வன்னியில் புலிகளின் கட்டுப்பாட்டிலுள்ள மக்களுக்கு பாரிய உணவுத் தட்டுப்பாடு:மனித உரிமைகள் கண்காணிப்பகம்
மனிதநேயப் பணியாளர்கள் வன்னிக்குச் செல்ல அரசாங்கம் விதித்திருக்கும் தடையுத்தரவால் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலுள்ள மக்கள் போதியளவு உணவு, கூடாரங்கள் மற்றும் சுத்தமான நீர் இன்றி பாதிக்கப்பட்டிருப்பதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.
விடுதலைப் புலிகளுக்கும், இலங்கை அரசாங்கப் படைகளுக்கும் இடையில் வன்னியில் நடந்துவரும் மோதல்களுக்கிடையில் 200,000 அப்பாவிப் பொதுமக்கள் சிக்குண்டிருப்பதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மோதல்கள் உக்கிரமடைந்ததைத் தொடர்ந்து செப்டம்பர் மாதம் வன்னியிலிருந்து அனைத்து அரசசார்பற்ற நிறுவனங்களையும் அரசாங்கம் வெளியேற்றியதுடன், இதுவரை எந்தவொரு அரசசார்பற்ற நிறுவனத்தையும் அங்கு செல்ல அரசாங்கம் அனுமதிக்கவில்லையென அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில மாதங்களாக வன்னியில் இடம்பெயர்ந்த மக்களுக்கு வழங்குவதற்குப் போதியளவு உணவுப் பொருள்கள் இல்லையெனவும், இடம்பெயர்ந்தவர்களில் 40 வீதமானவர்களுக்குத் தேவையான உணவுப் பொருள்களே அனுப்பிவைக்கப்பட்டிருப்பதாகவும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் குறிப்பிட்டுள்ளது.
நவம்பர் மாதம் ஏற்பட்ட சூறாவளி மற்றும் மழை வெள்ளத்தால் ஆயிரக்கணக்கானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளபோதும், அவர்களுக்கு தற்காலிக கூடாரங்களைக் கூட எடுத்துச்செல்ல அரசாங்கம் அனுமதி வழங்கவில்லையென அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. சூறாவளியால் குறைந்தது 60,000 தற்காலிக கூடாரங்கள் அழிக்கப்பட்டிருப்பதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வன்னியில் தற்பொழுது நிலைமை பதற்றமாகவே உள்ளது. எனினும், எம்மால் முடிந்ததை தாம் செய்கிறோம் என பாதுகாப்புப் பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல கூறியிருந்தார்.
இதேவேளை, கட்டுப்பாடற்ற பகுதிகளிலிருந்து இடம்பெயர்ந்து அரசாங்கக் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வந்திருக்கும் மக்கள் சிறைச்சாலையில் அடைத்துவைக்கப்பட்டிருப்பதைப் போல தடுத்துவைக்கப்பட்டிருப்பதாக மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஆசியப் பிராந்தியப் பணிப்பாளர் பிரட் அடம்ஸ் கூறினார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply