எதிர்க்கட்சியுடன் இணையுமாறு சரத் பொன்சேகாவிற்கு ரணில் அழைப்பு
எதிர்க்கட்சியில் இணைந்து கொள்ளுமாறு ஜனநாயக தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சரத் பொன்சேகாவிற்கு, எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார். வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சரத் பொன்சேகாவை சந்தித்த போது, ரணில் விக்ரமசிங்க இந்த கோரிக்கையை விடுத்துள்ளார். எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டியதன் அவசியத்தை சரத் பொன்சேகாவும் வலியுறுத்தியுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிறையில் தடுத்து வைக்கப்படுவதன் மூலம் தாம் பலவீனமடையப் போவதில்லை எனவும், யுத்தத்தை எதிர்கொண்டதனைப் போன்றே இந்த நெருக்கடிளுக்கும் முகம்கொடுக்கப் போவதாக சரத் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்களுக்கு அனைத்து எதிர்க்கட்சிகளுக்கும் அணி திரள வேண்டியது அவசியமானதென ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.
அதேவேளை மனித உரிமை மற்றும் சிவில் உரிமைகளுடன் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேக்கா விடுதலை செய்யுமாறு தாம் அரசாங்கத்திடம் வலியுறுத்தி தாழ்மையுடன் கேட்டுக்கொள்வதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
தற்போதைய அரசாங்கமும், பாதுகாப்பு தரப்பினரும் இணைந்து யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்ததாகவும், பாதுகாப்பு தரப்பினருக்கு தலைமை தாங்கிய சரத் பொன்சேக்கா நாட்டின் செல்வம் எனவும் பிரேமதாச குறிப்பிட்டுள்ளார்.
சரத் பொன்சேக்காவை அரசியல் கைதியாக தொடர்ந்தும் தடுத்து வைக்காது அவரை விடுதலை செய்வதன் மூலம் சர்வதேசத்திற்கு சிறந்த செய்தியை வழங்க முடியும். பேதங்களை மறந்து அனைவரும் ஒன்றிணைந்த நாட்டை கட்டியெழுப்பும் பணிகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் சஜித் பிரேமதாச கூறியுள்ளார்.
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply