புலிகள் இறுதிநேரம் வரை மக்களை கேடயமாகவே வைத்திருந்தனர் அரச அதிபர் இமெல்டா சுகுமார்

பொதுமக்களுக்காக அரசாங்கம் பாதுகாப்பு வலயத்தைப் பிரகடனப்படுத்திய போதிலும், அதில் மக்களோடு மக்களாக புலிகள் இயக்கத்தினரும் இரண்டறக் கலந்திருந்தார்களென்று யாழ். மாவட்ட அரசாங்க அதிபரும் முல்லைத்தீவு மாவட்ட முன்னாள் அரச அதிபருமான திருமதி இமெல்டா சுகுமார் தெரிவித்தார். புலிகள் மக்களை வெளியேற இடமளிக்கவில்லை என்றும் மீறித் தப்பிச் செல்ல முயன்றவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினார்களென்றும் கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்கம் பற்றிய ஆணைக்குழு முன்னிலையில் நேற்று  சாட்சியம் அளித்த போது திருமதி சுகுமார் குறிப்பிட்டார்.

புலிகள் மக்களை மனிதக் கேடயமாக வைத்திருந்தார்களென்று கூறிய யாழ். அரச அதிபர் அதனையும் மீறி மக்கள் வெள்ளைக் கொடி ஏந்தியவாறு இராணுவத்தினரின் பகுதிக்குத் தப்பி வந்தார்களென்றும் குறிப்பிட்டார்.

வெள்ளைக் கொடியுடன் தப்பி வந்த மக்கள் எவரையும் இராணுவம் சுடவில்லையென்று அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார். ‘வெள்ளைக் கொடியுடன் இராணுவத் தினரிடம் தப்பி வந்த அனைவரும் இன்னமும் உயிருடன் வாழ்கிறார்கள்.

வேண்டுமானால் அவர்களுள் சிலரை ஆணைக்குழு முன்னிலையில் கொண்டு வந்து சாட்சியமளிக்கவும் இயலும். நான் எப்போதும் மக்களுடன் வாழ்கிறேன். அவர்களின் சுகதுக்கங்களில் பங்கேற்கிறேன். மக்கள் எவராவது அவ்வாறு வெள்ளைக் கொடியுடன் வந்து இராணுவத்தினரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியிருந்தால் எனக்குத் தெரிந்திருக்கும்’ என்றும் அவர் குறிப்பிட்டார்.

கொழும்பு – 7 ஹோட்டன் பிளேசிலுள்ள லக்ஷ்மன் கதிர்காமர் கற்கை நிலையத்தில் நேற்று நடந்த ஆணைக்குழு விசாரணையில் சாட்சியம் அளித்த அரச அதிபர் இமெல்டா சுகுமார்,

ஜனவரி 19 ஆம் திகதி (2009) இராணுவக் கட்டளையிடும் அதிகாரியிடமிருந்து எனக்கோர் அறிவிப்பு தொலைநகல் மூலம் வந்தது. அதில், வள்ளிபுனம் பகுதியில் மக்களுக்குப் பாதுகாப்பு வலயத்தைப் பிரகடனப்படுத்துமாறு வரைபடத்துடன் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி நான் அறிவிப்புச் செய்தேன். ஆனால், மக்கள் எங்கு செல்கிறார்களோ அங்கே புலிகளும் செல்வார்கள்.

நாம் புதுக்குடியிருப்புக்கு இடம்பெயர்ந்த பொழுது மன்னார், முல்லைத்தீவு, வவுனியா (நெடுங்கேணி), கிளிநொச்சி மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 3,50,000 பொதுமக்கள் அங்கு இருந்தார்கள். இறுதிவரை மக்கள் நம்பிக்கையுடன் தமது உடைமைகளையும் எடுத்துக்கொண்டு இடம்பெயர்ந்தார்கள். புதுக்குடியிருப்பில் தற்காலிக அலுவலகத்தில் நான் இயங்கிய பொழுது எம்மை வெளியேறுமாறு இராணுவம் கேட்டுக்கொண்டது.

ஜனவரி 22ஆம் திகதி காலை 10 மணி முதல் பிற்பகல் இரண்டு மணிவரை போர் நிறுத்தம் செய்து நாம் வெளியேற அவகாசம் வழங்கினார்கள். அந்தச் சந்தர்ப்பத்தில்தான் நான் அங்கிருந்து ஒட்டுசுட்டானுக்கு இடம்பெயர்ந்தேன். ஆனால் எனது உத்தியோகத்தர்கள் பலர் மக்களுடன் அங்கேயே தங்கிவிட்டார்கள். அவர்களைப் புலிகள் அனுமதிக்கவில்லை.

அவரின் சாட்சியம் நிறைவடைந்ததும் ஆணைக்குழுவின் தலைவரும் உறுப்பினர்களும் அரச அதிபரிடம் கேள்விகளைத் தொடுத்தனர். அதற்குப் பதில் அளித்த அவர், இடம்பெயர்ந்த மக்களுக்கு சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் உதவியுடன் அரச நிவாரணத்தைப் பெற்றுக் கொடுத்ததாகவும் ஆனால், அதில் 80% மட்டுமே மக்களைச் சென்றடைந்ததாகவும் 20% உணவைப் புலிகள் எடுத்திருக்கலாமென்றும் கூறினார்.

புலிகளின் துப்பாக்கிச் சூட்டினால் 5, 6 கிராம சேவை உத்தியோகத்தர்களும் தமது உத்தியோகத்தர்கள் சிலரும் கொல்லப்பட்டதாகவும் அரச அதிபர் தெரிவித்தார். இறுதி நம்பிக்கையுடன் மக்கள் கொண்டு சென்ற இலட்சக்கணக்கான வாகனங்கள் பல கிலோமீற்றர் தூரத்திற்கு எரியுண்டு கிடந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply