கண்ணிவெடி இருக்கின்றதா? ஆய்வின் பின்னரே மீள்குடியேற்றம்

யாழ் கொழும்புத்துறையிலுள்ள 04 கிராமங்களில் மக்கள் மீளக் குடியமர்வது தொடர்பாக பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் விடுத்த வேண்டுகோளை அடுத்து அவர்களை அவர்களது சொந்த இடங்களில் மீள்குடியேறுவதற்கு விரைந்து நடவடிக்கை எடுக்கப்படுமென அமைச்சர் உறுதிமொழி வழங்கினார்.

நேற்று அமைச்சரின் யாழ் அலுவலகத்திற்கு வருகைதந்த மக்கள் விடுத்த வேண்டுகோளை அடுத்து இன்று மக்கள் பிரதிநிதிகளும் கிராம சேவையாளர்களும் பிராந்திய கண்ணிவெடி செயற்பாட்டு அலுவலகப் பிரதிநிதிகளும் அழைக்கப்பட்டிருந்தனர்.

இதன் பிரகாரம் அந்தப் பகுதியில் கண்ணிவெடி அபாயம் இருக்கின்றதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும் எனவும் அதன் பின்னரே மக்கள் குடியேற அனுமதிக்க முடியும் எனவும் கண்ணிவெடி செயற்பாட்டு பிரதிநிதிகள் தெரிவித்த அதேவேளை அடுத்தாண்டு ஜனவரி மாதம் அம்மக்கள் மீள்குடியேற முடியுமென்றும் அந்தற்கேற்ப விதத்தில் தமது பணிகளை முன்னெடுக்க இருப்பதாகவும் தெரிவித்தனர்.

மக்கள் தாம் தற்போது எதிர்நோக்கி வருகின்ற அடிப்படை பிரச்சினைகள் குறித்தும் அமைச்சரிடம் தெரியப்படுத்தினர்.

கொழும்புத்துறையிலுள்ள எழிலூர் உதயபுரம் புனிதபுரம் மகேந்திரபுரம் மற்றும் பாசையூர் கடற்கரைப்பகுதி ஆகிய கிராமங்களைச் சேர்ந்த மேற்படி மக்கள் 1995 ஆம் ஆண்டு முதல் இடம்பெயர்ந்து இன்றுவரை உறவினர் வீடுகளில் வசித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இச்சந்திப்பில் அமைச்சருடன் யாழ் மாநகர முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜா நகர பிரதேச செயலர் சுலோஜினி யாழ் மாநகர சபை உறுப்பினர் துரைராஜா இளங்கோ றீகன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply