யாழ் மாவட்டத்தில் விரைவில் இராணுவ முகாம்கள் குறையும் : டக்ளஸ் தேவானந்தா
யாழ் மாவட்டத்தில் செயற்பட்டுவரும் உள்ளூர் அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதி நிதிகளுடன் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்துரையாடியுள்ளார். இக் கலந்துரையாடல் அமைச்சரின் யாழ் பணிமனையில் நேற்று நடைபெற்றது. இதில் சுமார் 15க்கும் அதிகமான உள்ளூர் அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
இதன்போது அமைச்சர் கருத்து தெரிவிக்கையில் சகல உள்ளூர் அரச சார்பற்ற நிறுவனங்களும், அரச சார்பற்ற நிறுவனங்களின் செயலாளரிடம் பதிவுசெய்ய வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டதுடன் இனிவரும் நாட்களில் காங்கேசன்துறை வீதிக்கு மேற்குப் புறமாக மீள்குடியேற்றம் நடைபெறவுள்ளதாகவும் அதற்கு உள்ளூர் அரச சார்பற்ற நிறுவனங்கள் பங்களிக்க முடியுமா? எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.
குறிப்பாக கண்ணிவெடிகள் அகற்றப்பட்டதனை உறுதி செய்த பின்னர் அப்பகுதிகளில் எல்லைகளை வரையறுக்க வேண்டுமென்றும் கடந்த காலங்களில் உரிய முறையில் மக்களுக்கு பணி செய்ய முடியாதிருந்த நிலையில் தற்போது மீண்டும் மக்கள் பணி முழுமையாகவும் நிறைவாகவும் செய்யக்கூடிய சூழல் இன்று உள்ளூர் அரச சார்பற்ற நிறுவனங்களுக்கு ஏற்பட்டுள்ளதையும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன் இனிமேல் உயர்பாதுகாப்பு வலயம் எமது மண்ணில் இருக்க முடியாது என்றும் அதேபோன்று இராணுவ முகாம்களும் காலப்போக்கில் குறையும் சூழல் உருவாகும் நிலை ஏற்படுமென்றும் தெரிவித்த அமைச்சர் அவர்கள் ஒவ்வொருவரும் சமூக அக்கறையுள்ளவர்களாக வளமான சமுதாயத்தைக் கட்டியெழுப்ப வேண்டுமென்ற குறிக்கோளுடன் பணிசெய்ய வேண்டுமென்பதே தமது விருப்பமென்றும் மேலும் தெரிவித்திருந்தார்.
அத்துடன் ஒவ்வொரு நிறுவனங்களும் முன்னெடுக்கவுள்ள நிகழ்ச்சித் திட்டத்தை வரைந்து அடுத்த சந்திப்பில் சமர்ப்பிக்கும் பட்சத்தில் அதற்கேற்ப செயற்திட்டங்களை இலகுவாக முன்னெடுக்க முடியுமென்றும் தெரிவித்தார். இதில் அங்கு கேட்கப்பட்ட கேள்விகளுக்கும் அமைச்சர் பதிலளித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply