இலங்கை வந்த எஸ்.எம். கிருஷ்ணா: யாழ்ப்பாணம் செல்கிறார்

எனது இந்தப் பயணம் தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு அளிக்கும் பேச்சுகளுக்கு தொடக்கமாக அமையும் என்று இலங்கை வந்துள்ள வெளியுறவு அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா கூறினார்.4 நாள் பயணமாக நேற்று இலங்கை வந்த கிருஷ்ணா விமானத்தில் நிருபர்களிடம் பேசுகையில், இலங்கையில் போர் முடிந்தபோது 3 லட்சம் தமிழர்கள் தங்கள் சொந்த இடங்களில் இடம் பெயர்ந்து பல்வேறு முகாம்களில் தங்கியிருந்தனர். இப்போது இந்த எண்ணிக்கை 17,000 முதல் 20,000 ஆகக் குறைந்துள்ளது. இவர்களையும் விரைவில் சொந்த இடங்களில் குடியமர்த்த வேண்டும் என்று இலங்கையிடம் கோருவேன்.

தமிழர்களுக்காக இந்தியா 50,000 வீடுகளைக் கட்டிக் கொடுக்கிறது. இதில் 1,000 வீடுகளின் கட்டுமானப் பணிகள் முடியும் நிலையில் உள்ளன. இந்தப் பணிகளையும் நேரில்
பார்வையிட இருக்கிறேன்.

இலங்கையில் தண்டவாளங்கள், துறைமுகங்கள் அமைக்கும் பணிகளையும் இந்தியா மேற்கொள்ளும். இந்திய தொழிலதிபர்கள் முதலீடு செய்ய ஆர்வம் காட்டும் நாடாகவும் இப்போது இலங்கை மாறியுள்ளது என்றார்.

கொழும்பு விமான நிலையத்தில் இலங்கை வெளியுறவு அமைச்சர் ஜி.எல். பெரிஸ் மற்றும் அதிகாரிகள் கிருஷ்ணாவை வரவேற்றனர். அங்கு நிருபர்களிடம் பேசிய அவர்,

இலங்கையில் அனைத்துத் தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில், குறிப்பாக தமிழர்கள் பயன் பெறும் வகையில் அதிகாரப் பகிர்வை அமலாக்க தனது அரசு உறுதிபூண்டுள்ளதாக இலங்கை அதிபர் ராஜபக்சே கூறியுள்ளார்.

பல ஆண்டுகளாக நீடித்து வந்த ஆயுதப் போராட்டம் முடிந்து அமைதி திரும்பியுள்ளது. இனி நிரந்தர அமைதியை ஏற்படுத்தும் வகையில் அர்த்தமுள்ள பேச்சுவார்த்தைகள் மூலம் அதிகாரப் பகிர்வுக்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது.

எனது இந்தப் பயணம் அதிகாரப் பகிர்வு பேச்சுகளுக்கு தொடக்கமாக அமையும். கடந்த ஜூன் மாதம் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்த ராஜபக்சே, அதிகாரப் பகிர்வு குறித்து ஆலோசனை நடத்தி வருவதாகத் தெரிவித்தார்.

அதே போல போரினால் இடம் பெயர்ந்து முகாம்களில் தங்கியுள்ள தமிழர்கள் அனைவரும் இந்த ஆண்டுக்குள் தங்களது சொந்த இடங்களில் மீண்டும் குடியமர்த்தப்படுவார்கள் என்றும் இந்தியாவிடம் இலங்கை உறுதியளித்துள்ளது என்றார்.

ராஜபக்சே, அமைச்சர்கள், அதிகாரிகளை கிருஷ்ணா சந்தித்துப் பேசவுள்ளார். அதே போல இலங்கைத் தமிழ் தலைவர்களையும் அவர் சந்திக்கவுள்ளார்.

யாழ்ப்பாணத்துக்கும் கிருஷ்ணா செல்ல இருக்கிறார். 1989ம் ஆண்டில் வெளியுறவு அமைச்சராக இருந்த நட்வர் சிங் தான், கடைசியாக யாழ்ப்பாணம் சென்ற இந்தியத் தலைவராவார். அதற்குப் பின் இப்போது கிருஷ்ணா தான் அங்கு செல்கிறார்.

இலங்கையின் வளர்ச்சிப் பணிகளுக்காக அடுத்த 3 ஆண்டுகளில் இந்தியா ரூ. 7,990 கோடி நிதி வழங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது. இதில் கடன் மற்றும் உதவி ஆகியவை அடங்கும்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply