ஈழத் தமிழர் பிரச்சினை பற்றி இந்திய நாடாளுமன்றத்தில் விவாதம்: அத்வானி
இலங்கைத் தமிழர் பிரச்சினை விவகாரம் குறித்து இந்திய நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பப்படும் என இந்திய பாரதிய ஜனதாக் கட்சியின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான எல்.கே.அத்வானி உறுதிமொழி வழங்கியுள்ளார்.
புதுடில்லியில் தன்னைச் சந்தித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்திடமே, அத்வானி இவ்வாறு உறுதிமொழி வழங்கினார்.
இலங்கையில் போர்நிறுத்தம் ஏற்படுவதற்கு இந்தியா ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என சிவாஜிலிங்கம் அத்வானியிடம் கோரிக்கை விடுத்திருந்தார். இதற்குப் பதிலளித்த அத்வானி, இலங்கைத் தமிழர் பிரச்சினை குறித்து பாராளுமன்றத்தில் குரலெழுப்பப் போவதாகக் கூறியுள்ளார்.
இந்த விடயத்தை இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கிடம் எடுத்துச் செல்வோம். இலங்கைத் தமிழர்களை இந்தியா ஒருபோதும் கைவிடாது என அத்வானி தெரிவித்தார்.
அதேநேரம், இலங்கைத் தமிழர்கள் குறிப்பாக வடபகுதியிலுள்ள தமிழர்கள் விடுதலைப் புலிகளுக்கும், இலங்கை அரசாங்கத்துக்கும் இடையில் நடைபெறும் மோதல்களில் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருப்பதுடன், அவர்களின் மனித உரிமைகள் மீறப்படுவதை அத்வானியுனடான சந்திப்பில் விளக்கிக் கூறியதாக சிவாஜிலிங்கம் இந்திய ஊடகமொன்றிடம் கூறினார்.
இலங்கையில் போர்நிறுத்தம் ஏற்படுத்தப்பட்டு விடுதலைப் புலிகளுக்கும், இலங்கை அரசாங்கத்துக்கும் இடையில் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட வேண்டும் என்பதை இந்திய பிரதமர் வேட்பாளரிடம் எடுத்துக் கூறியதாக சிவாஜிலிங்கம் குறிப்பிட்டார்.
மோதல்களை நிறுத்துவதற்கு உதவவேண்டும் எனவும், இனப் படுகொலைகள் நிறுத்தப்பட்டு, பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகாண அழுத்தம் கொடுக்க வேண்டும் எனவும் அத்வானியிடம் தான் கோரிக்கை விடுத்ததாக பாராளுமன்ற உறுப்பினர் மேலும் கூறினார்.
எனினும், விடுதலைப் புலிகள் ஆயுதங்களைக் கைவிட்டால் மாத்திரமே அவர்களுடன் பேச்சுவார்த்தைக்குச் செல்லமுடியும் என இலங்கை அரசாங்கம் தொடர்ச்சியாகக் கூறிவருகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply