அவதூறான பிரசுரங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்!
விக்கிலீக்ஸ் இணையத்தளத்தின் ஆதாரமற்ற தகவல்களை வைத்து நமது பெண் சமூகத்தை மானபங்கப்படுத்தும் வகையில் என் மீதும் எனது கட்சியின் மீதும் சேறு பூசும் பிரசுரங்களை வன்மையாக கண்டிக்கின்றேன்! விக்கி லீக்ஸ் என்ற இணையத்தளம் இலங்கைக்கான முன்னாள் அமெரிக்க தூதுவரினால் அமெரிக்க ராஜாங்க திணைக்களத்திற்கு வழங்கியிருந்த தகவல்கள் என்று வெளியிட்டிருக்கும் எதுவித ஆதாரமற்றதும் பொய்யாக புனையப்பட்டதுமான சில தகவல்களை தாங்கள் மறுபதிப்பு செய்வதாக தெரிவித்து சில ஊடகங்கள் என் மீதும் எனது கட்சியான ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி மீதும் சேறு பூச முற்பட்டுள்ளதை நான் வன்மையாகக் கண்டிப்பதுடன் இவ் ஊடகங்களில் வெளியிடப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை முற்றாக மறுத்துரைக்கின்றேன்.
நானும் எனது கட்சியும் பயங்கரவாதிகளாகவோ அன்றில் வன்முறை மீது மோகம் கொண்ட ஒரு குழுவினராகவோ அரசியல் தளத்தில் பிரவேசித்திருந்தவர்கள் அல்ல. மாறாக தமிழ் பேசும் மக்களின் அரசியல் சமூக பொருளாதார மற்றும் வாழ்வியல் உரிமைகளுக்காகப் போராட நிர்ப்பந்திக்கப்பட்ட மனித உரிமை செயற்பாட்டாளர்களாகவே இலங்கையின் அரசியல் தளத்தில் நானும் எனது கட்சித் தோழர்களும் காலடி எடுத்து வைத்தோம்.
நானும் எனது கட்சித் தோழர்களும் எங்கள் அரசியல் செயற்பாட்டின் ஆரம்பங்களில் இயற்கை அனர்த்தங்கள் மற்றும் இனக்கலவரங்கள் என எமது மக்கள் முகம் கொடுத்திருந்த அவலங்களின் போது மனிதநேயம் கொண்ட சமூக அக்கறையாளர்களாவும் புனர்வாழ்வுப் பணியாளர்களாகவுமே அறிமுகமானவர்கள் என்பதனை எமது மக்கள் நன்கு அறிவர். இதே சமகாலத்தில் தவிர்க்க முடியாத அன்றைய காலச்சூழலில் ஆயுதம் ஏந்திப் போராட வேண்டிய கட்டாயத்தில் ஆயுதப்போராட்டத்தின் முன்னணி சக்திகளில் நானும் ஒருவனாக இருந்ததையும் எமது மக்கள் நன்கு அறிவர். ஆனாலும் அப்போது கூட மனித உரிமைகளை மீறி செயற்பட்டு வந்த சில ஆயுதப்போராட்ட அமைப்புக்களின் செயற்பாடுகள் குறித்து எனது கண்டனங்களையும் வெளிப்படுத்தி வந்திருக்கின்றேன்.
விடுதலைக்கான ஆயுதப்போராட்டமானது திசை வழி மாறி அழிவு யுத்தமாக மாறிய ஒரு சூழலில் உருவாக்கப்பட்ட இலங்கை இந்திய ஒப்பந்த நடவடிக்கையில் நான் நேரடியாக பங்கெடுத்திருக்காத போதிலும் அதை கொள்கை ரீதியாக மட்டும் ஏற்றிருந்தேன். யுத்தம் என்பது எமது மக்களுக்கு அழிவுகளைத் தவிர எதையுமே பெற்றுத்தராது என்று தொலைதூரப்பார்வையோடு ஜனநாயக வழிமுறைக்கு திரும்பியிருந்த நான் அரசாங்கத்துடன் உளப்பூர்வமாக பேசியே எமது மக்களுக்கான அரசியல் தீர்வினை பெற்றுக்கொள்ள முடியும் என்ற உண்மையை ஏற்றுக்கொண்டு இலங்கை அரசோடு நேரடியாகவே உறவுக்கு கைகுலுக்கியிருந்தேன்.
அரசாங்கத்துடன் வெளிப்படையாகவே அரசியல் ரீதியாக கைகுலுக்கிக் கொண்ட நானும் எனது கட்சியும் அப்போது மனித உரிமை மீறலில் ஈடுபட்டிருந்த ஏனைய அமைப்புக்களை போல தவறான வழிமுறையில் செயற்படுவோம் என எதிர்பார்த்த சில சக்திகளின் எண்ணங்களுக்கு மாறாக தமிழ் பேசும் மக்களின் நம்பிக்கைக்குப் பாத்திரமான மாபெரும் ஓர் அரசியல் சக்தியாக நாம் படிப்படியாக வளர்ந்து வந்திருக்கின்றோம்.
அவ்வப்போது இடம்பெற்ற மனிதஉரிமை மீறல்களான ஆட்கடத்தல் பணயம் வைத்தல் வரி அறவிடுதல் அச்சுறுத்தல்கள் மற்றும் படுகொலை சம்பவங்களை நான் வன்மையாகக் கண்டித்து வந்திருந்ததோடு எமது மக்களுக்கான அரசியல் தீர்வு குறித்து நடைமுறைச்சாத்தியமான கொள்கையினையும் வகுத்து செயற்பட்டும் வந்திருக்கின்றேன். இதனால் என் மீது நம்பிக்கை கொண்ட எமது மக்கள் இதுவரை நடந்து முடிந்த பாராளுமன்ற மற்றும் உள்ளூராட்சி சபைத் தேர்தல்களின் போதும் தமது பிரதிநிதிகளாக எம்மைத் தேர்ந்தெடுத்து வந்திருக்கின்றார்கள். அது மட்டுமன்றி நான் பலத்த சவால்களுக்கும் உயிர் அச்சுறுத்தல்களுக்கும் மத்தியிலும் கடந்த 17 வருடங்களாக பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தையும் தொடர்ச்சியாக பெற்று வந்திருப்பதுடன் கடந்த 10 வருடங்களாக அமைச்சரவையில் அங்கம் வகித்து நானும் எனது கட்சித்தோழர்களும் எமது மக்களுக்கு ஆற்றிவரும் மக்கள் சேவையை எமது சமூகம் நன்கு அறியும்.
எமது கட்சியின் தடம் புரளாத அரசியல் துணிச்சலாலும் நாம் யதார்த்த பூர்வமாகவும் தொலை தூரப்பார்வையோடும் வெளிப்படுத்தி வந்த நடைமுறைச் சாத்தியமான வழிமுறைகள் வெற்றியின் இலக்கை நோக்கி நகர்ந்து வருவதனாலும் என் மீதும் எனது கட்சியின் வளர்ச்சி மீதும் காழ்ப்புணர்ச்சி கொண்டவர்கள் எம்மை உயிர் மற்றும் உடல் ரீதியாக அழித்தொழித்து விட எத்தணித்தும் அதில் தோல்வி கண்டுவிட்ட நிலையில் அதன் தொடர்ச்சியாக இன்று வரை சிலர் ஈ.பி.டி.பி யினராகிய எம் மீதான சேறடிப்பு நடவடிக்கையிலும் ஈடு பட்டு வருகின்றமையை எமது மக்கள் மேலும் உணர்ந்துகொள்வார்கள் என நம்புகின்றேன்.
இதன் அடிப்படையில் எனதும் எனது கட்சியினதும் அரசியல் வளர்ச்சி கண்டு சகித்துக்கொள்ள முடியாத தவறான சில சக்திகள் வெளிநாட்டு ராஜததந்திரிகள் மற்றும் சர்வதேச உள்ளூர் ஊடகங்கள் என சகலவற்றோடும் தொடர்பு கொண்டு என் மீதும் எனது கட்சி மீதும் தவறானதும், ஆதாரமற்றதும் அருவருக்கத்தக்கதுமான பொய்யாகப் புனையப்பட்ட தகவல்களை பரப்பி வருகின்றார்கள்.
அண்மையில் சில உள்ளுர் ஊடகங்கள் ஈ.பி.டி.பி யினராகிய எம் மீதான ஆதாரமற்றதும் பொய்யாக புனையப்பட்டதுமான அவதூறுகளை பிரசுரித்துள்ளன. அது மட்டுமன்றி தமிழ் கலாசார விழுமியங்களைப் பாதுகாத்து வரும் எமது பெண்கள் சமூகத்தையும் இழிவுபடுத்தும் வகையிலான செய்திகளை விக்கிலீக்ஸ் இணையத்தளத்தில் வெளிவந்த தகவல்கள் என்று தெரிவித்து நமது பெண் சமூகத்தை மானபங்கப்படுத்தும் வகையில் பத்திரிகைப் பிரசுரங்களை திட்டமிட்டு வெளியிட்டுள்ளனர். இவற்றை நானும் எனது கட்சியும் வன்மையாக கண்டிக் கடைமைப்பட்டுள்ளோம். இச் செய்திகள் என் மீதும் எனது கட்சி மீதும் சேறு பூச முனையும் மிக இழிவான செயல் மட்டுமன்றி எமது தமிழ் பெண்களின் முகங்களின் மீது கறை பூசும் அருவருக்கத்தக்க செயலுமாகும் என்பதை எமது மக்கள் நன்கு விளங்கிக் கொள்ள வேண்டும்.
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியையும் அதன் செயலாளர் நாயகம் ஆகிய என்னையும் அரசியல் ரீதியாக ஓரம் கட்ட எத்தணிக்கும் முயற்சிகள் ஒருபோதும் கைகூடப்போவதில்லை என்ற போதிலும் இந்த முயற்சிகள் தமிழ் பேசும் மக்களின் நிரந்தர மகிழ்ச்சிக்கான அரசியல் தீர்வு முயற்சிகளை சீர்குலைக்கும் முயற்சியாகவும் எனக்கும் எனது கட்சிக்கும் அவமானத்தை ஏற்படுத்த மேற்கொண்ட முயற்சியாகவுமே நான் கருதுகின்றேன்.
கடந்த இருபது வருடங்களுக்கு மேலாக நானும் எனது கட்சியும் எடுத்து வந்த உறுதியான அரசியல் நிலைப்பாடுகளே இன்று நடைமுறைச்சாத்தியமானதாக சகலராலும் ஏற்றுக்கொள்ளப் பட்டிருப்பதோடு எனது நடைமுறை சாத்தியமான வழிமுறையின் பயன்பாடுகளை எமது மக்களும் முழுமையாக அனுபவிக்கும் சூழலும் கனிந்திருக்கின்றது என்பதனை இன்று எல்லோரும் ஏற்றுக் கொண்டுள்ளனர்.
எமது மக்களுக்கான உறுதியான வழிகாட்டலை கொடுத்துவரும் என்னையும் எனது கட்சியையும் அரசியல் ரீதியாகப் பலவீனப்படுத்த முயற்சிப்பதன் மூலம் எமது மக்களை மறுபடியும் ஓர் இருண்ட யுகத்தினுள் தள்ளிவிட்டு எமது சமூகத்தின் அரசியலுரிமை பிரச்சினையை தீராப்பிரச்சினையாக தொடர்ந்தும் நீடித்து தமது சுயலாப அரசியலை நடத்துவதே இதன் கபட நோக்கமாகும் என்பதனையும் எமது மக்கள் நன்கு விளங்கிக் கொண்டு செயற்படுவார்கள் என நான் நம்புவதுடன் என் மீதும் எனது கட்சியின் மீதும் சில ஊடகங்கள் மேற்கொண்டுள்ள அவதூறான பிரசுரங்களுக்கு எதிராக நான் விரைவில் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளேன் என்பதனையும் தெரிவிக்க விரும்புகிறேன்.
டக்ளஸ் தேவானந்தா
செயலாளர் நாயகம்
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply