ஆனந்த சங்கரி ஐயாவிற்கு அன்பான ஒரு அறிவு மடல் : க. சிவராசா
முக்கியமான விடயங்களுக்கு முக்கியமான தலைவர்களுக்கு மடல் எழுதும் எனக்கே ஒரு மடலா? யார் அதை எழுதுவது? அப்படி எனக்குத் தெரியாத எண்ணத்தை எழுதப் போகிறார்கள்? என்று ஐயா நினைப்பது எமக்குப் புரிகிறது. உண்மையில் உங்களுக்கு மடல் எழுத இனியொருவர் பிறந்துதான் வரவேண்டும். ஆனாலும் இந்தச் சிறியோனின் இந்தச் சிறிய மடலை அரசியலில் ஊறித்திளைத்த மூத்தவர் நீங்கள் வாசிக்கத்தான் வேண்டும்.
தமிழ் மக்களுக்கு விடுதலைப் புலிகளால் இந்த நிலை வரும் என்பதை நீங்கள் பலதடவைகள் தெரிவித்த போது உங்களைப் பார்த்து ஏளனச் சிரிப்புச் சிரித்துவிட்டு வன்னி சென்று வாங்கிக் கட்டிக் கொண்டு, விழுந்தவன் மீசையில் மண் படாதது போன்று கொழும்பு வந்து நடமாடிய நமது தமிழ் அரசியல்வாதிகள் மத்தியில் நீங்கள் ஒரு தீர்க்கதரிசியானவர்.
புலிகளிடம் நீங்கள் கற்றுக் கொண்ட பாடம் போன்று எவரும் கற்றுக் கொள்ளவில்லை என்றால் அது உண்மை. அதனால்தான் தமிழ் மக்களுக்கான உங்களது எச்சரிக்கையை நீங்கள் வலுவாக துணிச்சலுடன் விட்டிருந்தீர்கள். அன்று புலிகளுக்கு வால் பிடித்துவந்த அனைவரும் இன்று நீங்கள் அன்று சொன்னவற்றை நிச்சயம் இரை மீட்டிப் பார்ப்பர்.
புலிகளுக்கும், அதன் மறைந்த தலைவருக்கும் அன்று நீங்கள் துணிந்து எழுதிய மடல்கள் பலரை வியப்பில் இன்று ஆழ்த்துகின்றது. தமிழ் மக்களை பகடைக் காய்களாக எண்ணி புலிகள் இஷ்டம்போன போக்கில் நடந்து கொண்ட விதம் இன்று தமிழ் மக்களை அரசியல் அநாதைகளாக்கிவிட்டது. அரசாங்கத்தின் ஆதரவுக் கரம் மட்டுமே அம் மக்களுக்கு ஒரு தெம்பைத் தருகின்றது.
நீங்கள் குறிப்பிட்டது போன்று புலிகள் உண்மையான இதய சுத்தியுடன் ஏதோ ஒரு அரசாங்கத்துடனாவது பேசியிருந்தால் இன்று அவர்களும் அழிந்திருக்கமாட்டார்கள். அவர்களால் தமிழ் மக்களும் இவ்வளவு தூரம் கஷ்டப்பட்டிருக்க மாட்டார்கள். உங்களது தீர்க்கதரிசனமான யதார்த்தத்தை எவரும் புரிந்து கொள்ளவில்லை.
வயதாகிவிட்டது, யாருக்கோ வக்காளத்து வாங்குகிறார், தமிழினத் துரோகி என்றுகூட வாய் கூசாமல் விமர்சித்தவர்கள் இன்று வாயடைத்துப் போய் கூனிக் குறுகி நிற்கிறார்கள். அதுதான் சொல்வது, சிறுபிள்ளை வேளாண்மை வீடு வந்து சேராது என்று. அது எவ்வளவு தூரம் உண்மையாகிவிட்டது. புலிகளுக்கு உரமூட்டி வளர்த்து இறுதியில் அவர்களுடன் சேர்த்து அப்பாவி மக்களையும் இன்னலுக்குள்ளாக்கியவர்கள் இன்றும் திருந்துவதாக இல்லை.
ஐயா, உங்களது அரசியல் அனுபவம் முதுமையானால் ஒன்றும் குறைந்துவிடாது. இன்றும் அரசியலில் நீங்கள் துடிப்பான இளைஞனே. இன்றுள்ள பல அரசியல்வாதிகள் உங்களிடம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள் நிறையவே உள்ளன. அரைகுறை அரசியல் அறிவை வைத்துக் கொண்டு பாராளுமன்றத்தில் தமிழில் கூட உரையாற்றத் தடுமாறும் தமிழ் அரசியல்வாதிகளுக்கு நீங்கள் உங்கள் அனுபவத்தைப் பகிர்ந்து ஞானத்தை ஊட்ட வேண்டும். அரசாங்கத்தின் குறைகளை மட்டும் கூறுவதையே அரசியல் என்று பல அரசியல்வாதிகள் இன்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
குறிப்பாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ புலிகளுடன் இதய சுத்தியுடன் பேச்சுவார்த்தை நடத்த முனைந்த போது, பல நல்ல விடயங்களை நீங்கள் முன்வைத்தீர்கள். எப்படியாவது இனப்பிரச்சினைக்குத் தீர்வினைக் கண்டு தமிழ்பேசும் மக்களுக்கு விடிவை ஏற்படுத்த முனைந்தீர்கள். ஆனால் புலிகள் கேட்டால்தானே. மாவிலாற்றில் சண்டித்தனம், மணலாற்றில் ஆயுதம் இறக்குதல் என்று அரசாங்கத்தை வெறுப்பூட்டியது. புலிகளை அழிப்பது என்பது அரசுக்கு தவிர்க்க முடியாது போனது.
தாங்கள் இன்று புலிகள் அழிக்கப்பட்ட நிலையிலும் அரசாங்கத்தின் நல்ல விடயங்களை பாராட்டுவதுடன், குறைகள் காணப்பட்டால் தயக்கமின்றிச் சுட்டிக் காட்டுவதும் எவரையும் கவரும் ஒன்றாகும். தாங்கள் ஒரு அரசியலில் முதிர்ந்த ஒரு ஞானி என்பதால், தமிழ் மக்களது தீர்வு விடயத்தில் ஜனாதிபதி கூட உங்களது கருத்துக்களை உள்வாங்கிச் செயற்படுவதில் பின்நிற்கமாட்டார். பல சந்தர்ப்பங்களில் ஜனாதிபதி உங்களது கருத்துக்களுக்கு இடமளித்துச் செயற்பட்டுள்ளார்.
இத்தகைய அனுபவம் வாய்ந்த மூத்த அரசியல்வாதியான நீங்கள் இன்றைய அரசாங்கத்தின் செயற்பாடுகளையும் உன்னிப்பாக கவனித்தே வருகின்அர்கள் என்பது தங்களது அறிக்கைகள் மூலமாகத் தெளிவாகிறது. ஆனால் அரசாங்கத்தின் மீது வெறுமனே குற்றச்சாட்டுக்களை மட்டுமே முன்வைக்கும் தமிழ்க் கட்சிகளுக்கு மத்தியில் நீங்கள் முற்றிலும் வித்தியாசமானவர். நல்லதை நல்லது என்று சொல்லும் பக்குவம் எல்லோருக்கும் வராது. ஆனால் அது உங்களுக்கு நிறையவே உள்ளது.
உங்களது முதிர்ந்த வார்த்தையைக் கேட்காது தமிழ் மக்களை இன்று நட்டாற்றில் கைவிட்டுச் சென்றுள்ள புலிகள் இன்னமும் மக்களை நிம்மதியாக வாழ விடுவதாக இல்லை. இன்று அக்கரைகளில் நின்று நடுக்கடலுக்கு வா என்று அழைப்பது போன்று புலம்பெயர்ந்த நாடுகளிலிருந்து இங்குள்ள மக்களை குழப்பி வருகின்றனர்.
இறுதி யுத்தத்தில் மக்கள் கஷ்டப்பட்டாலும், இன்று அவர்கள் நிம்மதிப் பெருமூச்சுடன் சுகமாக வாழ்ந்து வருகின்றார்கள். குறைகள் சில இருந்தாலும், அம்மக்கள் நிம்மதியாக வாழ்ந்து வருகின்றனர். அரசாங்கம் அந்தளவிற்கு அவர்களை நன்றாகக் கவனித்து வருகின்றது. சுதந்திரமாக, நிம்மதியாக வாழ்வதையே இந்தப் பாதிக்கப்பட்ட மக்கள் விரும்புகின்றனர். அவர்களில் தொண்ணூற்று ஒன்பது சதவீதமானோர் அரசாங்கத்தின் செயற்பாடுகளை, உதவிகளை வரவேற்றுள்ளனர்.
இன்று தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பதற்கு அரசாங்கம் தயாராகவே உள்ளது. அதனை அரசு வெளிப்படையாகவே தெரிவித்துள்ளது. வெளியாரது தலையீடுகள் மற்றும் வற்புறுத்தல்கள் இல்லாது சம்பந்தப்பட்ட மக்களது பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி ஒரு இறுதித் தீர்வினைப் பெறுவதில் அரசாங்கம் முனைப்பாகவும், தீவிரமாகவும் உள்ளது.
எனவே காலத்தைக் கடத்துவதில் அர்த்த மில்லை. முன்னர் தீர்வு விடயத்தில் காலங் கடத்தி இழுத்தடிக்கிறது என அரசாங்கத்தைக் குறை கூறுவது பலரது அரசியலாக இருந்தது. ஆனால் இன்று நிலைமை வேறு. நாங்கள் ரெடி, நீங்கள் ரெடியா என்பது போல அர சாங்கம் தயாராக உள்ளது. தமிழ் கட்சிகள்தான் ஒரு நிலைப்பாட்டுக்கு வரமுடியாது இழுத் தடிக்கிறது போலத் தோன்றுகிறது.
இதில் தங்களது பங்களிப்பு என்னவென்றால், தமிழ்க் கட்சிகளை ஒன்றுபடுத்தி அவர்களுக்கிடையே ஒரு இணக்கப்பாட்டை ஏற்படுத்தி, தங்களது முதுமையான அனுபவம் மூலமாக அவர்களை ஒற்றுமைப்பட வைப்பதே. இதில் நான் பெரியவன், எனக்குப் பிறகுதான் நீ, நீ ஆட்களைச் சுட்ட கட்சி என்று வாதிடுவதால் பலனில்லை. அரசாங்கத்தின் குறிப்பாக ஜனாதிபதியின் தீர்வுத் திட்டத்திற்கு தமிழ்க் கட்சிகள் ஒருமித்த கருத்தை முன்வைக்க வேண்டும். அதற்கு நீங்கள் வழிவகை செய்ய வேண்டும்.
லண்டனில் ஜனாதிபதிக்கு புலம்பெயர் தமிழ்ச் சமூகத்திலுள்ள சிலர் அபகீர்த்தியை ஏற்படுத்த முனைந்த போதும், அவர் நாடு திரும்பிய பின்னர் பாராளுமன்றத்தில் உரையாற்றும் போது தமிழ் மக்களது தீர்வு தொடர்பாக லண்டன் மாநாட்டில் தெரிவிக்க இருந்தேன். அவர்களுக்கு அதில் நாட்டமில்லை போலும், என்னைப் பேசவிடாது தடுத்துவிட்டனர் என மனவருத்தத்துடன் தெரிவித்திருந்தார்.
எனவே இனியும் அவ்வாறானதோர் தரக்குறைவான சந்தர்ப்பத்தை ஏற்படுத்தாது, மக்களது விடிவுக்காக ஒன்றுபட்டு, இந்த அரசாங்கத்தின் மூலமாக ஒரு தீர்வினைப் பெற்றுக் கொள்ள எல்லோரையும் ஒன்றிணையுங்கள். நீங்கள் சொன்னால் கேட்கும் நிலையில் தமிழ் மக்கள் உள்ளனர். எனவே அந்தத் தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாகக் கூறும் இவர்களும் கேட்கத்தானே வேண்டும். அதற்கான அனுபவமும், ஆற்றலும், அறிவும், சக்தியும், முதிர்வும் தங்களிடம் மட்டுமே உள்ளதால் இந்த மடலைத் தங்களுக்குச் சமர்ப்பிக்கின்றோம்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply