பாராளுமன்றத்தை உடனடியாகக் கூட்டுமாறு கோரி ஐ.தே.க. பிரதமருக்குக் கடிதம்

2008ஆம் ஆண்டு முடிவடைவதற்கு முன்னர் உடனடியாக பாராளுமன்றத்தைக் கூட்டுமாறு பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி, பிரதமர் ரட்ணசிறி விக்ரமநாயக்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளது. 
 
எரிபொருள் விலையைக் குறைக்குமாறு உயர்நீதிமன்றம் வழங்கியிருக்கும் தீர்ப்பை அரசாங்கம் அமுல்படுத்தாமை மற்றும் தற்பொழுது நாட்டில் காணப்படும் பொருளாதார நெருக்கடிகள் குறித்து விவாதிப்பதற்குப் பாராளுமன்றம் கூட்டப்பட வேண்டுமென ஐக்கிய தேசியக் கட்சி பிரதமரிடம் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளது.

ஜனவரி மாதம் 6ஆம் திகதியே பாராளுமன்றம் கூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ள நிலையில், முக்கிய விடயங்கள் பற்றிக் கலந்துரையாடவிருப்பதால் இந்த வருடம் முடிவடைவதற்குள் பாராளுமன்றத்தைக் கூட்டவேண்டுமென அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க, தவிசாளர் காமினி ஜெயவிக்ரம, பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க உள்ளிட்ட ஐவர் கையெழுத்திட்டு இந்தக் கடிதத்தைப் பிரதமரிடம் கையளித்துள்ளனர்.

பாராளுமன்ற உறுப்பினர்களான ரவி கருநாணாயக்க, ஜோன் அமரதுங்க ஆகியோர் பிரதமரை நேரில் சந்தித்து இந்தக் கடிதத்தை கையளித்திருந்தனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply