இதுவும் மேட்டுக்குடிதான்

எதிர்வரும் தை மாதம் இலங்கையில் நடக்கவிருக்கும் இலக்கிய ஒன்றுகூடலுக்கு எதிராக பிற்போக்கு சக்திகள் ஒன்று கூடி நாசவேலைகள் செய்து வருகின்றனர்.

இந்த நாசவேலைகளுக்கு முன்னரங்கில் நிற்பவர்கள் இங்கிலாந்திலுள்ள பத்மநாப ஐயர் அவர்களும், கனடாவிலுள்ள விருதுகள் வழங்கும் சபையின் தலைவருமான செல்வம் என்பரும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.எதற்காக இவர்கள் இந்த இலக்கிய ஒன்று கூடலை எதிர்க்கின்றார்கள்?

தமிழ் மக்கள் சுதந்திரமாகஸ, மகிழ்ச்சியாக, உயிர்அச்சுறுத்தல்கள் இலலாதவர்களாக, நடமாடுகின்றார்கள் என்பதாக, காட்டுவதற்கு ராஜபக்ச அரசு நடத்தும் ஒரு நாடகம் தான் இந்த இலக்கியச் சந்திப்பு. எனவே இதை நாம் கண்டித்தே ஆகவேண்டும் இதுதான் இவர்கள் கண்டுபிடித்த நியாயம்.

இவர்களது இந்த நியாயத்தையும், தமிழ்மக்கள் மீது இவர்கள் அக்கறை கொள்வதாகக் காட்டும் நாடகத்தையும் நாம் மிகத்தூர நின்று வேடிக்கை பார்க்கமுடியாது. இவர்களுக்கு மிக அருகில் சென்று இவர்களது காதை முறுக்கி சில கேள்விகள் கேட்டே ஆகவேண்டும்.

இது என்ன புலுடா என்று இவர்கள் தலையில இரண்டு குட்டுப்போடவும் மனம் தவிக்குது.

இன்று நேற்றா இது நடக்குது. இந்த சமூக நாசகாரர்களின் சிந்தனைக்கு தமிழ்ச் சமூகம் சிக்கிச் சின்னாமின்னாகியதன் வரலாறு மிக நீண்டது பாருங்கோ.

முன்பொரு காலத்தில இந்திய மஞ்சள் பத்திரிகைகளும், துப்பறியும் நாவல்களும் என இலங்கையில் வந்து குவிந்தபோது அதை வாசித்து தமிழ்ச் சமூகம் சீரழிந்து கொண்டிருந்தது. இதைமாற்றி ,சுய படைப்புத்திறனையும் முற்போக்கு சிந்தனைக்கும் வழிகோலியவர் பேராசிரியர் கைலாசபதி. அதை சிறீலங்கா சுதந்திரக்கட்சி ஊக்கப்படுத்தியதோடு அதற்கான பரிசுத்தொகைகளும் வழங்கிவந்தது.

அந்தக் கால கட்டத்தில் தமிழ் இலக்கியத்தில் பல மாற்றங்கள் நிகழ்ந்தது. அத்தோடு தமிழில் சினிமாத்துறையும் வளர்ச்சியடைந்து வந்தது. இதை அன்றைய தமிழ்த்தேசிய வாதிகளான மேட்டுக்குடி அரசியல் வாதிகள் எதிர்த்து வந்தனர். இது சிங்கள அரசு தமிழ் மக்களுக்குச் செய்யும் நாசவேலை. எமது தொப்புள் கொடி இந்திய உறவுகளுக்கும், எங்களுக்கும் இடையே விரோதத்தை தூண்டும் சிங்களப் பேரினவாத சக்திகளின் சூழ்ச்சி எனக் கோசம் எழுப்பினார்கள்.

ஏன் யாழ்ப்பாணத்தில் பல்கலைக்கழகம் வருவதையும் தடுத்தவர்கள் தான் அந்தத் தமிழ்த் தேசிய மேட்டுக்குடியினர். பல்கலைக்கழகம் யாழ்ப்பாணம் வந்தால் தமிழ்க் கலாச்சாரம் சீரழிந்துபோகும் என்பதுதான் அவர்களது வியாக்கியானம்.

தாம் மட்டும் கொழும்பிலிருந்தும், கடல்கடந்து சீமைக்கும் சென்று பல்கலைக்கழக அறிவைப்பெறலாம் அது கலாச்சார சீரழிவு அல்ல. பொருளாதார வழம் அற்றவர்களும், நீண்டகாலமாக கல்வி மறுக்கப்பட்ட சமூகங்களும் வசதியாக பல்கலைக்கழகம் செல்லும் சூழல் வந்தபோதுதான் பல்கலைக்கழகப் படிப்பு கலாச்சாரச் சீரழிவாக தோன்றியது.

முன்னைய மேட்டுக்குடியினரின் இந்த லொஜிக்கைகைத் தான் அவர்களது விசுவாசிகளான பத்மநாப ஐயரும், விருதுவழங்கும் சபையின் தலைவருமான கனடா செல்வம் அவர்களும் பின்பற்றுகின்றார்கள். தமிழ் மக்கள் பிரச்சனை எதுவும் அற்றவர்களாக வாழ்கின்றாகள் என ராஜபக்ச அரசு சர்வதேசங்களுக்கு காட்டும் ஓரு நாடகம் தான் கொழும்பில் நடக்க இருக்கும் இலக்கியச் சந்திப்பிற்கான பின்னணி. எனவே நாம் அதைத் தடத்தே ஆகவேண்டும் என ஒற்றைக்கால் தவம் புரிகின்றனர்.

யுத்தம் முடிந்தபிற்பாடு கோவில் திருவிழாக்களுக்கு இலட்சக்கணக்கில் தமிழர்கள் சென்று வருகின்றார்கள், நல்லூர் திருவிழாவின்போது அதற்காகவே புகலிடத்திலிருந்தும் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் இலங்கை சென்று வந்தார்கள். அதை சர்வதேசம் எப்படிப்பார்க்கும் அதுவும் ராஜபக்சவின் ஒரு நாடகம்தானே அதை ஏன் இவர்கள் தடுக்கவில்லை.

ஒவ்வொரு நாளும் நாயினாதீவிக்கு லட்சக்கணக்கில் மக்கள் சென்றுவருகின்றார்கள் இதுவும்ரரஜபக்ச வின் சதிதானே இதை ஏன் இவர்கள் தடுக்கவில்லை?

யுத்தம் முடிந்து இராணுவக் கெடுபிடிகள் குறைந்து, பதுங்கு குழி வாழ்க்கையும் அற்றுப்போன் நிலையில் இன்று நாள் முழுக்க பெண்கள் ரிவிக்கு முன்னால் இருந்து சாக்கடைத் தமிழ்த் தொடர்களைப் பார்த்துக் கொண்டிருக்கின்றாகள். இதற்கெதிராக அல்லது இதற்கு மாற்றாக எதுவும் செய்வவேணுமே என்றெல்லாம் இவர்களுக்குத் தோன்றாது.

புகலிடத்தில் இலக்கியச் சந்திப்பு நடைபெற்ற காலங்களிலும் தமிழ்த் தேசிய வாதிகள் எதிர்த்தார்கள். புகலிடத்தில் புலிகளின் வல்லாட்சி நடைபெற்றுக் கொண்டிருந்தபோதும் மாற்றுக் கருத்தியலுக்கான ஒரே ஒரு தளமாகச் செயல்பட்டது ‘இலக்கியச் சந்திப்பு’.

இவ்வாறான தளங்களின் ஊடாகவே பல்வேறு படைப்புகளையும்,கருத்துக்களையும், சிரழிந்துபோகும் சமூகத்தை மடைக்கித்திருப்பி நல்வழியில் செலுத்துவதற்கான சக்திகளையும் நாம் இனம்காணமுடியும்.

எமது தமிழ் சமூகத்தில் வீரர்கள் இருக்கின்றார்கள், விண்ணர்கள் இருக்கின்றார்கள். ஆனால் தமிழ் சமூகத்திலிருந்து ஒரு சமூகவியலாளனை எம்மால் தேடமுடியாதிருக்கின்றது.

நாம் தேடிக்கொண்டிருக்கின்றோம் ஒரு பெரியாரை, ஒரு அம்பேத்கரை.

கொழுப்பில் நடக்கும் இலக்கியச்சந்திப்பு போன்று இலங்கையிலுள்ள பல்வேறு இடங்களிலும் நாம் இவ்வாறான நிகழ்வுகளை தொடர்ந்து நடத்தவேண்டும். குறிப்பாக சிங்கள மக்களுடனும், முஸ்லிம் மக்களுடனும் இணைந்து நாம் இவ்வாறான இலக்கிய நிகழ்வுகளை மேற்கொள்ள வேண்டும். முப்பது வருடங்களாக நாம் தொடந்து நடத்திய புறநானூற்று நாசத்தினால் பலவகையில் நாம் பின்தங்கியிருக்கின்றோம். முஸ்லிம் இளைஞர்களும், சிங்கள இளைஞர்களும் பல வகையில் முன்னேறிவிட்டார்கள்.

அண்மையில் பேராசிரியர் ராஜன் கூல் அவர்கள் ஒரு விடயத்தை மிக அழுத்தமாகக் கூறினார். யாழ்ப்பல்கலைக் கழகத்திலிருந்து பட்டம் பெற்று வெளியேறிய தமிழ் இளைஞர்கள் வேலைவாய்ப்பில் சிங்கள் இளைஞர்களுடன் போட்டிபோட முடியாது பலவீனமாக இருக்கின்றார்கள் என்று. காரணம் பட்டம் பெற்று வெளியேறும் தமிழ் இளைஞர்களின் ஆங்கில அறிவு சிங்கள இளைஞர்களுடைய தரத்திற்கு மிகக் குறைவாக இருப்பதாக. அத்தோடு யாழ்ப்பல்கலைக்கழகத்தில் பேணப்படும் கலாச்சாரமும் இளைஞர்களின் வளர்ச்சிக்கு தடையாக இருக்கின்றது என்பதாகவும் திரு. ராஜன் கூல் அவர்கள் கூறியிருந்தார்.

எனவே நாம் பெறும் கல்விகளுக்கு அப்பால் இலக்கிய மநாடுகள் எமக்கு மிக அவசியமானது. தமிழ் சமூகத்தையும் அதன் பண்பாடு கலாச்சரம் போன்ற விடயங்கள் குறித்து விவாதிப்பதற்கும் இலக்கிய சந்திப்புகள் தொடர்ந்து நடக்கவேண்டும். இவ்வாறான சந்திப்புக்களும், திறந்த விவாதங்களுமே சமூகத்தை மாற்றும் வல்லமையுடையது. தமிழ் சமூகம் இதனூடாகவே ஒரு சிறந்த சமூகவியலாளனை தேர்ந்தெடுக்கமுடியும்.

இவ்வாறான நிலை தமிழ் சமூகத்தில் தோன்றிவிடுமோ என்ற அச்சம் காரணமாகவே கொழும்பில் நடக்க இருக்கும் இலக்கிய மநாட்டை இவர்கள் எதிர்த்துவருகின்றார்கள்.

எனவே ‘இலங்கைத் தலித் சமூக மேம்பாட்டு முன்னணி’ யினராகிய நாம் கொழும்பில் நடத்தும் இலக்கிய சந்திப்பு ஏற்பாட்டாளர்களைப் பாராட்டுவதோடு. தொடர்ந்தும் இவ்வாறான பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.

“இலங்கைத் தலித் சமூக மேம்பாட்டு முன்னணி ” (பிரான்ஸ்)

மூலம்/ஆக்கம் : ஊடக அறிக்கை


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply