502 முகாம்களில் பாதிக்கப்பட்ட மக்கள் வெள்ளத்தில் சிக்குண்டு 18பேர் உயிரிழப்பு

கிழக்கு மாகாணம் உள்ளிட்ட நாட்டில் பல்வேறு பகுதிகளிலும் பெய்துவரும் கடும் மழை காரணமாக இதுவரை 9 இலட்சத்து 66 ஆயிரத்து 757 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இரண்டு இலட்சத்து 57 ஆயிரத்து 993 குடும்பங்கள் இடம் பெயர்ந்துள்ளன. 502 முகாம்களில் ஒரு இலட்சத்து 97 ஆயிரத்து 221 பேர் தங்கியுள்ளனர். வெள்ளத்தில் சிக்கி 18 பேர் மரணமடைந்துள்ளதுடன் 49 பேர் காயமடைந்துள்ளனர் என்று இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் காமினி ஹெட்டியாரச்சி தெரிவித்தார். கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மாவட்டத்திலேயே அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்ட அனைத்து குடும்பங்களுக்கும் தேவையான உதவிகள் வழங்கப்பட்டுவருகின்றன. உணவுப் பொருட்கள் ஹெலிகப்டர்கள் மற்றும் படகுகள் ஊடாக வழங்கப்பட்டுவருகின்றன என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஊடகத்துறை அமைச்சில் நேற்றுக்காலை நடைபெற்ற கலந்துரையாடலில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இந்த விபரங்களை குறிப்பிட்டார்.

அவர் அங்கு மேலும் கூறியதாவது கடந்த சில தினங்களõக நாட்டின் பல்வேறு பாகங்களிலும் பெய்துவரும் கடும் மழை காரணமாக கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை பொலன்னறுவை மாவட்டங்கள் உள்ளிட்ட பல பகுதிகளிலுமாக இதுவரை 9 இலட்சத்து 66 ஆயிரத்து 757 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இரண்டு இலட்சத்து 57 ஆயிரத்து 993 குடும்பங்கள் இடம் பெயர்ந்துள்ளன. 502 முகாம்களில் ஒரு இலட்சத்து 97 ஆயிரத்து 221 பேர் தங்கியுள்ளனர்.

மட்டக்களப்பில் 533000 பேர் பாதிப்பு

கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மாவட்டத்திலேயே அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அம்மாவட்டத்தில் ஐந்து இலட்சத்து 33 ஆயிரம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 225 முகாம்களில் ஒரு இலட்சத்து 22 ஆயிரம் பேர் தங்கியுள்ளனர். இம்மாவட்டத்தில் ஏழு பேர் மரணமடைந்துள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை 140 மில்லிமீற்றர் அளவில் மழை பெய்துள்ளது. புதன்கிழமை 113 மில்லி மீற்றர் அளவில் மழை பெய்துள்ளது.

அம்பாறையில்

அம்பாறை மாவட்டத்தில் 88 ஆயிரத்து 376 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. 7817 குடும்பங்களை சேர்ந்த 28 ஆயிரத்து 744 பேர் முகாம்களில் தங்கியுள்ளனர். திருகோணமலை மாவட்டத்தில் 8065 குடும்பங்களை சேர்ந்த 31 ஆயிரத்து 374 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பொலன்னறுவை மாவட்டத்தில் 2705 குடும்பங்களை சேர்ந்த 10882 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அம்மாவட்டத்திலும் வீடுகளுக்கு சேதம் ஏற்படவில்லை. திருகோணமலை மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களில் நிலைமை ஆரோக்கியமானதாக மாறிவிருகின்றது. மொத்தமாக இதுவரை 18 பேர் மரணமடைந்துள்ளதுடன் 49 பேர் காயமடைந்துள்ளனர்.

200 குளங்கள் அழிவடைந்தன

2 இலட்சம் ஏக்கர் வயல் நாசம் மட்டக்களப்பிலும் அம்பாறையிலும் தொடர்ந்து மழை பெய்கின்றது. இதேவேளை இந்த மாவட்டங்களில் இதுவரை 200 சிறியளவிலான குளங்கள் உடைப்பெடுத்துள்ளன. சுமார் இரண்டு இலட்சம் ஏக்கர் வயல்கள் அழிவடைந்துள்ளன. மட்டக்களப்பு அம்பாறை மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களில் பல வீதிகள் நீரில் மூழ்கியுள்ளன.

பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் பொலிஸார் இராணுவத்தினர் கடற்படையினர் மற்றும் விமானப் படையினர் பாரிய சேவைகளை வழங்கிவருகின்றனர்.

அந்த மக்களுக்கான பாதுகாப்பு மற்றும் ஏனைய தேவைகளை வழங்குவதில் அவர்கள் பணியாற்றிவருகின்றனர். இரண்டு ஹெலிகப்டர்களில் உணவுகளை அனுப்பி வருகின்றோம். படகுகளிலும் உணவு அனுப்பப்படுகின்றது.

மட்டக்களப்பில் அதிகம் பாதிப்பு

இதேவேளை மட்டக்களப்பு மாவட்டத்திலேயே நிலைமை மேசமாகவுள்ளது. அங்கு உணவு கொண்டுசெல்வதற்கும் சிக்கல்கள் காணப்படுகின்றன. பல சவால்களுக்கு மத்தியில் செயற்பட்டுவருகின்றோம்.

எனினும் அந்த மாவட்டத்துக்கும் படகுகளில் உணவுகளை அனுப்பிவருகின்றோம். அனர்த்த முகாமைத்துவ நிலையமானது அனைத்து விதமான ஒருங்கிணைக்கும் பணிகளையும் மேற்கொண்டுவருகின்றது.

அரச நிறுவனங்கள் அரசசார்பற்ற நிறுவனங்கள் மற்றும் அமைப்புக்களுக்கு இடையில் இணைப்புக்களை ஏற்படுத்திவருகின்றோம். மாவட்ட மட்டத்திலும் பல குழுக்களை அமைத்து செயற்பட்டுவருகின்றோம்.

அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் மேலதிக செயலாளர் காமின ராஜகருண கருத்து வெளியிடுகையில் கூறியதாவது அரச அதிபர்கள் ஊடாக
48 மில்லியன் ரூபா ஒதுக்கீடு

இதுவரை மட்டக்களப்பு மாவட்டத்துக்கு 25 மில்லியன் ரூபாவும் அம்பாறைக்கு 8 மில்லியன் ரூபாவும் திருகோணமலைக்கு ஐந்து மில்லியன் ரூபாவும் அனுராதபுரத்துக்கு 2.5 மில்லியன் ரூபாவும் பொலன்னறுவைக்கு 3.5 மில்லியன் ரூபாவும் கண்டிக்கு 1.3 மில்லியன் ரூபாவும் வழங்கப்பட்டுவிட்டன.

மொத்தமாக 48 மில்லியன் ரூபா வழங்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மக்கள் ஒரு தடவைக் கூட பசியுடன் இருக்காத வகையில் ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளோம். உலர் உணவு மற்றும் சமைத்த உணவு தண்ணீர் போத்தல்கள் மற்றும் தேவையான உபகரணங்கள் என பலவற்றை வழங்கிவருகின்றோம்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply