அமைச்சர்களும் லண்டன் செல்ல முடியாத நிலை : லக்ஷ்மன் கிரியெல்ல

ஐரோப்பாவுடன் பிரச்சினையை ஏற்படுத்திக் கொண்டிருந்தால் எமது ஏற்றுமதி இன்னும் குறைந்துவிடும். ஜனாதிபதியின் விவகாரத்தால் எதிர்காலத்தில் அமைச்சர்கள், வியாபாரிகளும் பிரிட்டனுக்குச் செல்லமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்று ஐ.தே.க. எம்.பி.யான லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார். ஜனாதிபதி, அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள் மற்றும் வியாபாரிகள் வெளிநாடுகளுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டால் வியாபாரம் சீரழிந்துவிடும் என்பதுடன் பிரச்சினைக்கான பக்கம் தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் கூறினார்.

நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற இறுதிநாள் விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

“அபிவிருத்தி ஏற்படுவதாயின் அதனை மக்கள் உணர வேண்டும். புள்ளிவிபரங்கள் தவறானது என்பதனால் மக்கள் உணரவில்லை. தனது விருப்பத்திற்கும் அரசு விருப்பத்திற்கும் ஏற்ப புள்ளிவிபரங்கள் மாற்றப்பட்டுள்ளன.புள்ளிவிபரத்தில் நம்பிக்கையின்மையால் யுத்தம் நிறைவடைந்ததன் பின்னரும் முதலீட்டாளர்கள் வருகை தரவில்லை. முதலீட்டாளர்களின் வருகை 20 வீதத்தால் குறைந்துள்ளது.

நீதிமன்றம் சுயாதீனமாக இருக்க வேண்டும். இல்லையேல் முதலீட்டாளர்களை எதிர்பார்க்க முடியாது. ஐரோப்பிய நாடுகள் 65 வீதமான பொருட்களை இறக்குமதி செய்கின்றன.

பிரித்தானியாவுக்கு சென்ற ஜனாதிபதிக்கு அங்குள்ள பொலிஸார் பாதுகாப்பு வழங்கியிருக்கலாம். எதிர்காலத்தில் அமைச்சர்கள், வியாபாரிகளும் செல்ல முடியாத நிலைமை ஏற்படும். அரசாங்கத்துக்கு தெரியாதது எங்களுக்கு தெரிகிறது. அதுவே வெளிநாடுகளுக்கும் தெரிகிறது.

இலங்கையுடன் பிரச்சினை இருந்தமையால்தான் பிரித்தானியா பாதுகாப்பு வழங்கவில்லை. என்பதுடன் அரசுக்குத் தெரியாத பக்கத்தை அரசாங்கம் கண்டுபிடித்து அவை தொடர்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply