தமிழ்ப் பத்திரிகையாளரைக் கூப்பிட்டு ‘அவமானப்படுத்திய’ புலி ஆதரவாளர்கள்!
அமெரிக்காவில் வசிக்கும் தமிழ்ப் பத்திரிகையாளர் பிரகாஷ் எம் சுவாமியை தங்கள் நிகழ்ச்சிக்கு அழைத்து அவமானப்படுத்தியதாக இலங்கைத் தமிழ்ச் சங்கம் மீது புகார் கூறப்பட்டுள்ளது. ஆனந்த விகடன் உள்ளிட்ட பிரபல பத்திரிகைகளில் பணியாற்றியவர் பிரகாஷ் எம் சுவாமி. தற்போது அமெரிக்காவில் குடியேறியிருக்கும் இவர் ஐ நா சபை உள்ளிட்ட சர்வதேச அமைப்புகளின் கூட்டங்களில் சென்று செய்தி சேகரிக்க அங்கீகாரம் பெற்றுள்ளார்.
நியூஜெர்சி நகரில் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களும் இலங்கைத் தமிழ்ச் சங்கம் என்ற அமைப்பும் இணைந்து ஒரு கூட்டத்துக்கு ஏற்பாடு செய்திருந்தன. இதற்காக பிரகாஷ் சுவாமிக்கும் முறையான அழைப்பு அனுப்பியிருந்தன.
எனவே இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு செய்தி சேகரிக்க அவர் நியூயார்க்கிலிருந்து நியூஜெர்சி சென்றார்.
அரங்கத்தில் நுழைந்த அவரைச் சிலர் தடுத்து நிறுத்தி, “உங்களை யார் இங்கே அழைத்தது, நீங்கள் இந்திய, இலங்கை அரசுகளின் சார்பில் உளவு பார்க்க வந்த ஏஜென்ட், நீங்கள் இங்கே வர வேண்டாம்” என்று கூறி திருப்பி அனுப்பியதாகக் கூறப்படுகிறது.
‘நீங்கள் தந்த அழைப்பின்பேரில்தான் வந்தேன்’ என்று கூறி, அழைப்பிதழையும் அடையாள அட்டையையும் அவர் காட்டிய பிறகும் கூட அவரை வெளியேறுமாறு கண்டிப்புடன் கூறிவிட்டார்களாம்.
கூட்டத்திலிருந்து வெளியேறிய அவர் நியூயார்க்கில் பிற நிருபர்களிடம் இதை தொரிவித்து முறையிட்டார்.
ஐக்கிய நாடுகள் சபையின் அங்கீகார அட்டை பெற்றுள்ள என்னை, செய்தி சேகரிக்கவிடாமல் தடுத்தது தவறு; அழைப்பு அனுப்பிவிட்டு பிறகு வெளியேறுமாறு கூறி அவமானப்படுத்தினார்கள்; என் மீது வீண் குற்றச்சாட்டு சுமத்தினார்கள்.
நியூஜெர்சி மாகாண கவர்னரிடமும் மனித உரிமைகள் அமைப்பிடமும் இது குறித்து நிச்சயம் புகார் செய்வேன் என்றார் பிரகாஷ் சுவாமி.
நாடுகடந்த தமிழீழ அரசின் பிரதமர் ருத்திரகுமாரன் உள்ளிட்ட இலங்கை தமிழ் தலைவர்களை பேட்டியெடுத்து வெளியிட்டவர் பிரகாஷ் சுவாமி என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் நடந்த கோவை தமிழ் செம்மொழி மாநாட்டில் முதல்வர் கருணாநிதியால் கவுரவிக்கப்பட்டார் பிரகாஷ் எம் சுவாமி. இதனைத் தொடர்ந்தே அவருக்கு புலிகளிடம் இந்த ‘மரியாதை’ கிடைத்ததாகக் கூறப்படுகிறது.
இதே செம்மொழி மாநாட்டில்தான் ஈழ இலக்கியவாதிகள் சிவத்தம்பி, ஜெயராஜ் உள்ளிட்டோர் திரளாகக் கலந்து கொண்டனர்; முதல்வர் கருணாநிதியால் கவுரவிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply