விடுதலைப் புலிகளுக்கெதிரான யுத்த வெற்றியை உலக நாடுகள் அங்கீகரித்துள்ளன : கோதபாய
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்த வெற்றியை உலக நாடுகள் அங்கீகரித்துள்ளதாக பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.கடற்படையின் 60 ஆண்டு பூர்த்தி விழாவில் உலகின் பல முக்கிய நாடுகள் பங்குபற்றியதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கையில் அமைதியான சூழ்நிலை காணப்படாவிட்டால் ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புப் பேரவையில் அங்கம் வகிக்கும் நாடுகள் ஒருபோதும் கடற்படை நிகழ்வுகளில் கலந்து கொண்டிருக்காது என அவர் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புப் பேரவையில் நிரந்தர உறுப்புரிமை வகிக்கும் சீனாவும், ரஸ்யாவும் இரண்டு கப்பல்களை அனுப்பி வைத்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளும் சிரேஸ்ட அதிகாரிகளை இந்த நிகழ்விற்காக அனுப்பி வைத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
யுத்தம் நடைபெற்றிருந்தால் இந்த ஐந்து நாடுகளும் கடற்படை ஆண்டு நிறைவு நிகழ்வுகளில் கலந்துகொண்டிருக்காது என அவர் குறிப்பிட்டுள்ளார். யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்ட போதிலும் உலகின் பல நாடுகள் இலங்கை அரசாங்கத்திற்கு ஆதரவளித்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
குறித்த நாடுகளின் அரசாங்கங்கள் அனுமதி வழங்காது கப்பல்களும், உயர் படையதிகாரிகளும் விழாவில் கலந்து கொண்டிருக்க முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன் மூலம் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்த வெற்றியை உலக நாடுகள் அங்கீகரித்துள்ளமை புலனாவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
எல்லைகடந்த பயங்கரவாதத்தை முறியடிப்பது தெடர்பான அவசியத்தை மீண்டும் வலியுறுத்துவதாக அவர் தெரிவித்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply