யாழ், நூலக சம்பவம் குறித்து யாழ், மேயர் அறிக்கை

யாழ், பொது நூலக சம்பவம் குறித்து யாழ், மாநகர மேயர் அறிக்கையொன்றின் மூலம் விளக்கமளித்துள்ளார். அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, யாழ் மாநகர சபையின் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் பொதுசன நூலகம் சம்பந்தமாக வெளிவந்து கொண்டிருக்கும் பத்திரிகைச்செய்திகள், பேசப்படும் செய்திகள் தொடர்பாக விளக்கமளிக்க வேண்டிய பொறுப்பு மாநகர முதல்வர் என்ற வகையில் எனக்குள்ளது என்பதனால் உண்மை நிலையை தெளிவுபடுத்துகின்றேன்.

23.10.2010 பி.ப 05.15 அளவில் யாழ் நூலகம் சம்பந்தமாக தொலைபேசி அழைப்பு வந்தபோது பார்வையாளர்கள் கற்கள், பொல்லுகளுடன் காணப்படுகின்றார்கள் நீங்கள் இதில் தலையிட்டு நிலைமையை கட்டுப்படுத்த வேண்டும் என்று எனக்கு அறியத்தரப்பட்டது.

மக்களின் தேவைகளை, பிரச்சனைகளை உடனடியாக குறித்த இடத்திற்கு விரைந்து சென்று நிறைவேற்றி வரும் முதல்வர் என்ற வகையில் அன்றைய தினம் காலஞ்சென்ற எனது அன்புத்தந்தையாரின் பூத உடல் அஞ்சலிக்காக வீட்டில் வைக்கப்பட்டிருந்த உணர்வுபூர்வமானதும் வேதனை தரும் வேளையிலும் உடனடியாக அந்த இடத்திற்குச் செல்ல முடியாத நிலையில் யாழ் பொலிஸ் தலைமைப்பீட அதிகாரிக்கு தொலைபேசி மூலம் இத்தகவலை தெரியப்படுத்தி உண்மை நிலைமையை உடனடியாக எனக்கு அறியத்தருமாறு பணித்திருந்தேன்.

உடனடியாக அப்பகுதிக்கு விரைந்து சென்ற பொலிஸ் தலைமைப்பீட அதிகாரி சில நிமிடத்திற்குள் என்னுடன் தொடர்பு கொண்டு நீங்கள் கூறிய மாதிரியான சம்பவம் எதுவும் நடக்கவில்லை, தங்களுக்கு தவறான செய்தி வந்துள்ளதாகவும் நிலைமை சாதாரணமாக உள்ளதாகவும் எனக்கு உடனடியாக அறியத்தந்தார்.

இதனைத்தொடர்ந்து பிரதம நூலகருடன் தொடர்பு கொண்டு கேட்ட போது பொலிஸ் அதிகாரி கூறிய மாதிரியே எனக்கு பதில் கிடைத்தது. புத்தகங்கள் எடுத்து வீசப்பட்டன கற்களுடன் பார்வையாளர்கள் காணப்பட்டனர். நூலகத்தை திரும்பவும் தாக்க முற்பட்டார்கள் என்ற செய்திகளை பொறுப்புள்ள முதல்வர் என்ற வகையில் முற்றாக மறுக்கின்றேன்.

பாரம்பரிய கைத்தொழில்கள், மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கூறியது போன்று பொது நூலக சம்பவத்தின் உண்மை நிலையை அறியாது பத்திரிகைகள் ஊதிப்பெருப்பித்துள்ளனர் என்பது தான் உண்மையாகும்.

21.10.2010, 22.10.2010, 23.10.2010 ஆகிய தினங்களில் யாழ் நூலகத்தின் கேட்போர் கூடத்தில் மருத்துவ சங்கத்தினரின் அகில இலங்கை மாநாடு நடைபெற்றது. இம்மாநாட்டிற்கு இலங்கையின் சகல பாகங்களிலிருந்தும் நூற்றுக்கணக்கான வைத்தியர்களும் நிபுணர்களும் மருத்துவக் கல்லூரி மாணவர்களும் கலந்து கொண்டிருந்தனர்.

சுற்றுலாப்பயணிகள் வழமை போல யாழ் நூலகத்தை பார்வையிட வந்திருந்த பொழுது 21, 22, 23ம் திகதிகளில் மாநாடு நடைபெறுகின்றமையால் 23ம் திகதி எதுவித தடங்கலுமின்றி வழமை போன்று பார்வையிடலாம் என்று அறிவுறுத்தல் பலகையில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதனால் 23ம் திகதி உரிய நேரத்தில் மூன்று நாட்களுக்குமான பார்வையாளர்கள் திரண்டிருந்தமை யாவரும் அறிந்த உண்மை.

யாழ் நூலகத்தை பார்வையிடல் என்பது இலங்கையிலுள்ள ஏனைய நூலகங்களுடன் ஒப்பிட முடியாது என்பது பலரதும் கருத்தாகும். இதனாலேயே யாழ் மாநகர முதல்வராக பதவியேற்ற காலம் தொட்டு நூலக வாசகர்களிடமிருந்தும் சுற்றுலாப் பயணிகளிடமிருந்தும் வேறும் பல நிறுவனங்களிடமிருந்தும் யாழ் நூலகத்தை பார்வையிடல் சம்பந்தமான கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டிருந்தது.

இது தொடர்பாக மாநகர சபை மாதாந்த பொதுக்கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டு சபை உறுப்பினர்கள் யாவராலும் உணரப்பட்டிருந்த நிலையில் நூலக வாசகர்களுக்காக பி.ப 07.00 வரை காலத்தின் தேவை கருதி நீடிக்கப்பட்டது. இதில் பி.ப 05.00 தொடக்கம் 06.00 வரை சுற்றலாப்பயணிகளை அனுமதிக்கலாம் என முடிவெடுக்கப்பட்டது.

கடந்த மாத மாதாந்த பொதுக்கூட்டத்தில் 01.01.2011 முதல் சுற்றலாப்பயணிகளின் நுழைவுக்கட்டணமாக ரூபா 10 அறவிடலாம் என்பதை சபை தீர்மானித்துள்ளது என்பதனை இச்சந்தாப்பத்தில் தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன்.

23ம் திகதி நூலகத்தை பார்வையிடுவதற்காக ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டதற்கமைய யாழ் நூலக முன் வாசலில் சுற்றுலாப்பயணிகள் கூடி நின்றனர். இந்நிலைமையினை கருத்தில் கொண்டு பிரதம நூலகர் மாநாட்டு ஏற்பாட்டாளருடன் ஆலோசித்து மாநாடு பி.ப. 05.30 மணிக்கு முடியவிருப்பதனால் அந்நேரம் தொடக்கம் சுற்றுலாப்பயணிகளை உள்ளே அனுமதிக்கலாம் என்பதனை சுற்றுலாப்பயணிகளுக்கு தெரியப்படுத்துமாறு கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் பாதுகாப்பு உத்தியோகத்தருக்கு அறியப்படுத்தினார்.

இந்நிலையில் ஏமாற்றமடைந்த சுற்றுலாப்பயணிகளுக்கும் நூலக நிர்வாகத்தினருக்குமிடையில் தர்க்கம் ஏற்பட்டது உண்மையே. இதன் முடிவில் சுற்றுலாப்பயணிகள் நூலகத்தை பார்வையிட அனுமதிக்கப்பட்டனர். பத்திரிகைச்செய்திகள் குறிப்பிடுவது போன்று நூல் நிலையத்தினுள் அத்து மீறி புகுந்த தென்னிலங்கையிலிருந்து வந்தவர்களால் காடைத்தனம் கட்டவிழ்த்து விடப்பட்டது.

நூல்கள் தூக்கி வீசப்பட்டது என்பதும் இச்செயற்பாடுகள் பொலிஸாரின் முன்னிலையிலும் இராணுவ அதிகாரிகளின் முன்னிலையிலும் நடைபெற்றது என்பதும் உண்மைக்கு புறம்பான செய்தியாகும்.

இதேவேளை 29.10.2010ம் தினத்தன்று பத்திரிகை மூலமாக பகிரங்க அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் யாழ் நூலக கேட்போர் கூடத்திற்கு யாழ் பல்கலைக்கழக பிரதம நூலகர், யாழ் நூலகக்குழு, கௌரவ மாநகர சபை உறுப்பினாகள், சட்டத்தரணிகள், யாழ் மாநகர சபை உத்தியோகத்தர்கள் மற்றும் நலன்விரும்பிகள் என பலதரப்பட்டோர் இதில் கலந்து கொண்டனர்.

இதில் மாநகர சபையின் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டு இதன் உண்மை நிலைமையினை ஆழமாக புரிந்து கொண்டு கருத்துக்களை கூறியமைக்காக அவர்களுக்கு நன்றி கூற கடமைப்பட்டிருக்கின்றேன்.

யாவரதும் கருத்துக்களை கேட்டறிந்த பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறு தொழில் அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, நூலக நிர்வாகத்தினர் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸார் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் சுற்றுலாப்பயணிகளை உட்பிரவேசிக்க அனுமதித்திருந்தால் மாநாட்டினை பாதிக்கும் என்ற வகையில் தடுத்து நிறுத்தியமையையும், சுற்றுலாப்பயணிகள் தம்மால் நூலகத்தை பார்வையிட முடியவில்லையே என்ற கசப்புணர்வு ஏற்பட்டமையையும் உணர்ந்து கொண்டிருந்ததை வெளிப்படுத்தினார்.

மேலும் தனக்கு இச்சம்பவம் தெரிந்திருந்தால் அவ்விடத்திற்கு உடனடியாக விரைந்து சென்று இருபகுதியினருக்கும் இடையே ஏற்பட்டிருந்த சுமுகமற்ற நிலைமையினை முடிவிற்கு கொண்டுவந்திருக்கலாம் என்ற உணர்வில் அமைச்சர் பிரச்சனைகளை மேலும் வளர்க்காமல் அரச பிரதிநிதி என்ற வகையில் மன்னிப்பு கோரினார்.

அத்துடன் எதிர்வரும் காலங்களில் இவ்வாறான தவறுகள் நடைபெறுவதை தடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என உறுதிமொழி வழங்கினார். இதன் உண்மை நிலையினை அறியாது இச்சம்பவத்தை பூசி மெழுகும் வகையில் அமைச்சர் கூறியதாக பத்திரிகையில் வந்த அறிக்கைகளை அக்கூட்டத்தில் கலந்து கொண்டேன் என்ற வகையில் இதனை முற்றாக மறுக்கின்றேன்.

பகிரங்கமாக அறிவுறுத்தப்பட்ட கூட்டத்தில் யாழ் பொதுசன நூலகத்தில் கரிசனை உள்ளவர்கள் என்று கூறிக்கொண்டு கூட்டத்தில் கலந்து கொண்டு உண்மை நிலையை அறியாமல் தொடர்ந்து பொதுமக்களை திசைதிருப்பும் வகையில் பொறுப்பற்ற அறிக்கைகளை வெளிவிடுவதனை வன்மையாக கண்டிக்கின்றேன்.

மாண்புமிகு ஜனாதிபதி அவர்களின் பணிப்பின் பெயரில் பொலிஸாரும் ஏனைய சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் நடத்திய விசாரணைகளில் அவ்வாறனதொரு தாக்குதல் நடைபெறவோ அதில் ஜனாதிபதி செயலகத்தை சேர்ந்தவர்கள் எவரும் தொடர்புபடவோ இல்லை என்பதனை ஜனாதிபதி செயலகம் தெளிவாக அறிவித்துள்ளது.

உண்மை நிலையை அறியாமல் உறுதிப்படுத்தலின்றி வெளியிடப்பட்டிருக்கும் உண்மைக்கு புறம்பான செய்திகள் தொடர்பாக வருத்தமடைகின்றேன். உறுதிப்படுத்தப்படாத தரப்பினரின் தகவல்களையும் இனந்தெரியாத நபர்களின் தகவல்களை கொண்டு யாழ் பொது நூலகம் பற்றி செய்திகள் வெளியிடப்பட்டுள்ளது.

மோதல் காலத்திலிருந்த சூழ்நிலை ஏற்படாத வகையில் இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தினை ஏற்படுத்தும் கொள்கையுடனேயே யாழ் மாநகரசபை செயற்பட்டு வருகின்றது என்பதனை உறுதிபட கூறிக்கொள்கின்றேன். என யாழ் மாநகர முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜா தனது அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply