் மறுத்துள்ளது. இது தொடர்பாக ஜனாதிபதி செயலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, ஜனாதிபதி செயலகத்தைச் சேர்ந்தவர்களின் உதவியுடன் யாழ். நூலகம் மீண்டும் தாக்குதலுக்குள்ளானது என 31 ஆம் திகதி சண்டே லீடர் பத்திரிகை செய்தியொன்றை வெளியிட்டிருந்தது. இச்செய்தியானது அடிப்படையற்றதுடன் எந்தவொரு ஆதாரமும் இன்றி வெளியிடப்பட்டுள்ளது.
பொலிஸாரும் ஏனைய சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் நடத்திய விசாரணைகளில் அவ்வாறானதொரு தாக்குதல் சம்பவம் நடைபெறவோ, அதில் ஜனாதிபதி செயலகத்தைச் சேர்ந்தவர்கள் எவரும் தொடர்புபடவோ இல்லையென்பதும் தெளிவாகியுள்ளது.
யாழ். பொது நூலகத்துக்குள் நுழைந்த குழு புத்தகங்களை அலுமாரிகளிலிருந்து எடுத்து நிலத்தில் வீசியதாகவும், பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் மற்றும் பாதுகாப்புத் தரப்பினர் சமரசம் செய்ததாகவும் அந்தச் செய்தியில் மேலும் குறிப்பிட்டுள்ளது. ஆனால் அவ்வாறான தாக்குதல் சம்பவங்களும் நடைபெறவில்லையென்பதை பொலிஸாரும் ஏனைய சம்பந்தப்பட்ட தரப்பினரும் எமக்கு உறுதிப்படுத்தியுள்ளனர்.
எந்தவொரு அதிகாரம் வாய்ந்த தரப்பின் உறுதிப்படுத்தலின்றி வெளியிடப்பட்டிருக்கும் இச் செய்தி தொடர்பாக நாம் வருத்தமடைகிறோம். உறுதிப்படுத்தப்படாத தரப்புத் தகவல்களையும், இனந்தெரியாத நபர்களின் தகவல்களையும் கொண்டே இந்தச் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
மோதல் காலத்தில் இருந்த சூழ்நிலை மீண்டும் ஏற்படாத வகையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் கொள்கையுடனே அரசாங்கம் செயற்பட்டு வருகிறது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply