13 ஆவது திருத்தச் சட்டத்திலுள்ள முக்கிய விடயங்களை நடைமுறைப்படுத்த உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும்

கிழக்கு மாகாண மக்களின் குறைகளைத் தீர்க்க ஆளும் தரப்பினர் 13 ஆவது திருத்தச் சட்டத்திலுள்ள முக்கிய விடயங்களை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு கிழக்கு மாகாண முதலமைச்சருக்கு பத்மநாபா ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவரும், தமிழ் ஜனநாயக தேசிய கூட்டணியின் தலைவர்களில் ஒருவரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இரா. துரைரெட்ணம் (ரெட்ணம்) அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் அக் கடிதத்தில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட எமது பிரதேச மக்கள் பல வழிகளிலும் துன்ப துயரங்களை எதிர்நோக்கி தலைதூக்க முடியாமல் உள்ளனர். இத்தருணத்தில் மத்திய, மாகாண உள்ளூராட்சி நிர்வாகங்கள் ஒரே கட்சியினரின் கைகளிலேயே உள்ளன. இந்த நிலையில் இப்பிரதேசத்தை மீளக் கட்டி எழுப்புவதற்கு முயற்சி எடுத்து ஆயுத வன்முறையற்ற தலைமைத்துவம் அவசியம். மனித உரிமைகளை மதிக்கும், பன்முகத் தன்மை கொண்ட இன ஐக்கியத்தை பேணுகின்ற அரசியல் அதிகாரப் பரவலாக்கல் செயற்படுத்தப்பட வேண்டும். சுயபொருளாதாரத்தினை கட்டி எழுப்பக் கூடிய அறிவு சார்ந்த கல்விச் சமூகத்தினை கட்டியெழுப்பக்கூடிய தலைமை உருவாக வேண்டும். நிர்வாக கட்டமைப்பை கட்டி எழுப்ப நிரந்தர சமாதானத்தை நோக்கிய திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். இதற்கு கிழக்கு மாகாண ஆளும் தரப்பினர் முயற்சி எடுக்க வேண்டும் எனக் கோரியுள்ள அவர் கீழ்குறிப்பிடப்படும் விடயங்களை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரியுள்ளார்.

அவற்றில் தெரிவிக்கப்பட்டுள்ள விடயங்களாவன;

♦ மக்களின் நன்மை கருதி 13 ஆவது திருத்தச் சட்டத்தினை நடைமுறைப்படுத்த மாகாண அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

♦ சட்டம் ஒழுங்கு அதிகாரம் கிழக்கில் இடம்பெறுகின்ற சட்ட ஒழுங்கு மீறல் தொடர்பான ஆயுத வன்முறைகள் பலவந்த பணப்பறிப்பு போன்றவற்றைக் கட்டுப்படுத்துவதற்கு முதலமைச்சருக்கு சட்ட ஒழுங்கு பொலிஸ், நீதிமன்றம் அதிகாரம் வழங்கப்பட வேண்டும். தற்சமயம் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தினூடாக முதலமைச்சரால் எதனையும் நிறுத்த முடியவில்லை.

♦ கிழக்கு மாகாணத்திற்கென வானொலி. தொலைக்காட்சி சேவையை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கிழக்கு மாகாணத்திற்கு தனியான போக்குவரத்துச் சேவை, அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலையை ஊடறுக்கும் புகையிரத சேவை வெலிக்கந்தை முதல் பொத்துவில் வரை வயல் சார்ந்த பகுதிகளில் நெடுஞ்சாலை அமைப்பு மட்டக்களப்பு, திருகோணமலைக்கு நேரடி புகையிரத சேவை .

♦ வலுவிழந்தோர், விதவைகள், பெண்கள் போன்றோருக்கு தொழில் வாய்ப்பின் போது குறிப்பிட்ட வீதம் ஒதுக்க மாகாண சபை சட்டம் நிறைவேற்ற வேண்டும். மத்திய அரசுக்கும் மாகாண அரசுக்குமிடையிலான நிர்வாக இழுபறி நிலை தொடராமல் இருப்பதற்கு ஜனாதிபதி உரிய நடவடிக்கை எடுக்க ஆளும் தரப்பினர் அழுத்தம் கொடுக்க வேண்டும்.

♦ கிழக்கு மாகாணத்தை காட்டி வெளிநாடுகளில் இருந்து பெறப்படும் நிதி கிழக்குக்கே கிடைக்க வேண்டும். இதற்கான நியதிச் சட்டங்களை உருவாக்க வேண்டும். பிரதேச சபைகளுக்கு கூடிய நிதி ஒதுக்க வேண்டும். மாகாண சபைக்கு நிதியினை பெறக்கூடிய விதத்தில் வரிகளை அறவிட வேண்டும். கிழக்கு மாகாணத்திற்காக மத்திய அரசு ஒதுக்கும் நிதி அதிகரிக்கப்பட வேண்டும். வெளிநிறுவனங்கள் ஒதுக்கும் நிதி, திட்டமிடல் நடைமுறைப்படுத்தல் கிழக்கு மாகாண சபையின் கீழ் கொண்டு வரவேண்டும்.

♦ மாகாண சபையின் கீழ் தொழில்நுட்ப கல்லூரி, ஆசிரிய கலாசாலை, பல்கலைக் கழகம் விசேடமாக பொறியியல் மருத்துவ பீடம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மாகாண சபைக்குரிய சட்டங்களை உருவாக்க அனுபவம் வாய்ந்த சட்டவல்லுநர்களை நியமித்து அனைத்து விடயங்களுக்கும் சட்டங்கள் உருவாக்க வேண்டும்.

♦ 180 நாட்கள் கடமையாற்றியவர்களுக்கு சுற்றறிக்கைப்படி நிரந்தர நியமனம் வழங்கல், 10 வருட சேவை செய்தவர்களை இடமாற்றம் செய்த அரச தருமம் பணமாக 100 ரூபா முதல் 280 ரூபா வரை வழங்கப்படுபவை அதிகரிக்கப்பட வேண்டும். 20 வருடமாக சேவையாற்றும் சுகாதார தொண்டர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கல், ஒப்பந்த அடிப்படையிலான ஆங்கில ஆசிரியர்களுக்கு நிரந்தர நியமனம், ஒப்பந்தத்தை நீடித்தல், மாகாண காணி ஆணைக்குழு அமைக்க நடவடிக்கை எடுத்தல், கமநல சேவை திணைக்களத்தை மாகாண சபையின் கீழ் கொண்டு வரல் போன்ற விடயங்களை சுட்டிக்காட்டி நடவடிக்கை எடுக்குமாறு தனது கடிதத்தினூடாக முதலமைச்சரிடம் இரா.துரைரெட்ணம் கோரியுள்ளார்.

மூலம்/ஆக்கம் : ஊடக அறிக்கை


Responses are currently closed, but you can trackback from your own site.

Comments are closed.