பத்திரிக்கை ஆசிரியரான லசந்த விசாரணையில் முன்னேற்றமில்லை

இலங்கையில் நன்கு அறியப்பட்ட சண்டே லீடர் பத்திரிக்கை ஆசிரியரான லசந்த விக்ரமதுங்க பட்டப் பகலில் சுட்டுக் கொல்லப்பட்டு இன்று சனிக்கிழமையோடு இரண்டு ஆண்டுகள் ஆகின்றன. ஆனால் இதுவரை யாரும் அவரின் கொலை தொடர்பாக கைது செய்யப்படவில்லை. இது போன்ற கொலைகள் இலங்கை பத்திரிக்கையாளர்கள் மத்தியில் அச்சத்தை தோற்றுவித்ததுடன் சில விடயங்களில் சுய தணிக்கையில் ஈடுபடும் சூழலிலும் அவர்களைத் தள்ளியதாக மனித உரிமை செயற்பாட்டாளர்கள் கூறுகின்றனர்.

லசந்த விக்ரமதுங்க, அவரது சண்டே லீடர் பத்திரிகையில் அரச தரப்பைச் சார்ந்தவர்கள் உள்ளடங்கலாக பல முக்கிய புள்ளிகளை தாக்கி எழுதியுள்ளார். யுத்தத்தைப் பற்றியும் அது முன்னெடுக்கப்பட்ட விதம் பற்றியும் விமர்சித்த லசத்த சிலரின் தனிப்பட்ட வாழ்க்கையுடன் சம்பந்தப்பட்ட சர்ச்சைக்குரிய பல விடயங்களையும் வெளிக்கொணர்ந்துள்ளார்.

அவருக்கு அஞ்சலி செலுத்திய பலரும் அவரது படுகொலை தொடர்பில் அரசாங்கத்தின் மீதும் அரச படையினர் மீதுமே குற்றஞ்சாட்டியிருந்தனர்.

அந்தக்காலத்தில் எதிர்க்கட்சி அரசியல்வாதியாக இருந்த ரவூப் ஹக்கீம், படுகொலையைக் கண்டித்து நடைபெற்ற பெரும் ஆர்ப்பாட்டப் பேரணியிலும் கலந்துகொண்டவர்.

தற்போது மகிந்த அரசின் நீதியமைச்சராக பதவியேற்றுள்ள ரவூப் ஹக்கீம், லசந்தவின் படுகொலையால் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ அதிர்ச்சியும் கவலையும் அடைந்ததாக கூறுகின்றார்.

பாதுகாப்புச் செயலரும் ஜனாதிபதியின் சகோதரருமான கோட்டாபய ராஜபக்ஸ முக்கியமான செவ்வியொன்றில், இந்தப் படுகொலைக்கான பொறுப்பை முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா மீதே சுமத்தியிருந்தார்.

லசந்த படுகொலை தொடர்பில் இலங்கை இராணுவப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த 16 பேர் பல மாதங்களாக தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த போதிலும், பின்னர் அவர்களும் விடுவிக்கப்பட்டுவிட்டனர்.

இந்த விசாரணைகளில் அதிகாரபூர்வமாக நியாயமான முடிவு எதுவும் கிடைக்கும் என்பதில் சந்தேகமே இருப்பதாக சண்டே ஐலண்ட் பத்திரிகையின் ஆசிரியர் மெனிக் டி சில்வா சுட்டிக்காட்டுகின்றார்.

இதற்கிடையே, லசந்தவின் படுகொலையை இலங்கையில் ஊடக சுதந்திரத்துக்கு விழுந்த பெரும் அடியென சுட்டிக்காட்டியுள்ள எல்லைகளற்ற ஊடகவியலாளர்கள் அமைப்பு, இலங்கை அரசாங்கம் இந்த விசாரணைகள் குறித்து எவ்வித முன்னேற்றமும் காணாது உண்மைகளை வெளிவரவிடாது தடைகளை ஏற்படுத்துவதாகவும் அதனால் பெரும் விரக்தி அடைந்துள்ளதாகவும் அறிக்கை வெளியிட்டுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply