யாழ். குற்றச்செயல்களின் பின்னணியில் என்ன? சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் விளக்கம்
யாழ். மாவட்டத்தில் இடம்பெற்ற களவுகள் கொலைகள் உட்பட பல்வேறு குற்றச்செயல்களின் பின்னணியில் தனிப்பட்ட காரணங்களே காணப்படுவதாக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நெவில் பத்மதேவா தெரிவித்துள்ளார். யாழ். மாவட்டத்தில் நடைபெறும் குற்றச்செயல்களை கட்டுப்படுத்துவது சம்பந்தமாக மாவட்டத்தின் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் வர்த்தக கழகப் பிரதிநிதிகள் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் ஊடகவியலாளர்களுடனான சந்திப்பொன்று இடம்பெற்றது.
இந்தச் சந்திப்பில் உரையாற்றிய சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் நெவில் பத்மதேவா “யாழ்ப்பாணத்தில் இன்று புதியதொரு கலாசாரம் காணப்படுகின்றது. இளைஞர்கள் காதில் தோடு அணிவது மற்றும் தலைமயிர் வளர்ப்பது உட்பட பல்வேறு கலாசார சீர்கேடுகளையும் காணக் கூடியதாகவுள்ளது.
இதே போன்று அண்மையில் யாழ். மாவட்டத்தில் இடம்பெற்ற களவுகள் கொலைகள் உட்பட பல்வேறு குற்றச்செயல்களின் பின்னணியில் தனிப்பட்ட காரணங்களே காணப்படுகின்றன. இத்தகைய குற்றச்செயல்களை கட்டுப்படுத்துவதில் பொலிஸாருக்கு பொது மக்கள் ஒத்துழைப்பை வழங்குவதன் மூலமே கட்டுப்படுத்த முடியும்.
யாழ்ப்பாணத்தில் சந்திக்கு சந்தி நிற்கும் இளைஞர்கள் வீதியில் செல்லும் பெண்கள் மற்றும் பாடசாலை மாணவிகளின் மீது சேட்டை செய்யும் செயற்பாடுகள் இடம்பெறுகின்றன. இதனை அங்கீகரிக்க முடியாது. இதனையிட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதுடன் இத்தகையவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படும்.
பெற்றோர்கள் தமது பள்ளைகள் பற்றி கண்கானிக்க வேண்டும். யாழ்ப்பாணத்தில் வர்த்தக சங்கத்தினர் சார்பில் பாதுகாப்பு அலுவலர்கள் சிலர் இணைந்து செயற்படும் சந்தர்ப்பத்தில் வர்த்தக நிலையங்களைப் பாதுகாக்க வசதியாக இருக்கும்.
வணிகர் கழகம் உதவி செய்தாலும் சரி செய்யாவிட்டாலும் கூட யாழ் நகரப் பகுதியின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும். பெண்கள் தமது நகைகளை பாதுகாப்பாக வைக்க வேண்டும். தமிழ் பெண்களுக்கு தாலி என்பது மிகவும் அவசியமானதாகும்.
இதனை திருடனிடம் கொடுத்து விட்டு கதறி அழுவதினால் எந்த வகையான பயனும் எற்படப் போவதில்லை ஆகையினால் ஒவ்வொருவரும் தமது விடயத்தில் கூடிய கவனம் எடுக்க வேண்டும்.
ஏதாவது சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடுபவர்கள் மற்றும் புதியவாகளின் நடமாட்டங்கள் காணப்பட்டால் அயலில் உள்ள பொலிசாருக்கு அறிவிக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply