502 நலன்புரி முகாம்களில் 2 இலட்சம் பேர் தஞ்சம்

5 மாவட்டங்களில் 10 இலட்சம் பாதிப்பு: 18 பேர் பலி: 1600 வீடுகள் அழிவு
மட்டு மாவட்டம்: 1,22,000 பேர்
அம்பாறை மாவட்டம்: 3 இலட்சத்து 36,000 பேர்
திருமலை மாவட்டம்: 30,965 பேர்
பொலநறுவை மாவட்டம்: 10, 842 பேர்

கிழக்கு மாகாணம் உள்ளிட்ட பிரதேசங்களில் ஏற்பட்டுள்ள மோசமான வெள்ளப் பெருக்கு மற்றும் மண்சரிவு காரணமாக நேற்று வரை (12) 9 இலட்சத்து 66 ஆயிரத்து 757 பேர் பாதிக்கப் பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் உத்தியோகபூர்வமாக அறிவித்தது.

இதுவரை 18 உயிரிழப்புகள் ஏற் பட்டுள்ளதுடன் 49 பேர் காயமடைந் துள்ளனர். அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களில் 2 பேர் காணாமற் போயுள்ளனர்.

502 முகாம்களில் ஒரு இலட்சத்து 97 ஆயிரத்து 221 பேர் தங்க வைக்கப் பட்டுள்ளதுடன் 1609 வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளதாகவும் 11,338 வீடுகள் பகுதியளவு சேதமடைந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது. இடர் முகாமைத் துவ நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் காமினி ஹெட்டியாராச்சி செய்தியாளர் மாநாட்டில் இந்தத் தகவல்களைத் கூறினார்.

தகவல், ஊடகத்துறை அமைச்சில் நேற்று முற்பகல் 11 மணிக்கு நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் மேஜர் ஜெனரல் ஹெட்டியாராச்சியுடன் இடர் முகாமைத்துவ அமைச்சின் மேலதிகச் செயலாளர் காமினி ராஜகருணா, வானிலை அவதான நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் பீ. பி. சமரசிங்க கட்டட ஆராய்ச்சி அமைப்பின் பிரிவுத் தலைவர் ஆர்.எம்.எஸ். பண்டார ஆகியோரும் கலந்து கொண்டு தகவல் களை வழங்கினர்.

மேஜர் ஜெனரல் ஹெட்டியாராச்சி தொடர்ந்து தகவல் வழங்குகையில்,

“மட்டக்களப்பு மாவட்டமே கூடுதலாகப் பாதிக்கப்பட்டுள்ளது. நேற்று 113 மி.மீ. மழை பெய்துள்ளது. திரு கோணமலை, பொலநறுவை மாவட்டங்களில் பாதிப்பு குறைவடைந்துள்ளது.

மட்டக்களப்பு மாவட்டம்

இங்கு 5 இலட்சத்து 33 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நிர்க்கதி நிலைக்கு உள்ளான 30,264 குடும்பங்களைச் சேர்ந்த 1,22,000 பேர் 225 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளார்கள். மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏழு மரணங்கள் சம்பவித்துள்ளன.

அம்பாறை மாவட்டம்

இரண்டு மரணங்கள் சம்பவித்துள்ளன, 88,376 குடும்பங்களைச் சேர்ந்த 3 இலட்சத்து 36 ஆயிரத்து 470 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 49 முகாம்களில் 7,817 குடும்பங்களைச் சேர்ந்த 28,744 பேர் தங்கியுள்ளனர்.

திருகோணமலை மாவட்டம்

இந்த மாவட்டத்தில் 8194 குடும்பங்களைச் சேர்ந்த 31,374 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மரணம் சம்பவிக்கவில்லை. வீடகள் சேதமடைந்ததாகவும் தகவல் இல்லை.

நிர்க்கதி நிலைக்கு உள்ளான 8665 குடும்பங்களைச் சேர்ந்த 30965 பேர் 97 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

பொலநறுவை மாவட்டம்

இங்கு 2705 குடும்பங்களைச் சேர்ந்த 10,842 பேர் பாதிக்கப்பட்டு 77 முகாம்களில் தங்கியுள்ளனர்.

தவிரவும் 200 இற்கும் அதிகமான சிறிய குளங்கள் சேதமடைந்துள்ளன. இரண்டு இலட்சம் ஏக்கர் வயல் நிலம் நாசமடைந்துள்ளன. மட்டு. அம்பாறை மாவட்டத்தின் இணை வீதிகள் நீரில் மூழ்கியுள்ளன.

மண்சரிவு, அபாயம்

கண்டி, மாத்தளை, பதுளை, நுவரெலியா மாவட்டங்களில், 100 இற்கும் மேற்பட்ட மண்சரிவுகள் ஏற்பட்டுள்ளன. 2003 மே மாதம் 17ம் திகதி இரத்தினபுரி கேகாலை மாவட்டங்களில் மழை பெய்ததில் 400-500 மண்சரிவுகள் ஏற்பட்டன.

தற்போது ஏற்பட்ட மண்சரிவுகளில் கண்டியில் ஒருவரும் பதுளையில் ஒருவரும் கொல்லப்பட்டுள்ளனர். 500 வீடுகள் சேதமடைந்துள்ளன” என்றார்.

அம்பாறை மாவட்டம்

அம்பாறை மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 4 இலட்சம் மக்களுக்கும் தேவையான உடனடி உதவிகளை வழங்குமாறு அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சுனில் கன்னங்கர பிரதேச செயலாளர்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

இடம்பெயர்ந்து முகாம்களில் தங்கியிருக்கும் மக்களுக்கான சமைத்த உணவுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

(கல்முனை குறூப் நிருபர்)

அம்பாறை மாவட்டத்தில் வெள்ள அபாயம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு செல்லும் நிலையில் இதுவரை இம்மாவட்டத்தில் 4 இலட்சத்து 22 ஆயிரத்து 958 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இம்மாவட்டத்தின் 20 பிரதேச செயலகங்களிலுமாக 1 இலட்சத்து 9 ஆயிரத்து 568 குடும்பங்கள் முற்றாகப் பாதிக்கப்பட்டுள்ளதும் இடம்பெயர்ந்துள்ள மக்கள் பாடசாலைகள் மற்றும் மத ஸ்தாபனங்களில் தஞ்சமடைந்துள்ளனர். நேற்று புதன்கிழமை வரை 25 ஆயிரத்து 457 குடும்பங்களிலுள்ள 98 ஆயிரத்து 352 பேர் தற்காலிக முகாம்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதேவேளை 4183 பேர் தமது உறவினர்களின் வீடுகளில் தஞ்சமடைந்துள்ளனர்.

பொதுவாக மக்களின் அன்றாட வாழ்க்கைகள் ஸ்தம்பிதமடைந்துள்ளதுடன் உணவுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கு சமைத்த உணவுகள் வழங்கப்பட்டு வருகின்றன. சகல இடங்களும் வெள்ளக் காடாக காட்சி தருகின்றது. நேற்று முன்தினம் இம் மாவட்டத்திலுள்ள பல குளங்கள் உடைப்பெடுத்ததையடுத்து சகல இடங்களுக்கு நீர் பரவு நீர்மட்டம் அதிகரித்ததனால் மக்கள் பீதியடைந்ததுடன் அடுத்து என்ன நடக்கப் போகின்றது என்ற சந்தேகத்துடன் காணப்பட்டனர். சுமார் 100 வருட வரலாற்றில் இவ்வாறானதொரு நிலைமையை நாம் காணவில்லை. முதியவர்கள் அதிசயத்துடன் கூறுவதை அவதானிக்கவும் முடிகின்றது.

(பொத்துவில் தினகரன் நிருபர்)

வெள்ள அனர்த்தத்தினால் பொத்துவில் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட 27 கிராம சேவையாளர் பிரிவுகளிலுள்ள கோமாரி அறுகம்பைக் கிராமங்கள் உள்ளிட 10500 குடும்பங்கள் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளதுடன், 100க்கும் மேற்பட்ட வீடுகள் உடைந்துள்ளதாகவும் பாதிக்கப்பட்ட மக்களின் ஒரு பகுதியினர் 14 இடைத் தங்கல் முகாங்களிலிருப்பதாகவும் ஒரு பகுதியினர் உறவினர் வீடுகளில் தங்கியிருப்பதாகவும் பொத்துவில் பிரதேச செயலாளர் யு. எல். நியாஸ் தெரிவித்தார்.

இவர்களுக்கான சமைத்த உணவுகள் சுத்தமான நீர் வழங்குவதில் இளைஞர் அமைப்புக்கள், இராணுவம், பொலிஸ், கிராம சேவையாளர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள் ஈடுபட்டு வருவதுடன், நீர் தேங்கியிருக்கும் இடங்கள் இனங் காணப்பட்டு வடிகான் இராணுவத்தின் உதவியுடன், பிரதேச சபை பிரதேச செயலக உத்தியோகத்தர்களினால் மேற்கொள்ளப்பட் டுள்ளன.

இன்றிலிருந்து உலர் உணவு வழங்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட் டுள்ளதாகவும், பிரதேச செயலாளர் தெரிவித்தார். இதேவேளை எட்டாயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் நெல்வயல்கள் கதிர் முற்றியுள்ள பருவத்தில் நீரில் மூழ்கியுள்ளது.

பொத்துவில் றொட்டைகுளம் இறத்தல்குளம் லகுகலை குளம், கித்துளானைக் குளம் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாகவும், பாணமை குளம், செங்காமம் அணைக்கட்டு வெட்டப்பட்டுள் ளதாகவும் தெரிவித்த நீர்ப்¡சன பொறியியலாளர், மொனறாகலை ‘சுகலா தேவி’ அணை உடைவால் பொத்துவில் கரந்தி ஓயா வழியாக பெருவெள்ளம் வந்துள்ளதாக தெரிவித்தார்.

லகுகலை பிரதேச செயலாளர் தெரிவிக்கையில், 250 குடும்பங்கள் பாதிப்பிற்குள்ளாகியும் 400 ஏக்கர் நிலம் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இராணுவ உதவியுடன் நிவாரணமாக சமைத்த உணவு வழங்கப்படுவதுடன் நாளை 13ந் திகதி உலர் உணவு வழங்கப்படவுள்ளன.

உடனடியாக சிறுபிள்ளைகளுக்கான பால் மா உணவுகள் தேவையாயுள்ளன.

(சென்றல்கேம்ப் குறூப் நிருபர்)

மாவட்டத்தில் தொடர்ந்து பெய்துவரும் அடைமழை காரணமாக நாவிதன்வெளி பிரதேச செயலக பிரிவிற்கான அனைத்து வீதி போக்குவரத்துக்களும் முற்றாக துண்டிக்கப்பட்டு அப்பிரதேசம் தீவாக மாறியுள்ளது. வயல் பிரதேசங்களுடன் இணைந்து காணப்படுகின்ற இப்பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள மழை வெள்ளம், மற்றும் வாவிகளின் மேலதிக நீர் வெளியேற்றம், சிறு குளங்கள் உடைப்பெடுத்துள்ளமை காரணமாக இதுவரை 839 குடும்பங்களை சேர்ந்த 3487 பேர்கள் இடம்பெயர்ந்து 06 முகாம்களில் தஞ்சமடைந்துள்ளதாக நாவிதன்வெளி பிரதேச செயலாளர் டாக்டர் எம். கோபாலரெத்தினம் தெரிவித்தார்.

இதேவேளை சென்றல் கேம்ப் பிரதேசத்தில் மூவரும், நாவிதன்வெளி பிரதேசத்தில் ஒருவருமாக இதுவரை நால்வர் வெள்ள நீரில் அடித்துச்செல்லப்பட்டுள்ளனர். எனினும் ஒருவரின் சடலம் மாத்திரமே இதுவரை கண்டெடுக்கப்பட்டுள்ளது. நாவிதன்வெளி பிரதேச செயலகமும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதால் அதன் பணிகளும் மந்த கதியிலேயே இயங்கி வருகின்றது. 1957ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தையடுத்து இவ்வருடமே அவ்வாறானதொரு வெள்ளம் ஏற்பட்டுள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர். தொடர்ந்தும் பலத்த மழை பெய்து வருவதால் மேலும் பலர் இடம்பெயர்ந்து வருகின்றனர்.

(அக்கரைப்பற்று தினகரன் நிருபர்)

வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட வரை மீட்கும் பணியில் தொண்டு நிறுவனம் மற்றும் சிவில் பாதுகாப்புத் தொண்டர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுவரையில பதினொரு முகாம்களில் 2000க்கும் மேற்பட்டவர்கள் தங்கியுள்ளனர். இவர்களுக்கான உணவு, மற்றும் மருத்துவ வசதிகளை அரசு மற்றும் தொண்டு நிறுவனங்கள் மேற்கொண்டு வருகின்றன. பாதிக்கப்பட்டவர்களின் நலனைக் கவனிக்கவென வைத்தியசாலை கள் உசார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

அரச மற்றும் தனியார் காரியாலயங்க ளுக்கு உத்தியோத்தர்கள் சமுகமளித்தும் இயங்க முடியாத சூழ்நிலை உள்ளது. போக்குவரத்து முற்றாகத் தடைப்பட்டுள்ளது. மக்களின் இயல்பு நிலை முற்றாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

அனர்த்த நிலைமையை உடனுக்குடன் அறிந்துகொள்ளும் பொருட்டு அக்கரைப்பற்று பிரதேச செயலகம் 24 மணித்தியாலயம் சேவையை வழங்கி வருகின்றது. பிரதேச செயலாளர் வை. எல். சலீம், சமூக சேவை உத்தியோகத்தர் எம். ஐ. எம். அன்வர் உள்ளிட்ட அதிகாரிகள் பாதிக்கப்பட்டவர் தங்கியுள்ள முகாம்களுக்கு நேரடியாகச் சென்று நிலைமைகளை உடனுக்குடன் கேட்டறிந்து மாவட்ட செயலாளருடன் தொடர்புகளை மேற்கொண்டு வருகின்றனர்.

(சம்மாற்துறை குறூப் நிருபர்)

அம்பாறை – மட்டக்களப்பு மாவட்டங்களில் பெய்துவரும் மழை காரணமாக சம்மாந்துறை பிரதேச செயலகப் பிரிவில் வாழும் மக்கள் பாரிய அனர்த்தங்களுக்கு முகம் கொடுத்துள்ளனர். 23 முகாம்களில் 15779 குடும்பங்களைச் சேர்ந்த 62634 பேர் தங்கி உள்ளதாக சம்மாந்துறை பிரதேச செயலாளர் ஏ. மன்சூர் தெரிவித்தார். மேலும் 8330 குடும்பங்களில் 33812 பேர் உறவினர் வீடுகளில் தங்கி உள்ளனர். வீட்டுத் தோட்டப் பயிர்செய்கையாளர் 345 குடும்பங்களைச் சேர்ந்த 7465 பேர் மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர். 23 முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ளவர்களுக்காக சமைத்த உணவுகள் வழங்கப்பட்டு வருவதாகவும், சிறு குழந்தைகளுக்கான பால் மா, குடிநீர் போத்தல்கள், பாய்கள் தேவைப்படுவதாக பிரதேச செயலாளர் தெரிவித்தார். பாதிக்கப்பட்ட மக்களுக்காக உதவிகள் வழங்க விரும்பும் தனவந்தர்கள், நலன் விரும்பிகள், உதவி பொருட்களை சம்மாந்துறை பிரதேச செலயகத்தில் ஒப்படைக்க முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.

திருமலை மாவட்டத்தில்

31,000 பேர் பெரும் பாதிப்பு

(தம்பலகாமம், கிண்ணியா நிருபர்கள்)

திருகோணமலை மாவட்டத்தில் முப்பத்து ஓராயிரத்து முன்னூற்று எழுபத்து நான்கு பேர் (36374) இடம் பெயர்ந்துள்ளனர். இவர்கள் 99 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தம்பலகாமம் பிரதேச செயலாளர் பிரிவில் 123 குடும்பங்களைச் சேர்ந்த 369 பேர் 4 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் ஆதிகோணேஸ்வரா மகா வித்தியாலயம், பாரதிபுரம் கிராமோதய சபை கட்டிடம் ஜெயபுரம் பன்சாலை, முள்ளிப்பொத்தானை தாருஸ்ஸலாம் வித்தியாலயம் என்பவற்றில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

கந்தளாய் குளத்தில் இருந்து நேற்று இரண்டரை அடி நீர் வெளியேற்றப்பட்டது. இதன் காரணத்தினால் வெள்ளத்தின் அளவு குறைந்து காணப்பட்டது. இருப்பினும் தம்பலகாமம் பகுதி எங்கும் வெள்ளக்காடாகவே தொடர்ந்தும் விளக்குகின்றது.

தம்பலகாமம் கிண்ணியா, வான்அல கிண்ணியா வீதி தொடர்ந்தும் பாதிக்கப்பட்டுள்ளது. இவ்வீதி முற்றாக வெள்ள நீரால் அடித்துச் செல்லப்பட்டுள்ளது. முள்ளிப்பொத்தானை 97வது மைல் கல் பகுதிக்கு இடைப்பட்ட பாலம் ஒன்று உடைந்துள்ளது. கல்மெட்டியாவ குளத்தில் இருந்து அதிகளவான நீர் வெளியேற்றப்பட்டதன் காரணமாகவே இப்பாலம் சேதமடைந்துள்ளது. இதன் காரணமாக பாத்திமா வித்தியாலயத்திற்கு செல்லும் மாணவர்கள் பாடசாலை தொடங்கும் வேளையில் அங்கு செல்ல முடியாத நிலைமை தோன்றியுள்ளது.

மூதூர் பிரதேசத்தில் பள்ளிக்குடியிருப்பு இறால்குழி பகுதிகளும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. தங்கநகர் பள்ளிக்குடியிருப்பு வீதி தடைப்பட்டதன் காரணத்தால் இவர்கள் தனித்து விடப்பட்டுள்ளனர். இப்பகுதியில் காட்டு யானைகளின் தாக்கம் அதிகமாகக் காணப்படுகின்றது. காட்டுப்பகுதியில் இருந்த பெருமளவான யானைகள் இப்பகுதிக்கு வருவதன் காரணமாக மக்கள் இரவில் நிம்மதியாக தங்கியிருக்க அச்சம் கொள்கின்றனர்.

வெருகல் ஈச்சிலம்பற்று பகுதியில் மாவடிச்சேனை பகுதியில் 3 இடங்களில் போக்குவரத்து செய்ய முடியாத நிலை காணப்படுகின்றது. இப்பகுதி ஊடாக மக்கள் அவசர தேவைகளுக்காக படகுகள் மூலமாக அழைத்து வரப்படுகின்றனர். குச்சவெளி புல்மோட்டை வீதியில் யான்ஓயா என்னும் இடத்தில் 3 இடங்களில் வீதிக்கு குறுக்காக 3க்கும் அதிகமான அடி நீர் பரவுவதால் அப்போக்குவரத்தும் தடைப்பட்டுள்ளது. கல்லம்பற்றை குசவன்ஆற்று நீர் வான் பாய்வதால் அப்பகுதியும் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளது. சமணலன்குளம் உடைப்பெடுக்கும் வாய்ப்புத் தோன்றி உள்ளது. இக்குளத்தின் வான் கதவு திறந்ததன் காரணத்தால் பெருமளவான நெல் வயல்கள் சேதமடைந்துள்ளன.

(மூதூர் தினகரன் நிருபர்)

மூதூர் பிரதேசத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான அத்தியாவசிய தேவைகள் மற்றும் முதலுதவிகள் குறித்து ஆராய்ந்து நடைமுறைப்படுத்துவதற்கான ஒன்றுகூடல் கூட்டம் நேற்று மூதூர் அக்கரைச்சேனை சனசமூக கட்டடத்தொகுதியில் நடைபெற்றது.

முகாம்களில் தங்கியிருக்கும் மக்களுக்கு அவசியமான உணவுகள் ஏனைய வழங்க வேண்டிய தேவைகள், ஊரிப்புக்கள், மல கூட வசதிகள், டெண்டுகள் அதிகளவில் தேவைப்படுவதால் இவற்றை நிவர்த்திப்பதற்கான நடவடிக்கையிலும் மற்றும் மூதூர் தரைவழி கந்தளாய் பாதை போக்குவரத்து, மூதூர் கிண்ணியாவூடான போக்குவரத்து துண்டிப்புக் குறித்தும் விரிவாக ஆராயப்பட்டது.

மூதூர் பிரதேச செயலாளர் என். செல்வநாயகம், முன்னாள் மூதூர் பிரதேச சபைத் தவிசாளர் கே. எம். தெளபீக் (திடீர்) நீதவான் எம். எம். கரீம், மாகாண சபை உறுப்பினர் அபுல் பைதா ராசீக் பரீத், உதவித் திட்டமிடல் பணிப்பாளர் ஏ. எஸ்.எம். பாயிஸ், பொலிஸ் பிரதம இன்ஸ்பெக்டர் களுவாரச்சி கிராம சேவகர் எஸ். எம். மஜீட் ஆகியோரால் ஆராயப்பட்டது.

(திருமலை மாவட்ட விசேட சேருவில, தோப்பூர் தினகரன் நிருபர்கள்)

திருகோணமலை மாவட்டத்தில் வெள்ள அனர்த்தத்தினால் பாதிப்புக்குள்ளாகி வருவோர் மேலும் அதிகரித்து வருவதாக இடர் முகாமைத்துவ அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

அதேவேளை இம்மாவட்டத்தில் பல கிராமங்கள், வெள்ளத்தினால் மூழ்கியுள்ள நிலையில் போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டுள்ளது.

ஈச்சிலம்பற்று பிரதேசத்தில் பல கிராமங்களில் 6 அடிக்கு மேல் வெள்ள நீர் பரவியுள்ளதுடன் போக்குவரத்தும் முற்றாக துண்டிக்கப்பட்டுள்ளன.

அங்கிருந்து நேற்று 901 குடும்பங்களைச் சேர்ந்த 2000 க்கும் மேற்பட்டோர் நலன்புரி நிலையத்துக்குக் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் ஈச்சிலம்பற்று பிரதேச செயலாளர் திரு. தனேஸ்வரன் தெரிவித்தார்.

ஈச்சிலம்பற்று வைத்தியசாலையும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதால் அங்குள்ள நோயாளர்கள் சேருவில வைத்தியசாலைக்கும் இடமாற்றப்பட்டுள்ளனர்.

அதேவேளை மழையை நிறுத்தி வெள்ளத்திலிருந்து மக்களுக்கு பாதுகாப்பு வழங்கக் கோரி ஐவேளைத் தொழுகையிலும் துஆப் பிரார்த்தனைகளும் இடம்பெற்று வருகின்றன.

(குச்சவெளி தினகரன் நிருபர்)

திருகோணமலை மாவட்டத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட இடங்களையும், மக்களையும் திருகோணமலை மாவட்ட (பா- உ) எம். எஸ். தெளபிக் நேரில் சென்று பார்வையிட்டதோடு அவர்களுக்குத் தேவையான அத்தியாவசிய தேவைகளை நிறைவு செய்வதற்காக உரிய அதிகாரிகளிடம் கலந்துரையாடினார். புடவைக்கட்டு, ஜாயாநகர், குச்சவெளி, இறக்கக்கண்டி, நிலாவெளி, ஜமாலியா, மூர்வீதி போன்ற இடங்களிலுள்ள மக்களின் குறைகளைக் கேட்டறிந்ததோடு திருகோணமலை மாவட்டத்திற்கு வருகை தந்திருந்த அனர்த்த முகாமைத்துவ பிரதி அமைச்சர் டுலிப் விஜயசேகரவுடன் கலந்துரையாடி இருவரும் கிண்ணியாப் பிரதேசத்திற்கு படகு மூலம் சென்று பார்வையிட்டனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply