தேசிய அனர்த்த தினம் – தேசிய பாதுகாப்பு தின வைபவங்கள் மக்களை ஏமாற்றும் நடவடிக்கை : ஆனந்தசங்கரி

தேசிய அனர்த்த தினம், தேசிய பாது காப்பு தினம் ஆகிய இரு வைபவங்களையும் இணைத்து பிரதமர் டீ. எம். ஜயரத்ன தலைமையில் நடைபெற்ற விழா தமிழ் மக்களை ஏமாற்றுவதாகவும் வெந்த புண்ணில் வேல் பாச்சுவதற்கு ஒப்பாகவும் அமைந்துள்ளது என தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார். சுனாமியால் உறவுகளை இழந்தவர்களையும் புதுமாத்தளனில் உறவுகளை இழந்து தேடிஅலைபவர்களையும் இந் நிகழ்வில் கலந்து கொள்ளுமாறுவற்புறுத்தியமை மனித உரிமைகளை மீறும் ஒரு செயற்பாடாகும் எனவும் அவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சுனாமியால் தம் உறவுகளை இழந்த மக்கள் இவ்வைபவம் நடந்து கொண்ட வேளை கதறி அழுததையும் இன்று வரை ஆறாத்துயரில் ஆழ்ந்திருப்பதையும் யாவரும் அறிந்ததே. கண்முன்னே பச்சிளங் குழந்தைகள், அண்ணன் தம்பி, கணவன் மனைவி, தாய் தந்தையர் ஆகியோரை வெள்ளம் அடித்துச் சென்றதை எத்தனை வருடங்கள் சென்றாலும் மறக்க முடியாது. இன்றுவரை அத்தகைய குடும்பங்கள் பல பொங்கல்கள், வருடப்பிறப்புக்கள், தீபாவளிகள், நத்தார் போன்ற விழாவையும் கொண்டாடவில்லை. அதே போன்று புதுமாத்தளனில் தம் உற்றார், உறவினரை தொலைத்த பலர் அவர்களை இன்றுவரை தேடி அலைகின்றனர். பனையால் விழுந்தவனை மாடு ஏறி மிதிப்பது போல அப்பாவி மக்களையும் அரச ஊழியர்களையும், பாடசாலை மாணவர்களையும் அதிபர்கள், ஆசிரியர்களையும் பாடசாலை வாத்தியக் குழுவினரையும் இந் நிகழ்வில்பங்கேற்கவும் கலந்து கொள்ளவும் வற்புறுத்தியமை மனித உரிமைகளை மீறும் ஒரு செயற்பாடாகும். கடந்த கால உறவுகளின் நினை வுகளை எண்ணி கதறி அழவேண்டிய மக்களின் உரிமையைப் பறித்தெடுத்து அவர்களை கேளிக்கைகளில் ஈடுபடுத்தியமை வேதனைக்குரியதும் கண்டிக்கப்பட வேண்டியதுமாகும். இதே போன்று எதிர்வரும் தைப்பொங்கல் விழாவைக் கலை விழாவாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படுவது எமக்கு அவசியம்தானா என எண்ணத் தோன்றுகிறது.
 
 தமிழ்ப் பகுதியிலேயே தேசிய கீதத்தை சிங்கள மொழியில் வற்புறுத்தி பாடவைத்து நாட்டுப்பற்று பற்றியும் இன ஒற்றுமையைப் பற்றியும் பேசும் பிரதமர் இந்நிலமைக்கு பொறுப்பானவர்களுக்கு நல்லறிவு கூறுவாரென நம்புகிறேன். இதில் நான்கலந்து கொள்ளவில்லையென்றோ இந் நிகழ்விற்கு அழைப்பு வரவில்லை என்றோ கவலைப்படவில்லை. நித்திய கண்ணீருடன் வாழும் வன்னி மக்களுக்கு துயர் துடைக்கும் தார்மீக கடமை யாழ். மக்களுக்கு உண்டு.
 
ஏறக்குறைய நாற்பது வருடங்கள் எனது நண்பராக இருக்கின்ற பிரதம அமைச்சர் என் வேண்டு கோளுக்கு செவி சாய்ப்பார் என நம்புகின்றேன் எனவும் ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply